Last Updated : 25 Apr, 2015 11:06 AM

 

Published : 25 Apr 2015 11:06 AM
Last Updated : 25 Apr 2015 11:06 AM

ஒரு நிமிடக் கதை: காரணம்

“என்ன சார், இன்னிக்கு இட்லி கல் மாதிரி இருந்துச்சு?” என்ற வாடிக்கையாளரின் குரல் ஹோட்டல் கல்லாவில் உட்காந்திருந்த மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்தது.

மூர்த்தி அந்த வட்டாரத்தில் பிரபலமான ஹோட் டல் நடத்தி வருபவர். மூன்று வேளையும் அவர் ஹோட்டலில் கூட்டம் இருக்கும். அவரது சமீபத்திய கவலை, அவர் ஹோட்டலில் கூட்டம் குறைந்ததுதான். காரணம், அவருக்கு போட்டியாக மூன்றாவது தெருவில் முளைத்துள்ள புதிய ஹோட்டல்தான்.

“யோவ், எல்லாம் நல்ல மாவுதான்யா !”- ஏற்கெனவே எரிச்சலில் இருந்த மூர்த்தி எரிந்து விழுந்தார்.

அடுத்து வந்த நபர் “சாம்பார்...” என்று வாயை திறக்கும் முன், “என்னய்யா.. சாம்பார் கெட்டுப் போச்சா? “என்று எரிந்து விழுந்தார். அதற்கு வாடிக்கையாளர், “இல்லீங்க. சாம்பார் வடை பார்சல் இருக்கானு கேக்க வந்தேன்” என்றவாறு நழுவினார்.

எப்படியாவது அந்த புதிய ஹோட்டலுக்கு சென்று, அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிட மூர்த்தி முடிவெடுத்தார். அன்றிரவு அந்த ஹோட்ட லுக்கு சென்றார். இரவு 10 மணியிலும் நல்ல கூட்டம். அரை இருட்டான ஒரு இடத்தில் அமர்ந்து கொண் டார். அவரை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் சர்வர், “சார், என்ன சாப்பிடு றீங்க” என்று கேட்டுக் கொண்டு, மூர்த்தி கேட்ட உணவை கொண்டு வைத்தார்.

‘உணவின் சுவையும் அவ்வளவு பிரமாதம் இல்லை, இடமும் தனது ஹோட் டல் போலத்தான் இருக்கிறது. பிறகு ஏன் இங்கு மட் டும் இவ்வளவு கூட்டம்?’ என்று நினைத்துக் கொண்டார்.

“சார், சாப்பாடு எப்படி , வேறு எதுவும் வேணுமா” என்றபடி ஒரு இளைஞர் வந்து மூர்த்தியிடம் கேட்டுவிட்டு, “தம்பி, சாருக்கு சட்னி ஊத்து” என்றபடி பக்கத்து மேஜைக்கு சென்றார்.

சாம்பார் கொண்டு வந்த சர்வரிடம் மூர்த்தி, “யாருப்பா அவர்?” என்றார்.

“அவர்தான் சார், எங்க முதலாளி. பேருக்குத் தான் முதலாளி. கொஞ்சம் கூட பந்தாவே இல்லா மல், இறங்கி வந்து வேலை பார்ப்பார். வர்ற வாடிக்கையாளர்கிட்ட போய் குறை நிறை கேட்டு தெரிஞ்சுப்பார். குறை எது சொன்னாலும் ஏத்துப்பார்” என்றார் அந்த சர்வர்.

என்னதான் முதலாளியாக இருந்தாலும், வாடிக்கையாளரிடம் சென்று அவர்களின் நிறை, குறைகளை அறிந்து, அவர்களிடம் இன்முகத்துடன் பேசுவதுதான், வாடிக்கையாளர்களின் முதல் எதிர்பார்ப்பு என்று புரிந்து கொண்டார் மூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x