Last Updated : 02 Oct, 2014 12:02 PM

 

Published : 02 Oct 2014 12:02 PM
Last Updated : 02 Oct 2014 12:02 PM

அரிமாவின் அரியாசனம்

ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!

‘இதனினும் ஒரு மரியாதை எந்த கலைஞனின் இறுதி படைப்பிற்கு கிடைத்திருக்காது’. இவ்வாறு தான் இவ்வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வரராவ் நடித்த ‘மனம்’ திரைப்படம் ஆந்திரா முழுதும் பேசப்பட்டது.

நாகர்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அகில் இப்படி மகன், மருமகள், பேரன்கள் என நாகேஷ்வராவ்வின் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து நடித்த இப்படம் ‘நாகேஷ்வரராவ்வின்’ கலைப்பயணத்தை புன்னகையுடன் வழியனுப்பி வைத்தது. படம் அற்புதமான படம் தான் இதனினும் அறிய முடிவு எந்த ஒரு கலைஞரின் கலைப்பயணத்திற்கும் கிடைத்திடாது என்று கேட்ட ஒரு வாசகம் தான் நம் நடிகர் திலகத்தின் இறுதிப்பயணங்களை கண்முன் நிறுத்தியது.

தமிழ் திரையுலகமே சிலாகித்த ஒரு நடிகர், என்றும் நடப்பில் சிம்மமாய் விளங்குபவர் நம் நடிகர் திலகம். அள்ளிஅள்ளி நடிப்பு பசியை பலருக்கும் ஊட்டிய இக்கர்ணன் நடிப்பிற்கு இலக்கணம் அமைத்த காலம் மறுத்தற்குரியதல்ல. உங்களுக்கு எப்படி சார் இவ்வளவு ஸ்டைல் வந்தது என்று கேட்டால் ‘எல்லாம் சிவாஜி சார் கிட்டேந்து கத்துகிட்டது தான் அவர் நடிச்ச புதிய பறவை, ஊட்டி வரை உறவு ஸ்டைல்லாம் தான் என்னை ஆட்பறித்தது’- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘நாங்கலாம் பராசக்தி வசனம் பேசி கோடம்பாக்கத்துக்கு வந்தவங்க’- உலக நாயகன் கமல்ஹாசன்.

16 வயதினிலே சப்பாணி (கமல்) வசனம் பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம், அண்ணாமலையில் ரஜினி சவால் விடும் ‘அஷோக்!!’ வசனத்தை பேசி சினிமாவிற்கு வர ஆசைப்பட்டோம் என்று தற்கால நடிகர்கள் கூறுகின்றனர். உண்மையில் பார்த்தால் நம் சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் சிவாஜி எனும் ஆலமரத்தின் விழுதுகள் தானே! இன்றைய வட்டார மொழியில் கூறினால் மாஸ் அண்ட் கிளாஸ் இவ்விரண்டின் சங்கமம் தான் சிவாஜி. ஒவ்வொரு மனிதனும் தன் பயணத்தின் முடிவில் அடுத்து வருபவர்களுக்கென எதையாவது விட்டுச்செல்வது அவசியம். அதுவும் கலைஞர்க்கு வித்தை தானம் செய்வது கடமை. அப்படி இருக்கையில் நம் நடிகர் திலகம் என் கடமை அனைத்தையும் முடித்து விட்டேன் இனி நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள், உங்களால் தான் முடியும் என்று ரஜினி, கமலுக்கு பெருமிதத்துடன் தம் சிம்மாசனத்தை அளித்து திரைப்பயணத்தை முடித்துக் கொண்டது போன்று தான் இப்போது தோன்றுகிறது.

படையப்பா, தேவர் மகன் பார்க்கையில்.உச்சத்தில் ஏறி உரியடிக்கும் சூப்பர் ஸ்டார் அதை அப்படியே ஓரமாக நின்று அன்னார்ந்து ரசித்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் திலகம். கன்னத்தை அன்போடு தடவி ‘தலையை லேசாக குனித்தபடி அது நீ இந்த ஸ்டைல்லா அப்படி ஒரு சல்யுட் போடுவியே! அப்படி போடு பார்க்கலாம்’ என்று சிவாஜி கேட்க ‘உங்க முன்னாடி எப்படிப்பா..’ என்று ரஜினி தயங்க ‘அட போடு டான்னு சொல்றேன்’ என்று கட்டளையிட ‘நெற்றி முன் தலைமுடி விழ, விரல்கள் கன்னத்தை தொடும் படி ஸ்டைல்லாக ஒரு சல்யூட்டினை நம் சூப்பர் ஸ்டார் அடிக்க’, அட யாரு மகன் இவன் என்ற இறுமாப்புடன், மீசையை மடக்கி சிவாஜி நடந்து செல்லும் காட்சி; ‘எனக்கு எதுக்கப்பா சொத்து, எதுக்கு சொத்து? எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்த படையப்பன் தான் இனிமே அவன் பார்த்துப்பான்’ என்று சிவாஜி கூறும் வசனங்களின் குறியீடு இப்போது தான் புரிகிறது.

‘நீ முன்னாடி போப்பா, இனிமே நாங்க எல்லாரும் உனக்கு பின்னாடி தான்’ என்று சிவாஜி பேச ‘என்னிக்குமே எங்க எல்லாருக்கும் முன்னோடி நீங்க தானப்பா’ என்று ரஜினி பேசும் வசனம் எத்தனை சிறப்பு. கலைக்காக வாழ்ந்த கலைஞனுக்கு இதைவிட மரியாதை செலுத்தும் அழகிய வசனம் வேறொன்று அமையப் பெற்றிருக்குமா?

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் இந்த அற்புதமான காட்சி ‘வீட்டிற்குள் மழை பெய்து கொண்டிருக்க அறக்கபறக்க அவசர அவசரமாக நடந்து வரும் கமல்ஹாசன். ஐய்யா என்னால இந்த காட்டு மிராண்டி கூட்டத்தோடு இருக்க முடியாது என்று கூற ‘இந்த காட்டுமிராண்டி கூட்டத்துல நானும் ஒருத்தான்ப்பு. நாம என்னிக்காவது ஒரு நாள் சாகதான் போறோம் ஆனா நம்ம சாவு அடுத்தவனுக்கு பயனுள்ளதா இருக்கணும். விதை விதைச்ச உடனே பழம் வரும்ன்னு எதிர்ப்பார்க்கலாமோ? இன்னைக்கு நீ பழம் திண்ப நாளைக்கு உன் மகன், அதுக்கு அப்புறம் அவன் மகன், ஆனா விதை நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா? கடமை. நான் என் கடமையா செஞ்சுட்டேன் நீ உன் கடமையை செய் என்று சிவாஜி கூற. ‘ஐயா நான் இந்த ஊருக்கு எதாவது நல்லது செய்வேன் ஐயா என்ன நம்புங்க’.- கமல். ‘உங்கள தான நம்பனும் இந்த வீட்டுல வேற யார் இருக்கா நம்பறதுக்கு’ என்று கண்கள் கலங்க சிவாஜி பேசும் வசனங்கள் என் கலைப் பயணம் முடியப் போகிறது, என் கடமையை உங்களுக்கு தாரை வார்த்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் நான் சுவாசித்த இந்த சினிமாவை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறுவதை போலத் தான் இப்போது தோன்றுகிறது.

வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டையுடன், முறுக்கிய மீசையுடன் ஊர்சனம் முன் சிவாஜி இருக்கையில் கமல் அமர்கின்ற காட்சி, படையப்பா’வில் சிவாஜி முதற்காட்சியில் அமர்ந்த சிகப்பு இருக்கையில் இடைவெளிக்கு பிறகு ரஜினி அமர்கின்ற காட்சி யதார்த்தமாக அமைந்த காலத்தின் கட்டாயங்கள் என்று கூற முடியுமா?

இதனினும் சிறப்பான முடிவுகள் வேறு எந்த கலைஞனின் கடைசி படத்திலாவது அமைந்திருக்குமா என்று தெரியவில்லை. என் கடமையை நான் முடிந்த வரை செய்துவிட்டேன் இனிமேல் நீங்கள் தான் தமிழ் திரையுலகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை உணர்த்தியபடியே நம் நடிகர் திலகத்தின் கலைப்பயணம் முடிந்திருக்கிறது. நடிப்பிற்காக வாழ்ந்தவரின் பயணத்திற்கு இதனினும் அழகிய முற்றுப்புள்ளி கிடைக்குமா என்பதும் சிவாஜி போல் ஒரு நடிகர் இனிமேல் கிடைப்பாரா? என்பதும் கேள்விக்குறியான் விஷயங்கள் தான்.

ரஜினி ரஜினி தான், கமல் கமல் தான் ஆனால் இவ்விருவர்களின் விதை நம் நடிகர் திலகமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x