Published : 25 Nov 2014 10:31 AM
Last Updated : 25 Nov 2014 10:31 AM

ஆண்ட்ரூ கார்னகி 10

அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவராகப் போற்றப்படும் தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னகி பிறந்தநாள் இன்று (நவம்பர் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 ஸ்காட்லாந்தில் பிறந்தவர். அப்பா நெசவாளர். 13 வயதில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பிறகு, தந்தி கொண்டு செல்லும் பணியாளரானார். சிறிது காலத்தில் தந்தி ஆபரேட்டராக உயர்ந்தார்.

 பென்சில்வேனியாவில் ரயில் நிலையப் பணியில் சேர்ந்தார். தொழில் நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டார். 3 ஆண்டுகளில் ரயில் நிலையக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.

 ரயில்வேயில் வேலை பார்க்கும்போதே முதலீடுகள் செய்தார். எண்ணெய் தொழிலில் நிறைய வருமானம் கிடைப்பதை அறிந்தார். 30-வது வயதில் ரயில்வே வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்கினார்.

 அடுத்த 10 ஆண்டுகள் முழு மூச்சாக எஃகுத் தொழிலில் ஈடுபட்டார். கார்னகி ஸ்டீல் கம்பெனி அமெரிக்காவின் எஃகு உற்பத்தியில் புரட்சியை உண்டாக்கியது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளை நிறுவினார். எஃகு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், வழிமுறைகளைப் பயன்படுத்தினார்.

 கச்சாப் பொருட்கள், கப்பல்கள், பொருட்களைக் கொண்டுசெல்வதற்கான ரயில் பாதை, எரிபொருளுக்கான நிலக்கரி சுரங்கங்கள் என தொழிலுக்குத் தேவையான அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டார்.

 எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டார். இதனால் தொழில் துறையில் ஆதிக்க சக்தியாகவும் அபரிமிதமாக சொத்துகளுக்கு அதிபதியாகவும் திகழ்ந்தார். இவரது நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் அமெரிக்காவின் பொருளாதாரமும் உயர்ந்தது. அமெரிக்காவை வடிவமைத் தவர்களில் ஒருவர் என்ற புகழ் மகுடத்தையும் சூடினார்.

 தன் வாழ்வின் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஒரு அதிரடி முடிவை 65 வயதில் எடுத்தார். நிதித் துறை ஜாம்பவானும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஸ்டீல் கார்ப்பரேஷனின் அதிபருமான ஜே.பி.மார்கனிடம் தனது அனைத்து தொழில் நிறுவனங்களையும் விற்றார். அதில் 480 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.

 நியூயார்க் பொது நூலகத்துக்கு 5 மில்லியன் டாலர் வழங்கினார். இவரது ஆதரவில் 2,800 நூலகங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கினார்.

 மாத்யூ அர்னால்ட், மார்க் ட்வைன், வில்லியம் கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நிறைய புத்தகங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

 பணக்காரர்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு, தங்கள் செல்வத்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்1900-ல் இவர் எழுதிய புத்தகம் ‘தி காஸ்பல் ஆஃப் வெல்த்’ என்ற பெயரில் வெளிவந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி உலகத்தின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த இவர் 83 வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x