Published : 01 Oct 2014 10:29 AM
Last Updated : 01 Oct 2014 10:29 AM

குருதி ஆட்டம் 3 - பெருங்குடி அரண்மனை

பெருங்குடி அரண்மனை

விடியவும் உடையப்பன் வீட்டு வாசலில் ஊர் கூடிக் கிடந்தது.

பொம்பளைக யாருமில்லை. எல்லாம் ஆம்பளைகதான். சன்னம் சன்னமாய்க் கூடினார்கள்.

வீட்டுத் தோட்டத்துச் சுற்றுச் சுவர் கதவு பூட்டி இருந்தது. தோட்டம் தாண்டி வீடு. வீட்டுத் தலைவாசலைத் திறக்கிற அறிகுறி தெரியலே. தோட்டத்துக் கதவைத் தட்ட முடியாது. சத்தம் போட்டுக் கூப்பிடவும் முடியாது. திறக்கிற வரை காத்துக் கிடக்க வேண்டியது ஊருக்காரன் தலையெழுத்து.

பெருங்குடி கிராமத்துக்கு இந்த வீடுதான் அரண்மனை. இந்த அரண்மனைக்குள் தும்மல் சத்தம் கேட்டாலும், ‘அரண்மனைக்கு என்னாச்சு? நேத்து ராத்திரி ‘நச்சு நச்சுன்னு நாலு தும்மல் சத்தம் கேட்டுச்சே!’ எனக் காலையிலே ஊரே வந்து நிக்கணும். அப்படி வராதவன்… ஊருக்குள்ளே குடியிருக்க முடியாது. ஊரே…உடையப்பன் ஊரு. இந்த ஊரு மட்டுமில்லே ஆப்ப நாட்டிலே பாதி, உடையப்பனுக்குச் சொந்தம்.

வாய்க்கும் காதுக்குமாகக் குசுகுசுத் தார்கள். கூடிக்கிடந்த இளவட்டங்களில், ‘லோட்டா’ வாய் ஓயாமல் பேசுபவன். ‘லொடலொடன்னுபேசுறதுனாலே, அவனுக்குப் பட்டப் பெயர் ‘லோட்டா’. அடுத்தவன் வாயை ‘கிண்டி’விடுறதிலே கெட்டிக்காரன்.

“நேத்து ராத்திரி அரண்மனை அஸ்திவாரமே ஆடுச்சே!”

“காட்டுக்குள்ளே கோடாங்கிச் சத்தம் கேக்குறபோதெல்லாம் அரண்மனை ஆடத்தான் செய்யுது.”

“தவசியாண்டி கோடாங்கிக்கும் அரண்மனைக்கும் என்ன சம்பந்தம்?”

“அதுதானே தெரியலே!”

பெரியவர் நல்லாண்டி ‘லோட்டா’வை ஏற இறங்கப் பார்த்தார்.

“உடையப்பன் உள்ளேதான் இருக்காரா?” கோட்டைச் சுவர் தாண்டி ‘லோட்டா’ கால்விரல் நுனியில் எக்கிப் பார்த்தான்.

நல்லாண்டிக்குப் பொத்துக் கொண்டு வந்தது. “ஏன்டா… விலாவிலே வெடிச்சுப் பெறந்த பயலே! வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியாடா? ‘அரண்மனை’ பெயரைச் சொல்றியே, ஒனக்கு ஈரல்லே பித்தா? எலும்பிலே பித்தாடா? அவன்ங்க காதுக்குப் போச்சுன்னா உன்னைக் கொன்னு, தென்னை மரத்துக்கு உரமா வெச்சிறப்போறான்ங்க.”

‘உடையப்பன்’ என்கிற பெயரை ஊரு உச்சரிச்சு… வெகுகாலமாகிப் போச்சு. இப்போதெல்லாம் உடையப்பனின் பெயரே ‘அரண்மனை’தான்.

என்னச் சொன்னாலும் ‘லோட்டா’ப் பயலுக்கு வாய் நிக்கலே.

“உள்ளே கூட்டு வண்டியைக் காணோமே!”

“ம்ம்… ராத்திரி வந்த கூத்தியாளை எறக்கிவிட கூட்டு வண்டி சவாரி போயிருக்கும்.”

தெற்குப்பட்டிக்காரி ஊரார் கண்களில் படாமல், ராத்திரியோடு ராத்திரியாய்க் கூட்டு வண்டி திரை மறைப்பில் வெளியேறிப் போயிருந்தாள்.

மஞ்சள் வெயில் ஏறியது.

‘லோட்டா’ கண்களை இறுக மூடி ஆயாசமாய் ‘அப்பப்பப்பா!’ என இழுத்துப் பெருமூச்சுவிட்டான்.

பக்கத்தில் நின்ற இளவட்டம், ‘லோட்டா’வுக்கு மட்டும் கேட்கச் சொன்னான். “ஏன்டா லோட்டா…ஏறுவெயிலு கண்ணைக் கட்டுதாக்கும். இந்நேரம் ஊரணிக்கரையிலே, செவல்பட்டி கள்ளுப் பானை வந்து எறங்கிருக்கும். போ…போயி, ரெண்டு செம்பு கள்ளைக் குடி. கண்ணு பளபளன்னு நல்லாத் தெரியும்.”

அரண்மனை தலைவாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றிருந்த எல்லோரும், கோட்டைச் சுவரில் கைபோட்டு எம்பி உள்பக்கம் பார்த்தார்கள்.

கதவைத் திறந்து வெளியே வந்த கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், அங்கிருந்தே கோட்டைச் சுவரைப் பார்த்துக் கூவினார். “அரண்மனைக்கு ஒண்ணுமில்லே. நல்லாத்தான் இருக்காரு. எல்லாரும் போகலாம். அந்த லோட்டாப் பயலை மட்டும் உள்ளே வரச் சொல்லு.”

எல்லோரும் கலைந்தார்கள். ‘லோட்டா’ திருகித் திருகி முழித்தான். கோட்டைக் கதவு திறந்தது.

காடு

குலுங்கக் கட்டி புரண்டு எழுந்தவனின் உடம்பு முழுக்கக் காயங் கள். கன்னம், மார்பு, முதுகு நிறைய நகக் கீறல்கள். உள்ளங்கைகள் நனையப் பச்ச ரத்தம். உதறி எழுந்ததும் உடம்பை ஒரு உலுப்பு உலுப்பினான். முகம் மறைத்து முன் விழுந்த தலைமுடியை, ரத்தக் கைகோதி விலக்கிவிட்டான். தகிக்கும் முகத்தில், அடங்காத மிருக லட்சணம். உடம்பில் ஒட்டியிருந்த மலேசியக் காட்டு மண்ணைத் தட்டிவிட்டான். வலது கைவாக்கு புதர்க் காட்டை ஓரக் கண்ணளந்தான். வாய் பிளந்து செத்து கிடந்தது சிறுத்தை.

சிறு பாறையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த அரியநாச்சியின் கண்கள் சிரித்தன. அங்கிருந்தே கண் அசைத்தாள்.

“துரைசிங்கம்… வா!”

செவ்வந்தி,

குடிசைக்குள்ளிருந்து அழைத்தாள்.

“அப்பா…”

வெளி மண் திண்ணையில் அமர்ந்திருந்தான் தவசியாண்டி. தொடையை உரசிக் கொண்டு கள்ளு முட்டி. செவல்பட்டி பனங்கள்ளு.

தலை தட்டும் குடிசை வாசலில் குனிந்து வெளியே வந்தவள், “சாப்பிட வாங்கப்பா…” என அழைத்தாள்.

கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தவனின் மீசை நனையக் கள்ளு நுரை. இடது கையால் துடைத்துக் கொண்டான். “நீ போயி சாப்பிடு தாயீ…”

“நீங்கச் சாப்பிட்டு ரெண்டுநாளாச்சு. வாங்கப்பா, ஒரு வாய் சாப்பிடுங்க.”

அரை குறையாய்த் தலை திருப்பி மகளின் காலடியைப் பார்த்தவன், “ஒங்கப்பன் ஒடம்புலே உசுரு இருக்குல்லே! அது போதும். நீ போத்தா…” மறுபடியும் கவிழ்ந்தான். கண்ணீர் ஓடியது. மகளை, கண்கொண்டு நேருக்கு நேர் பார்த்து ரெம்பக் காலமாச்சு. பார்த்தால் பாதி உசுரு போயிரும்.

தாயை இழந்த ரெண்டு வயசு கை குழந்தை செவ்வந்தியைத் தோளில் தூக்கிக் கொண்டு காட்டுக்குள் வந்து பதினைந்து வருஷமாச்சு. அப்பன் முகத்தை மகள் பார்க்க… மகள் முகத்தை அப்பன் பார்க்க… வேத்து முகம் பார்க்காமல் காலம் ஓடுது. செவ்வந்தி புஷ்பவதி ஆன அன்னைக்கு, கன்னி தீட்டு கழித்து, அத்தம்குத்தம் சொல்ல ஒரு பொம்பளைத் துணைக் கிடையாது. வாயிலே துண்டைப் பொத்திக்கிட்டு திண்ணையிலே உக்காந்து தவசியாண்டி அழுகிறான். குடிசை மூலையிலே குத்துக்கால் வெச்சு செவ்வந்தி அழுகிறாள். இப்பிடி ஒரு நாதியத்த பொழப்புக்கு என்ன வைராக்கியமோ?

“என் குலத் தெய்வத்தைக் கொன்ன வன்ங்க உயிரோட இருக்கிற வரை, நான் சாக மாட்டேன். நீ போ தாயீ...”

இரண்டு கை நிறையக் கள்ளு முட்டியைத் தூக்கினான்.

- குருதி பெருகும்….

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள - Irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x