Published : 29 Jan 2015 10:54 AM
Last Updated : 29 Jan 2015 10:54 AM

ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் 10

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை எழுத்தாளரும் நாடகாசிரியருமான ஆன்டன் பாவ்லோவிச் செக்கோவ் (Anton Pavlovich Chekhov) பிறந்த தினம் இன்று (ஜனவரி 29). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 ரஷ்யாவின் டகான்ராக் என்ற ஊரில் பிறந்தார். அம்மா தனது ஆறு குழந்தைகளுக்கும் நிறைய கதைகள் கூறுவது வழக்கம். மளிகைக் வியாபாரத்தில் நஷ்டமடைந்ததால் குடும்பத்துடன் அப்பா மாஸ்கோ சென்றார். செக்கோவ் மட்டும் சொந்த ஊரிலேயே பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.

 பள்ளியில் படித்தபோதே நூற்றுக்கணக்கான நகைச்சுவை சித்திரக்கதைகளை புனைப் பெயரில் உள்ளூர் பத்திரிகைகளில் எழுதி வந்தார். அந்த வருமானம் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த தன் குடும்பத்துக்கு பெரும் ஆதரவாக இருந்தது.

 1879-ல் நிதியுதவி கிடைத்ததால், மருத்துவம் பயின்றார். மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். இவரது கதைகள் மாஸ்கோ, பீட்டர்ஸ்பர்க் பத்திரிகைகளில் வெளிவந்தன. ஐந்தே ஆண்டுகளுக்குள் 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார்.

 ஒரு கட்டத்தில் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, முழு நேர எழுத்தாளராகிவிட்டார். 44 ஆண்டுகால வாழ்க் கையில் 24 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். இவரது படைப்புகள் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் தி சீகல் படுதோல்வி அடைந்தது.

 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புகழ்பெற்ற நாடக இயக்குநர் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி தனது மாஸ்கோ ஆர்ட் தியேட்டர் மூலம் இவரது நாடகம் மீண்டும் மேடையில் அரங்கேறி வெற்றி பெற்றது. அவருடன் நட்பு ஏற்பட்ட பிறகு, செகோவ் மேலும் மூன்று நாடகங்களை எழுதினார். அனைத்தும் வெற்றிபெற்றன.

 பணமும் புகழும் குவிந்த நேரத்தில் காசநோய் தாக்கியது. ஆனாலும் தங்கு தடையின்றி எழுதி வந்தார். வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை எதிர்கொண்டாலும் அவை எதையும் தன் எழுத்துக்களில் அவர் கொண்டு வந்ததேயில்லை. லியோ டால்ஸ்டாய், மக்ஸிம் கார்கி ஆகியோர் இவரது நண்பர்கள்.

 தன் எழுத்துகளில் சீர்திருத்தக் கருத்துகளையோ தர்ம நெறிகளையோ உபதேசம் செய்ததில்லை. திறமையோடு, எதிலும் ஓர் அளவோடும் அழகோடும் செயல்பட வேண்டும். நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதே இவரது வாழ்க்கைத் தத்துவம்.

 போலித்தனத்தை வெறுத்தவர். வாழ்க்கையின் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக எழுதியவர். இவரது படைப்புகள் அதிக வார்த்தைகளில் இல்லாமல் மிகவும் சுருக்கமாகவும் நகைச்சுவையோடும் இருக்கும்.

 வார்ட் நம்பர் 6, தி லேடி வித் தி டாக் உள்ளிட்ட மொத்தம் 568 சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார்.

 இவரது நாட்குறிப்புகளும், கடிதங்களும் தனித் தொகுதி களாக வெளியாகியுள்ளன. நவீன சிறுகதை மன்னராகவும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால முன்னணி நாடகாசிரியராகவும் போற்றப்பட்ட இவர், 1904, ஜூலை 15-ஆம் தேதி, 44-ஆவது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x