Last Updated : 24 May, 2017 01:31 PM

 

Published : 24 May 2017 01:31 PM
Last Updated : 24 May 2017 01:31 PM

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

அரசியல் செய்யாமலேயே கட்சி தொடங்காமலேயே தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு நிகராக பேசப்படும் நபராக உருவாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

டீசர், ட்ரெய்லர், மெயின் பிக்சர் இப்படி ஒரு படத்துக்கு பரபரப்பு கூட்டுவதுபோல், ரஜினியும் 'ஆண்டவன் நினைத்தால் வருவேன்', 'போர் வரும்போது சந்திப்போம்' என்றெல்லாம் பேசி அவரது அரசியல் பிரவேசத்துக்கான எதிர்பார்ப்பை ஒரு மெயின் பிக்சருக்கான எதிர்பார்ப்பைப் போல் அதிகரித்து வைத்திருக்கிறார். மெயின் பிக்சர் வெற்றி எப்படி ரசிகர்கள் கையில் இருக்கிறதோ அப்படித்தான் ரஜினியின் அரசியல் வெற்றி மக்கள் அளிக்கும் வாக்குகளில் இருக்கிறது.

ரஜினியின் அரசியல் வெற்றி தோல்வி எல்லாவற்றையும் மக்கள் தீர்மானிக்கட்டும். ஆனால், அதற்குள்ளதாகவே அவரை அரசியல்வாதியாகவே தீர்மானித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அதற்கான அச்சாரம்தான் போயஸ் கார்டனை ஆக்கிரமித்து இருக்கும் ரஜினி போஸ்டர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் பரபரப்பு முற்றிலுமாக அடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் இல்லை, ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவும் இல்லை அவருடைய உறவினர்களும் அங்கு வருவதில்லை.

தமிழகத்தின் அரசியல் அடையாளமாக இருந்த போயஸ் கார்டன் இப்போது மற்றுமொரு குடியிருப்புப் பகுதியாக மட்டுமே இருக்கிறது.

ஆனால் மே 15-ம் தேதி தொடங்கி மே 20 வரை 5 நாட்கள் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பூடகமாக ஒருசில வார்த்தைகள் சொல்லிவைத்ததில் இருந்து மீண்டும் போயஸ் கார்டனில் போஸ்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

போயஸ் கார்டனில் இம்முறை இருப்பவை 'அம்மா' போஸ்டர்களோ அதிமுக போஸ்டர்களோ இல்லை அத்தனையும் ரஜினிகாந்த் போஸ்டர்கள்.

'ஏழைகளின் முதல்வரே.. போருக்கு தயார்... மக்கள் வாழ நீங்கள்தான் ஆள வேண்டும்.. இந்திய அரசியல் வான் கண்ட அற்புதம்' போன்ற வாசகங்களுடன் விதவிதமான போஸ்டர்கள் போயஸ் கார்டனை அலங்கரித்துள்ளன.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தேவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது மீண்டும் பின்னி சாலையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கும். போயஸ் கார்டனுக்கு 'தொண்டர்களாக மாறிய ரசிகர்கள்' வந்து செல்ல நேரிடும். கால்ஷீட் தேதி ஒதுக்கிய ரஜினிகாந்த் கட்சி பொதுக்கூட்டத்துக்கான தேதிகளை முடிவு செய்ய வேண்டியிருக்கும். அறிக்கைகள் வெளியிட வேண்டியிருக்கும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கும். போராட்டங்கள் எல்லாம் ஏசி ஹாலில் நடத்த முடியாது என்பதை ரஜினி உணர்ந்திருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் அரசியல் பிரவேசம் தனிக்கட்சியா அல்லது தேசியக் கட்சியுடனான இணைப்பா என்பதைப் பொருத்து ஊடகங்களுக்கான பேட்டியும் மாறும். இவையெல்லாம் அனுமானங்களே.

ஆனால் வெறும் அனுமானங்களைக்கூட உணர்வுபூர்வமாக அணுகும் ரசிகர்களால் தான் இன்று போயஸ் கார்டனுக்கு மீண்டும் ஓர் அரசியல் மேக் ஓவர் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்னர் தமிழர் முன்னேற்றப் படையினர் ரஜினி உருவ பொம்மையை எரித்துப் போராடியது போயஸ் கார்டன் செல்லும் வழியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா சிறை சென்ற பின்னர் யாரும் கண்டுகொள்ளாத ஏரியாவாக இருந்த போயஸ் கார்டன், பின்னி சாலை பகுதியெல்லாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் மீடியா வெளிச்சத்துக்கும் போலீஸ் கவனத்துக்கும் வந்தன.

ஒற்றைக் கருத்தை சூசகமாக ரஜினி சொல்லிச் சென்றுவிட, அது குறித்தே இன்றுவரை எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது என்னவோ ரஜினி சொன்னது போல், ஒரு விதையை மண்ணில் புதைத்ததோடு நிறுத்தாமல் அது வளர்ந்து துளிர்விட மேல்பரப்பை செம்மைப்படுத்துவதுபோல் அமைந்துள்ளன ரஜினி மீதான விமர்சனங்களும் ரஜினிக்கு எதிரான போராட்டங்களும்.

ஆனால் ஒரு தொண்டனுக்கும் ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஓர் இயக்கத்தின் மீதான காதலால் அதனுடன் தனது மூச்சையும் எண்ணத்தையும் செயல்பாட்டையும் இணைத்துக் கொள்பவன் உயிர்த்தொண்டன். அவனை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்க்க முடியாது. அந்த இயக்கத்தின் தலைமை மாறினாலும் தொண்டர்களின் பலம் குறையாது.

ஆனால், ரசிகன் தனிப்பட்ட ஆளுமையின் ஈர்ப்பு விசையால் உருவானவம். ரசிகனுக்கு சலிப்பு ஏற்படலாம். ரசிகனின் விருப்பம் மாறலாம். ரசிகனைத் தக்க வைத்துக்கொள்ள அவன் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறெல்லாம் அந்த ஆளுமை வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, போயஸ் தோட்டத்தில் திடீரென முளைத்துள்ள போஸ்டர்கள் ரஜினிக்கு அரசியல் உத்வேகம் அளித்தாலும்கூட தொண்டனாக மாறிவரும் ரசிகனை தக்கவைத்துக் கொள்ள ரஜினி நிறையவே மெனக்கெட வேண்டும் என்பது நிதர்சனம்.

ரஜினிகாந்த் போஸ்டர்கள் சில..





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x