Published : 06 Sep 2014 01:49 PM
Last Updated : 06 Sep 2014 01:49 PM

ஒரு நிமிடக் கதை: அம்மா

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.

“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?... வீடு மூடியே இருந்துச்சே?... சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?” செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.

“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!... மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம். உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க. அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம். ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.

“என்ன பேசறீங்க நீங்க?... ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும். தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.

அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x