Published : 04 Mar 2015 10:07 AM
Last Updated : 04 Mar 2015 10:07 AM

கர்ரெட் மார்கன் 10

ஆப்பிரிக்க அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் (Garrett Augustus Morgan) பிறந்த தினம் இன்று (மார்ச் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் (1877) பிறந்தார். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த தந்தை, கொத்தடிமையாக இருந்தவர். பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களைப் போல மார்கனும் சிறு வயதில் படிப்பைக் கைவிட்டார். 14 வயதில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டிக்குச் சென்றார். பல இடங்களில் கூலி வேலை செய்தார். அந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்து கல்வி கற்றார்

 கிளீவ்லேண்ட் நகரில் 1895-ல் ஜவுளி உற்பத்தியாளரிடம் தையல் இயந்திரங்களைப் பழுது பார்ப்பவராக வேலை பார்த்தார். இயந்திரங்களின் வடிவமைப்பு, அவை இயங்கும் முறை ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றைப் பிரித்து, பொருத்தி, மேம்படுத்தினார்.

 தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கான வழியைக் கண்டுபிடித்த பிறகு, பிரபலமானார். 1907-ல் தையல் இயந்திரம், ஷூ பழுது பார்க்கும் கடையைத் தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார்.

 ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக பெரு முயற்சி எடுத்து 1908-ல் ‘கிளீவ்லேண்ட் அசோசியேஷன் ஃபார் கலர்டு மென்’ என்ற அமைப்பை தொடங்கச் செய்தார். 1909-ல் மனைவியுடன் சேர்ந்து ‘கட் ரேட் லேடீஸ் கிளாத்திங் ஸ்டோர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

 1914-ல் புகை, நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். ‘நேஷனல் சேஃப்டி டிவைஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

 ஜி.ஏ.மார்கன் ஹேர் ரிஃபைனிங் நிறுவனத்தை தொடங்கினார். சுருள் கூந்தலை நீட்டச் செய்வதற்கான கிரீம், சீப்பு, ஹேர் டை உட்பட பலவற்றைக் கண்டுபிடித்தார். இந்த நிறுவனமும் லாபகரமாக இயங்கியது.

 கிளீவ்லேண்டில் மோட்டார் வாகனம் வைத்திருந்த முதல் ஆப்பிரிக்க - அமெரிக்கர் இவர்தான்.

 எளிமையான, திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதைப் பயன்படுத்தி விபத்துகள் இல்லாமல் மிகச் சுலபமாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முடிந்தது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.

 தொடர்ந்து, பலவற்றைக் கண்டுபிடித்தார். கறுப்பின மக்களுக்கு பத்திரிகை, கிளப், பள்ளி, கல்லூரிகள் தொடங்க பெரு முயற்சி மேற்கொண்டார். ‘100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ்’ என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

 பள்ளிப் படிப்பையே முறையாக தொடர முடியாத இவர், தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து மனித இனத்துக்கு முக்கியப் பங்காற்றினார். பல சாதனைகள் புரிந்து பேரும் புகழும் பெற்ற கர்ரெட் மார்கன் 86 வயதில் (1963) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x