Last Updated : 20 Jan, 2017 10:40 AM

 

Published : 20 Jan 2017 10:40 AM
Last Updated : 20 Jan 2017 10:40 AM

என்னருமை தோழி..! - 16: யுத்த நிதிக்கு கலை நிகழ்ச்சி!

1968 உங்கள் திரைப்பட வாழ்வில் ஒரு பொன்னான வருடம். மொத்தம் வெளியிடப்பட்ட 46 படங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் கதாநாயகியாக நடித்தவர் நீங்களே! அந்த வருடம் நீங்கள் நடித்தவை மொத்தம் 15 படங்கள். அவற்றில் எம்.ஜி.ஆருடன் எட்டு படங்களிலும், ரவிச்சந்திரனுடன் மூன்று படங்களிலும் ... சிவாஜி கணேசன் மற்றும் ஜெய்சங்கருடன் தலா இரண்டு படங்களிலும் நடித்திருந்தீர்கள்.

வருடத் துவக்கத்தில் ‘ரகசிய போலீஸ் 115’ படத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த ‘தேர்த்திருவிழா’ வெளியானது. அந்தப் படம் சுமாராகத்தான் ஓடியது. ‘எம்.ஜி.ஆர். உங்களுடன் தொடர்ந்து நடிப்பாரா’ என்றே வெளியில் பேச்சு எழத் தொடங்கிவிட்டது.

‘கண்ணன் என் காதலன்’ படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் உங்களுக்கு சமமாக முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் வாணிஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ஒருநாள், ‘கண்ணன் என் காதலன்’ பட இயக்குனர் ப. நீலகண்டன் உங்களை சந்தித்தார். ‘‘அம்மு... பட கதையில கொஞ்சம் மாற்றம். நீங்க இறந்து போயிடறீங்க...’’ என்றார்.

கதைப்படி, எம்.ஜி.ஆர். காதலிப்பது வாணிஸ்ரீயைத்தான் என்றாலும், நீங்கள் விரும்பும் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து போல நீங்கள் மனைவி ஆகிவிடுவீர்கள். ஆனால், இறுதியில் நீங்கள் இறந்து, வாணிஸ்ரீயுடன் எம்.ஜி.ஆர். இணைகிறார். இதுதான் கதையின் போக்கு என்றால்..? ‘நாடோடி மன்னன்’ படத்தில் கதையின் நாயகி பானுமதி இறந்து, சரோஜா தேவியுடன் எம்.ஜி.ஆர். இணைவாரே?... ‘அரச கட்டளை’யில், சரோஜா தேவி பாத்திரம் இறந்து, எம்.ஜி.ஆர். தங்களுடன் சேருவாரே?... அதே மாதிரி, ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் நீங்கள் இறந்து வாணிஸ்ரீயுடன் எம்.ஜி.ஆர். இணைகிறார் என்றால்...?

அடுத்து உருவாகும் எம்.ஜி.ஆரின் படங்களில் கதாநாயகி வாணிஸ்ரீயா? யோசனை யிலும் குழப்பத்திலும் ஆழ்ந்தாலும், ‘‘சரி!’’ என்று சொல்லி அந்த முடிவுக்கு இயக்குநரிடம் ஒப்புக்கொண்டீர்கள். அன்று இரவு இதுபற்றி உங்கள் தாய் சந்தியாவிடம் கூறினீர்கள். ‘‘அம்மா! நான் யாருடன் வேண்டுமானாலும் இனி நடிக்கலாம். நீங்கள் வெகு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் சாருடன் நடிக்கத் தயார்’’ என்றீர்கள்.

சந்தியாவும் மறுநாளே சிவாஜி கணேசனை சந்தித்து தன் மகள் அவருக்கு ஜோடியாக நடிக்கத் தயார் என்றதுமே, சிவாஜி மகிழ்ந்தார். ‘‘சந்தியாம்மா..! 1965-ல் நட்சத்திர இரவு நடத்தினோமே... அப்போது ‘சித்ராலயா’ கோபு எழுதி நாம் நடித்த ‘கலாட்டா கல்யாணம்’ நாடகம் நினைவு இருக்கா..?’’ என்று சிவாஜி கேட்க, சந்தியாவும் தலையசைத்து ஆமோதித்தார். அந்த நாடகத்தில் சந்தியாவும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க உள்ளதாக சிவாஜி கணேசன் சொன்னார். சந்தியா உங்களிடம் இதைச் சொன்னபோது, நீங்களும் மகிழ்ச்சியுடன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டீர்கள். காரணம், அந்த நாடகத்தை ஒட்டி நிகழ்ந்த சிலிர்ப்பான ஒரு நிகழ்வு....!

என்னருமை தோழி...!

1965-ல் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் யுத்தம் மூண்டபோது, சிவாஜி கணேசன் தலைமையில் திரைப்படத்துறையினர் கூடி, தமிழக நகரங்களில் நட்சத்திர இரவுகளை நடத்தி, அந்த வசூலை ராணுவ வீரர்களுக்கு நிதியாகத் தர முடிவு செய்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனின் மெல்லிசை நிகழ்ச்சியோடு, முக்கியமான நடிகர், நடிகைகளை வைத்து ஒரு நாடகமும் அரங்கேற்றினால், நல்ல கூட்டம் வரும் என்று சிவாஜி கணேசன் நினைத்தார். உடனே, எனது தந்தை ‘சித்ராலயா’ கோபுவை அழைத்து, புதிதாக ஒரு கதை எழுதித் தரும்படி கேட்டார். இரண்டே நாட்களில் கோபு ஒரு நாடகத்தை தயார் செய்தார். அதுதான், ‘கலாட்டா கல்யாணம்’!

நட்சத்திர இரவின் மூலம் நிதி குவிந்தது. அப்படிக் குவிந்த நிதியினை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் அளிப்பது என்றும், ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கலைக்குழுவினர் எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்கள் முன்பாக நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை மகிழ்விக்கவும் முடிவு செய்யப்பட்டது. கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

1965 செப்டம்பர் 25. காமராஜர் வீட்டுக்குச் சென்று ஆசி வாங்கிய பின் இந்தக் குழுவினர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி போய்ச் சேர்ந்தனர். பஞ்சாபின் அலவாரா பகுதியில் கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள். பாகிஸ்

தான் எல்லையோரத்தில் இந்த பகுதி இருந்தது. சிவாஜி கணேசனும், நடிகர் கோபால கிருஷ்ணனும் வீரபாண்டிய கட்டபொம்மன் - ஜாக்சன் துரையாக நடித்து காட்டி னார்கள். பத்மினி மீரா பஜனுக்கு நடனம் ஆடினார்.

நீங்கள், ‘வெண்ணிற ஆடை’ படத்தில் இடம்பெற்ற ‘என்ன என்ன வார்த்தைகளோ...’ பாடலுக்கு நடனம் ஆடினீர்கள். இயக்குநர் ஸ்ரீதர் எழுதிய ‘நவீன சகுந்தலை’ நாடகத்தை ஜெமினி, சாவித்ரி, தேவிகா நடித்துக் காட்டினார்கள். ‘சித்ராலயா’ கோபுவின் ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தில் அனைவருமே நடித்தனர். பி. சுசீலா பக்திப் பாடல்களைப் பாடினார். ‘நவராத்திரி’ படத்தில் வரும் தெருக்கூத்து காட்சியில் மேடையில் சிவாஜி கணேசன்-சாவித்ரி நடித்தனர். ராஜசுலோச்சனா நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண் வேடத்தில் நடனம் ஆடினார்.

இந்தக் கலை நிகழ்ச்சிகள், உதாம்பூர், ஜலந்தர் போன்ற நகரங்களிலும் நடந்தன. கடைசியாக டெல்லி திரும்பியதும் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்ற குழுவினர், அவருக்கு முன்பாகவும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அப்போது தாங்கள் கூறிய அந்த சம்பவம் என்னை திகைப்பில் ஆழ்த்தி விட்டது...!

ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் நின்றிருந்தனர். ஜனாதிபதிக்கு முன்பாக பி.சுசீலா, ‘கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல...’ பாடலை, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார். நீங்கள் அந்த பாடலுக்கு நடனம் ஆடினீர்கள். அதன் பிறகு பத்மினி பாம்பு நடனம் ஒன்றை ஆடினார்.

பின்னர், நடிகர் சந்திரபாபு பாட்டுப் பாட வந்தார். ‘பிறக்கும் போதும் அழுகின்றான்... இறக்கும் போதும் அழுகின்றான்...’’ என்ற பாடலை சந்திரபாபு பாட, ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் உருகிப் போனார். ‘அற்புதம்’என்று தனது கையைத் தட்டி அவர் சந்திரபாபுவை பாராட்டினார்!

அப்போது... சந்திரபாபு செய்த துணிகரமான அந்தச் செயல் பற்றி திகைப்பும்,சிரிப்புமாக நீங்கள் என்னிடம் வர்ணித்தது நன்றாக நினைவிருக்கிறது தோழி... சந்திரபாபுவின் அந்தச் செயல்....!

- தொடர்வேன். | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x