Published : 29 Apr 2016 10:51 AM
Last Updated : 29 Apr 2016 10:51 AM

எம்ஜிஆர் 100 | 54 - ரத்தம் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள்!

M.G.R. தன் ரசிகர்களை எந்த அளவுக்கு நேசித்தாரோ, அதேபோல அவர் மீதும் ரசிகர்கள் உயிரையே வைத்திருந்தனர். உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொடுத்து அதன்மூலம் கிடைத்த பணத்தில் படம் பார்த்த வெறி பிடித்த ரசிகர்களும், உயிரைப் பற்றி கவலைப்படாமல் அவரை பார்க்கத் துடித்த, அளவுக்கு மீறிய பாசக்கார ரசிகர்களும் உண்டு.

எம்.ஜி.ஆர். இருவேடங்களில் நடித்த ‘நாளை நமதே’ படத்தின் சில காட்சி கள் பெங்களூர் விமான நிலையத் துக்கு உள்ளேயும் வெளியேயும் படமாக் கப்பட்டன. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக ஏராளமான கூட்டம். எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பவற்றில் எம்.ஜி.ஆர். ஒரு கண் வைத்திருப்பார். திடீரென, கேமரா இருந்த இடத்தைத் தாண்டி ஓடிய எம்.ஜி.ஆர். மேலே பார்த்தபடி, ‘‘இறங்கு… இறங்கு’’ என்று சத்தம் போட்டார். எல்லோரும் மேலே பார்த்தால், அங்கே ஒரு ரசிகர் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கொண்டிருந்தார்.

உதவியாளர்களை அனுப்பி அந்த ரசிகரை கீழே இறக்கி அழைத்துவரச் சொன்ன எம்.ஜி.ஆர்., அவரிடம் விசாரித் தார். குதிரை வண்டி ஓட்டும் தொழில் செய்பவர் அவர். கூட்டம் சூழ்ந்திருந்த தால் அதைத் தாண்டி வரமுடியவில்லை. எம்.ஜி.ஆரை பார்க்க வேண் டும் என்ற ஆவலில் ஆபத்தை உணரா மல் மின்சாரக் கம்பத்தின் மீது ஏறியுள்ளார்.

அந்த ரசிகரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., படப் பிடிப்பு நடக்கும் இடத் திலேயே ஒரு நாற் காலி போடச் சொல்லி அவரை உட்காரச் சொன் னார். படப் பிடிப்பு குழு வினருக்கு அளிக்கப்பட்ட மதிய உணவை அவருக்கும் கொடுக்கச் சொன்னார். அன்று முழுவ தும் நாற்காலியில் அமர்ந்தபடி படப்பிடிப்பைக் கண்டு ரசித்தார் அந்த ரசிகர். படப்பிடிப்பு முடிந்ததும் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., 500 ரூபாயையும் அன்பளிப் பாகக் கொடுத்தார். நடப்பது கனவா? நனவா? என்று புரியாத நிலையில் எம்.ஜி.ஆரை வணங்கி விடைபெற்றார் அந்த ரசிகர். படப்பிடிப்பை காண வந்த ஏராளமான ரசிகர்களோடும் எம்.ஜி.ஆர். புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எப்போது திரையிடப்பட்டாலும் அரங்கு நிறையும். அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்காக ஏழை ரசிகர்கள் தங்கள் ரத்தத்தை ஆஸ்பத்திரியில் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வாங்கி படம் பார்ப்பதாகவும் அடிக்கடி ரத்தம் கொடுப்பது அவர்களுக்கே ஆபத்தாகி விடும் என்றும் போடிநாயக்கனூரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியத் துக்கு கடிதம் எழுதினார். இதைத் தடுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்லி ஏதாவது செய்யுமாறும் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பி.ஆர்.சுப்பிரமணியம் மூலம் இதை அறிந்த எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப் பட்டார். போடிநாயக்கனூரில் ரசிகர் மன்ற கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. சென்னையில் இருந்து இதற் காகவே போடிநாயக்கனூருக்கு எம்.ஜி.ஆர். சென்றார். ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் என் படத்தை பார்ப்பது மகிழ்ச்சி. ஆனாலும் உங்களை உடன் பிறப்புகளாக நினைக்கும் நான், உங்களுக்கு பாதிப்பு ஏற்பட விடமாட்டேன். என் படங்களை பார்ப்பதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது’’ என்றார்.

கூட்டத்தில் இருந்த பலர், ‘‘உங் கள் படத்தை தினமும் பார்க்கத் தோன்றுகிறது. ஆனால், எங்களிடம் பணம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறோம்’’ என்றனர்

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘பணம் இருக் கும்போது பாருங்கள். என்னை நேசிப் பது உண்மையாக இருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதீர்கள். பணம் தேவை என்றால் எனக்கு கடிதம் எழு துங்கள். நான் மணியார்டரில் பணம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றார். கூட்டம் நடந்த மண்டபமே இடிந்துவிழும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷம் செய்தனர்.

பின்னர், ஏராளமான ரசிகர்கள் பணம் தேவை என்று எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதி, அவர்களுக்கெல்லாம் உதவியாளர்களை விட்டு மணியார்டர் மூலம் எம்.ஜி.ஆர் பணம் அனுப்பச் சொன்னார்.

ஒருமுறை ஒரு பத்திரிகையில் ரசிகர் களின் கேள்விக்கு எம்.ஜி.ஆர். பதிலளித் தார். அதில் ஒரு ரசிகர், ‘‘நான் மீண்டும் மீண்டும் உங்கள் படங்களைப் பார்க் கிறேன். எனக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டிருந்தார். ‘மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு முடியமோ அவ்வளவு முறை பாருங்கள்’ என்று எம்.ஜி.ஆர். பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விக்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘உங்கள் வருமானம் எவ்வளவு?’’ என்று நறுக்கென மூன்றே வார்த்தைகளில் பொருள் பொதிந்த கேள்வியையே பதிலாக அளித்தார்.

தனது படங்களைப் பார்ப்பதற்காக ரசிகர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்வதையோ, உடலை வருத்திக் கொள்வதையோ எம்.ஜி.ஆர். விரும்பிய தில்லை. தங்களுக்கு பிடித்தமான நடிகர் என்பதைத் தாண்டி, தங்கள் மீது எம்.ஜி.ஆர். காட்டிய இந்த அக்கறையும் அன்பும்தான், அவர் மீது ரசிகர்களுக்கு மேலும் பற்றை ஏற்படுத்தின.

நடிகரும் பத்திரிகையாளருமான சோ ஒருமுறை கூறினார்… ‘‘எல்லா நடிகர் களுக்கும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு!’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்



எம்.ஜி.ஆர். புகழேணி யில் ஏறிக் கொண்டிருந்த போது, 1950-ம் ஆண்டி லேயே மதுரையில் முதன்முதலாக எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங் கப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டன. 1960களில் இவற்றை ஆர்.எம்.வீரப்பன் ஒருங்கிணைத்து ‘எம்.ஜி.ஆர்.ரசிகர் மன்றங்கள்’ என்று பெயர் சூட்டினார். பிறகு, திமுக தலைமையின் அங்கீ காரத்தோடு, ‘அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்’ உருவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x