Published : 28 Jun 2016 10:16 AM
Last Updated : 28 Jun 2016 10:16 AM

கோப்பெர்ட் மெயர் 10

நோபல் பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் கணித இயற்பியலாளர் மரியா கோப்பெர்ட் மெயர் (Maria Goeppert Mayer) பிறந்த தினம் இன்று (ஜூன் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் ஒரு பகுதியாக விளங்கிய பிரஷ்யாவின் கட்டோ விஸ் நகரில் (தற்போதைய போலந்து) 1906-ல் பிறந்தார். தந்தை கோட்டின்ஜென் பல் கலைக்கழகப் பேராசிரியர். சிறு வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கிய மரியா, கணித வல்லுநராக விரும்பினார்.

* நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று கோட்டின்ஜென் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மெல்ல இயற்பியல் மீது ஆர்வம் திரும்பியது. கல்லூரியில் மேக்ஸ் பார்ன், ஜேம்ஸ் பிராங்க் உள்ளிட்ட நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர்கள் ஆசிரியர்களாக அமைந்தது இவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

* திருமணத்துக்குப் பிறகு 1930-ல் அமெரிக்காவில் குடியேறினார். மேக்ஸ் பார்ன் வழிகாட்டுதலில் கோட்பாட்டு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டார். ‘ஃபோட்டான்களின் உள்ளீர்ப்பு’ குறித்த கோட்பாடுகளை வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் ஃபோட்டான்களின் குறுக்குப் பரப்பின் அலகு, ‘ஜி.எம். அலகு’ என்று இவரது பெயரால் குறிப்பிடப்பட்டது.

* தகுதிகள் இருந்தும் பெண் என்பதால் விரிவுரையாளர் பணி மறுக்கப்பட்டது. ஆனாலும், ஆய்வு மேற்கொள்வதற்காகவே சம்பளம் வாங்காமல் பணிபுரிய முன்வந்தார். எட்வர்டு டெல்லருடன் இணைந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டார். ஜெர்மனி திரும்பியவர், மேக்ஸ் பார்னுடன் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* ஜெர்மனி உலகப் போருக்குத் தயாரானபோது நாட்டைவிட்டு வெளியேறி, அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அணு ஆயுதங்கள் செய்வதற்கான ரகசிய ஆய்வுகள் நடந்தன. அதில் முக்கியப் பங்கு வகித்தார்.

* கணவருடன் இணைந்து இயந்திரவியல் பற்றிய பாடநூலை எழுதினார். சாரா லாரன்ஸ் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அறிவியலாளர் ஹெர்ஸ்ஃபெல்ட் மற்றும் கணவரின் உதவியுடன் வேதி இயற்பியல் துறையில் ஆய்வுகளில் ஈடுபட்டு, பல கட்டுரைகளை வெளியிட்டார்.

* கரிம மூலக்கூறு நிறங்கள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். ஹெரால்டுடன் இணைந்து யுரேனிய ஐசோடோப்களைப் பிரிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் அணுக்கரு பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார். அர்கோன் தேசிய ஆய்வுக்கூடத்தில் பகுதிநேர ஆய்வாளராகவும் பணியாற்றினார்.

* எட்வர்டு டெல்லருடன் இணைந்து விண்வெளியில் சிறுவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அப்போது, அணுக்கரு கூடு அமைப்பின் மாதிரியை உருவாக்கினார். இதற்காக 1963-ல் ஜென்சன், பால் வைனர் ஆகிய இருவருடன் இணைந்து இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* மேஜிக் எண்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஜென்சனு டன் இணைந்து அணுக்கரு கூடு குறித்த நூலை எழுதினார். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராக 1960-ல் நியமிக்கப்பட்டார். பல அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார். இவரை கவுரவித்து அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.

* பெண்களுக்கான கல்வி, பணி, ஆராய்ச்சி போன்ற வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலகட்டத்திலும், விடாமுயற்சியுடன் உழைத்து, அறிவியல் உலகில் தனியிடம் பிடித்த மரியா கோப்பெர்ட் மெயர் மாரடைப்பால் 66-வது வயதில் (1972) காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x