Last Updated : 23 Apr, 2015 02:17 PM

 

Published : 23 Apr 2015 02:17 PM
Last Updated : 23 Apr 2015 02:17 PM

ஆவலை வீசுவோம் 1 - இணையத் தேடல் - ஓர் அறிமுகம்

கூகுள் மட்டும்தான் தேடியந்திரமா?

*

தேடியந்திரம் என்றால் என்ன? இணையத்தை அறிந்தவர்கள் எல்லோரும் தேடியந்திரத்தை அறிந்திருப்பார்கள். இப்போது புதிதாக இணையத்துக்கு வருபவர்களில் பலர் தேடியந்திரம் வாயிலாகவே இணையத்தை அறிமுகம் செய்து கொள்ளும் அளவுக்கு சர்ச் எஞ்சின் எனப்படும் தேடியந்திரங்களின் செல்வாக்கு இருக்கிறது.

தேடியந்திரம் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது கூகுள்தான். அதிகம் அறியப்பட்ட தேடியந்திரமாகவும், அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரமாகவும் கூகுள்தான் இருக்கிறது.

இணையத்தில் தகவல் தேவையா? கூகுளில் தேடு! இணையத்தை பயன்படுத்த வேண்டுமா? கூகுளில் தேடு! கூகுள் பற்றியே ஒரு சந்தேகமா? அதையும் கூகுளில் தேடு!

இப்படி, எல்லாவற்றுக்கும் கூகுளை நாடுவது இயல்பாக இருக்கிறது. கூகுளும் பெரும்பாலும் ஏமாற்றுவதில்லை. நாடி வருபவர் தேடும் தகவலை அது கச்சிதமாகவே முன்வைக்கிறது.

ஆனால் தேடியந்திரம் என்றால் கூகுள் மட்டும் தானா? கூகுள் தவிர இருக்கும் தேடியந்திரங்களை எத்தனை பேர் அறிந்திருக்கின்றனர்.

கூகுள் தவிர யாஹு, பிங் மற்றும் ஆஸ்க் போன்ற தேடியந்திரங்கள் இருப்பதை அறிந்தவர்கள்கூட கூகுளையே பயன்படுத்துகின்றனர்.

கூகுள் என்றால் தேடலுக்கான வினைச்சொல் என்பது வெறும் அடைமொழி அல்ல. அது இணைய யதார்த்தம்.

தேடலின் மறு பெயராக கூகுள் மாறியிருப்பது உண்மை தான். எனினும் கூகுள் மட்டும்தான் தேடியந்திரமா? மற்ற தேடியந்திரங்களை அறிந்து கொள்வதும் தேவைக்கேற்ப பயன்படுத்துவதும் அவசியம் இல்லையா?

இந்தக் கேள்வியை முன்வைத்து மாற்று தேடியந்திரங்களை அறிமுகம் செய்வதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கம்.

மாற்று தேடியந்திரங்கள்

மாற்று தேடியந்திரங்கள் எனும்போது போட்டித்தேடியந்திரம் என்ற வகையில் முன்வைக்கப்படவில்லை. தேடல் உலகில் இருக்கும் மாற்று சித்தாந்தகளை பிரதிநிதிகளாகவே இந்த தேடியந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கூகுள் இணையத்தில் தேடி முடிவுகளை பட்டியலிடும் முறைவில் இருந்து விலகி மாறுபட்ட முறையில் முடிவுகளை முன்வைக்கும் தேடியந்திரங்கள் இருக்கின்றன. தேடல் பயணத்தில் முற்றிலும் புதிய பாதை காண முயலும் தேடியந்திரங்கள் இருக்கின்றன. தேடல் அனுபவத்தை மெருகூட்ட முயற்சிக்கும் தேடியந்திரங்கள் இருக்கின்றன.

தேடலில் அடுத்த பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி காட்டிவிடுவதற்கான ஆய்வு முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கூகுள் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. தேடலையும் எளிதாக்கி இருக்கிறது. எனினும் மாற்று தேடியந்திரங்களையும் அவற்றின் பின்னே உள்ள தேடல் கோட்பாடுகளையும் தெரிந்து கொள்வது டிஜிட்டல் யுகத்தில் தேடல் கலை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். அது மட்டும் அல்ல, இந்த தேடல் ஞானம் அனைவருக்கும் அவசியம்.

மாற்று தேடியந்திரங்களே ஒரு நூறு இருக்கும். அதைவிட வியப்பளிக்கும் விஷயமாக குறிப்பிட்ட துறை சார்ந்த சிறப்பு தேடியந்திரங்களும் எண்ணற்றவை இருக்கின்றன தெரியுமா?

துறை சார் தேடியந்திரங்கள் மட்டுமா என்ன, மாணவர்களுக்கான தேடியந்திரங்கள் இருக்கின்றன? ஆடியோ, வீடியோ மற்றும் புகைபடங்களுக்கான தனித்தனி தேடியந்திரங்கள் இருக்கின்றன. கணித தேடியந்திரம், ரசாயன தேடியந்திரம், மருத்துவ தேடியந்திரங்களும் இருக்கின்றன தெரியுமா? இசை தேடியந்திரங்கள், இலக்கிய தேடியந்திரங்கள், உயிரியல் தேடியந்திரம், பசுமைத் தேடியந்திரங்கள் போன்றவையும் இருக்கின்றன தெரியுமா?

இப்படி தெரியுமா? என கேட்டுக்கொண்டே போகலாம்.

காமிக்ஸ்களுக்கான தேடியந்திரங்கள் இருக்கின்றன, கவிதைக்கான தேடியந்திரங்கள் இருக்கின்றன. சமூக தேடியந்திரங்கள் இருக்கின்றன. மேலும் நன்கறியப்பட்ட சுற்றுலா தேடியந்திரங்கள், ஷாப்பிங் எந்திரங்கள், அகராதிகள் இருப்பதுடன் சிபாரிசு எந்திரம் என புதுமை கோட்பாடும் தனித்து நிற்கிறது.

இவை தவிர மெட்டா தேடியந்திரங்கள் இருக்கின்றன. நிறைய குறுந்தேடியந்திரங்கள் இருக்கின்றன. கேள்வி - பதில் எந்திரங்கள் இருக்கின்றன. தேடியந்திரங்களை தேடுவதும், தேடத்தேட கண்ணுக்கு தெரியாத தேடியந்திரங்கள் கிடைப்பதும் தான் மிகவும் சுவாரஸ்யமானது. சிந்தனைக்குறியது.

இன்னும் நிறைய தேடியந்திரங்கள் ஒளிந்து கொண்டும் இருக்கலாம். தேடல் சித்தாந்தத்திலேயே புதிய சிந்தனையாக கண்டுபிடிப்பு எந்திரங்கள் என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்றன. மனித மேற்பார்வையிலான தேடியந்திரம், ஓபன் சோர்ஸ் தேடியந்திரம் ஆகிய சித்தாந்தங்களும் கவனத்தை ஈர்க்கின்றன.

இத்தனை தேடியந்திரங்கள் இருப்பது ஒருபுறம் இருக்க, இவை எல்லாம் இணைத்தில் மேல் பகுதியில்தான் நீந்திக்கொண்டிருக்கின்றன, இவற்றின் கைகளுக்கு எட்டாத ஆழ்வலை இருக்கிறது, அதனுள் நுழையக்கூடிய நவீன தேடியந்திரம் தேவை எனும் கருத்தாக்கமும் முன்வைக்கப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில், குறிச்சொற்களில் இருந்து விடுபட்டு தேடும் பொருள் உணர்ந்து மனதில் உள்ளதை தேடித்தரும் புத்திசாலி தேடியந்திரங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகுமா என்ற ஆய்வும் நடந்து கொண்டிருக்கிறது.

இவற்றை எல்லாம் அறிமுகம் செய்து தேடல் அறிவை விசாலமாக்குவதுதான் இந்தத் தொடரின் மைய நோக்கம்.

அப்படியே தேடலில் உள்ள போதாமைகள், தேடியந்திர அரசியல், கண்காணிப்பு யுகத்தில் தனியுரிமையின் முக்கியத்துவம் பற்றியும் இந்த தொடரில் அலசி ஆராயலாம்.

பலவகை தேடியந்திரங்களை அறியும் முயற்சியில் தேடல் கலையின் நுட்பங்களையும், தேடல் திறனையும்கூட அறிமுகம் செய்து கொள்ளலாம்.

தமிழில் தேடியந்திரம், தேசிய தேடியந்திரம் ஆகிய முக்கிய சிந்தனைகளையும் பரிசீலித்து எதிர்கால தேடல் பற்றியும் இந்தத் தொடர் வழியே சிந்திகலாம் வாங்க!

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x