Published : 22 Oct 2014 11:21 AM
Last Updated : 22 Oct 2014 11:21 AM

குருதி ஆட்டம் 6 - தேசம் திரும்பி, பழி முடி!

தேசம் திரும்பி, பழி முடி!

இடுப்புக் கத்தியை உருவிய அரியநாச்சி, நீண்டு தொங்கிய தன் கூந்தலை, கை நிறையக் கோதி, ஒரு முழ அளவுக்கு நுனிமுடியை அறுத்தாள். இரண்டு கைகளிலும் ஏந்தி, உஸ்தாத் அப்துற் றஹீமை ஏறிட்டுப் பார்த்தாள்.

“அண்ணேன்… இது எங்க குரு காணிக்கை!”

கைக் கூந்தலை உஸ்தாத்தின் காலடி யில் வைத்தாள்.

உதட்டோரம் சிரித்துக் கொண்ட உஸ்தாத், “அரியநாச்சி… நான் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்தவன்தான். ஆனாலும் எனது வேர்கள், ராமநாதபுரத்து சேது மண்ணின் வேர்கள். வெள்ளைக் கொடும்பாவி எரிக்க, லாவிச் சுழன்ற விடுதலை வேள்வித் தீயின் நாவுகளுக்கு, ஆயிரமாயிரம் வீர மறவர்களை அள்ளிக் கொடுத்த என் சேது பூமிக்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் நான் செய்தேன்.”

அரியநாச்சியின் உச்சந்தலையில் கை அழுத்தி, “அடிமைப்பட்ட தேசத்தி லிருந்து நாடு கடத்தப்பட்ட நீங்கள், சுதந்திர இந்தியாவுக்குள் நுழையப் போகிறீர்கள். வெள்ளையன் வெளியேறி விட்டாலும் நம் எதிரிகள் தழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். துரைசிங்கத் தோடு தேசம் திரும்பி, உன் பழி முடி. வஞ்சகன் எவனையும் மன்னிக்காதே.” ஆசீர்வதித்துவிட்டு எழுந்தார்.

அந்தியில் கூடினார்கள். பொழுது இருட்டியும் கதவு திறந்தபாடில்லை.

அரண்மனை அழைத்தவுடன், வாசலில் வந்து கூடுவதும் சொரணையற்று காத்துக் கிடப்பதும் பெரிய ஆம்பளைகளுக்கு பழகிப் போச்சு. இதுநாள் வரை, இளவட்டப் பயலுகள் எவனும் வந்ததில்லை. இன்னைக்கு எல்லா இளவட்டங்களும் கூடி வந்திருக்கான்னா… அதுக்குக் காரணம், இருளப்பசாமி கோயில் திருவிழா.

காலையில் ‘லோட்டா’தமுக்கு அடித்து கூவியதிலிருந்து, ஊரே துள்ளாட்டத்தில் இருந்தது. பதினாறு வருஷமா நின்னு போயிருந்த இருளப்பசாமி கோயில் கொடை, இந்த வருஷம் நடக்கப் போகுது. பத்து நாளைக்கு ஆட்டம் பாட்டம், எருதுகட்டு, இடைச்சியூரணி முருகேசன் நாடகம், பாவலர் ஓம் முத்துமாரி கூத்துன்னு… ஊரே களைகட்டும்!

கூடிக் கிடக்கிற விடலைப் பயல்களில் பல பேரு, ஊர்த் திருவிழாவை பார்த்த தில்லை. பெரிய ஆட்கள் சொல்லிக் கேட்டதுதான்.

இளவட்டங்களின் கூட்டத்துக் குள்தான் ‘லோட்டா’வும் இருந்தான். வயசுப்படி பார்த்தால், ‘லோட்டா’ இளவட்டமுமில்லே, பெரிய ஆளுமில்லே. ஊடு தட்டு வயசு.

காத்துக் கிடந்து பொறுமை இழந்த விடலைகள், “கதவு தெறக்குமா, தெறக்காதா?” வாய்க்குள் மொசு மொசுத்தார்கள்.

“அடலேய்! நம்ம அவசரத்துக்குத் தெறக்கவும் மூடவும் அரண்மனைக் கதவு என்ன… நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியா? அரண்மனையைப் பார்க் கணும்னா பொறுமையாத்தான் காத்துக் கிடக்கணும்” விடலைகளின் தலையில் பெரியவர்கள் தட்டி வைத்தார்கள்.

வந்து வெகுநேரமாகியும் ‘லோட்டா’ வாய் திறக்கக் காணோம். விடலைகளும் இளவட்டங்களும் ‘லோட்டா’வின் காது படவே பேசினார்கள்.

“இருளப்பசாமி… நம்ம ஊருக்கே குலசாமியா? இல்லே, அரண்மனைக்கு மட்டும்தான் குலசாமியா?”

“தெரியலே...”

“ஊருக்கு ‘முதல் கரை’ யாரு?”

“முதல் கரைன்னா…?”

“தெரியலையே…”

எல்லா விவரமும் ‘லோட்டா’வுக்குத் தெரியும். உதடு தங்காமல் வார்த்தைகள் துள்ளுது. ம்… ஹூம்ம்… இறுக்கிக் கொண்டான். வாயைத் திறந்தால் வம்பு வந்து சேருது. நேத்து வாயைத் தெறந்துட்டுத்தான் தமுக்கு அடிச்சு கேவலப்பட்டது போதாதா?

“பதினாறு வருஷமா திருவிழா ஏன் நின்னுச்சு… யாரு காரணம்?”

“தெரியலையே…”

“ ‘லோட்டா’வுக்குத் தெரியுமே!”

இதுக்கும் மேலே ‘லோட்டா’வுக்குப் பொறுக் கலே. இளவட்டங்களையும் விடலைகளையும் சைகைக் காட்டி, கூட்டத்திலிருந்து ஒதுக்கிக் கொண்டு போனான். இருட்டுக்குள் மெதுவாகப் பேசினான்.

“அடேய் கீரை மண்டைகளா! ஊரு விவரம் தெரிஞ்ச என்னை மாதிரி ஒரு ஆளைப் பக்கத்தில வெச்சிக்கிட்டு, கேக்குற கேள்விக்கெல்லாம் ‘தெரியலே… தெரியலே’ன்னு பதில் சொன்னா எப்பிடிடா?”

தோள்ப்பட்டையை சிலுப்பிக் கொண்டு, பெரிய மனுசத் தோரணையில் பேசினான் ‘லோட்டா’.

“ ‘லோட்டா’ வாயைத் தொறந்துட் டான்டா!” இளவட்டம் ஒருவன் இடையில் செருகியதை ‘லோட்டா’ கவனிக்கலே.

‘லோட்டா’ தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படி வாய்க்குள் பேசினான். பெரியவர் நல்லாண்டி, அங்கிருந்தே காது கொடுத்தார். ஒண்ணும் கேட்கலே.

“………… ………. ……..”

“அப்போ… அரண்மனை?”

“……… …….. …….”

“இப்போ என்ன வந்துச்சாம்?”

“ம்… ம்… காட்டுக் கோடாங்கிச் சத்தம் அரண்மனை அஸ்திவாரத்தையே ஆட்டுதுலே?”

“ஆக, அரண்மனை நெனைச்சாத் தான்… திருவிழா. இல்லேன்னா கிடையாதுன்னு சொல்லு!”

பெரியவர் நல்லாண்டி கத்தினார்.

“அரண்மனை வெளியே வந்துட்டாரு… எல்லாரும் வாங்கடா.”

ஆட்டத்தைக் கலைத்து விட்டு, எல்லோரும் வாச லுக்கு ஓடினார்கள்.

சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து, போர்ட் கில்லாங் வழியாக, பினாங்கு தீவுக்கு வந்து நின்ற கப்பலில் அமர்ந்திருந்தார்கள். கப்பலின் மையப் பகுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

ஊமையன் துரைசிங்கத்தை அறைக் குள் உட்கார வைக்க பெரும்பாடுபட்டாள் அரியநாச்சி. கயிறு போட்டுக் கட்டி வைக்காத குறைதான். கப்பலின் மேல் தளத்துக்கு ஓடுவதிலேயே குறியாய் இருந்தான். பினாங்கு தீவை விட்டு, மேற்கு நோக்கி கப்பல் கிளம்பியது.

அரியநாச்சியின் கைப்பிடியை முறித்துக் கொண்டு, இரும்பு ஏணிப் படி வழியே ஓட்டமாய் ஏறி, மேல் தளத்துக்கு வந்தான்.

கப்பல் ஓரக் கைப்பிடியை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு, அருகில் நிற்கும் இன்னொரு வெள்ளையனுடன் கடல் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட்.

ஊமையன் துரைசிங்கத்தின் கண்களை, தனுஷ்கோடி தீவுக் குறுமணல் உறுத்தியது.

- குருதி பெருகும்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x