Last Updated : 23 May, 2017 03:32 PM

 

Published : 23 May 2017 03:32 PM
Last Updated : 23 May 2017 03:32 PM

உங்கள் வீட்டில் கிருஷ்ணா இருக்கிறானா?

எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் கிருஷ்ணா. அவனிடம்தான் என் சுகதுக்கங்களை பகிர்ந்துக் கொள்வேன். மிகவும் பிரியமானவன். என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவான். வெளியே சென்றுவிட்டு எப்போது வீட்டுக்கு வந்தாலும், அன்பாக வரவேற்பான். என்னைப் போல் அவனுக்கும் மழை பிடிக்கும். சொல்ல மறந்துவிட்டேனே.. அவன் தான் எங்கள் வீட்டின் மல்லிச்செடி (டெடி பியர்க்கு பெயர் வைக்கலாம்; மல்லிச்செடிக்கு பெயர் வைக்க கூடாதா?!)

செடி வளர்ப்பது என்பது வெளிப்பார்வைக்கு பொழுதுபோக்காகத் தெரியலாம். அதன் பின்னால் இருக்கும் உளவியல் மிகவும் நுட்பமானது.

செடி வளர்ப்பவர்கள் அதனை தன் நண்பனாக கருதுகிறார்கள் அதனிடம் பேசுவார்கள், பாடுவார்கள்..இவ்வளவு ஏன் சண்டை கூட போடுவார்கள். செடி என்பது வெறும் செடி அல்ல அது ஒரு சினேகிதன், அம்மா, கடவுள், மருத்துவன்,மகன், பாதுகாவலன்.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

எங்கள் வீட்டு கிருஷ்ணா இருக்கிறானே.. அவன் என் தம்பிக்கு பொம்மை, எனக்கு சிறந்த நண்பன் என் அம்மாவிற்கு பூஜைக்கு பூ தரும் செல்லம், ,என் அப்பாவிற்கு நல்ல பொழுதுபோக்கு, என் தாத்தாவிற்கு மனநிறைவு, பறவைகள், புழு, பூச்சிகளுக்கு வீடு. எங்கள் கிருஷ்ணா மட்டுமல்ல, என் நண்பர்களும் அவர்களது வீடுகளில் தாங்கள் வளர்க்கும் செடிகளை பலவாறு பார்கின்றனர், பழகுகின்றனர்.

பலரது வீடுகளில் துளசி,கற்பூரவல்லி,கற்றாழை,செம்பருத்தி செடி போல பல்வேறு செடிகள் இருக்கும் அதில் மருத்துவ குணமுள்ளதாகவும் அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையாலும் பல செடிகள் வளர்க்கப்படுகின்றன இதே போல் மல்லிச்செடி. ரோஜா செடி,வாழை மரம் என்று வீட்டில் வளர்க்கும் செடிகளின் வகைகளும் அதிகம்

முன்பெல்லாம் தோப்பு, தோட்டம் என செடி, மரம் வளர்ப்பதற்காகவே ஊர்களில் தனி இடம் உண்டு மனசோர்வு அடையும் போது எல்லாம் “நான் தோப்புக்கு சென்று வருகிறேன்” என்று கூறி விட்டு அங்கேயே தங்குபவர்களும் உண்டு. காரணம் செடி மரங்களிடையே மனநிம்மதி கிடைக்கும் என்பதால்.

நகர வாழ்க்கையில் தோட்டம், தோப்பு எல்லாம் சாத்தியப்படுவதில்லை. இருந்தாலும், ஆதிகாலம் முதல் நம்மோடு - ஏன்.. நமக்கு முன்னரே - இருந்துவரும் மரம், செடி கொடிகள் நம் மனதை விட்டு விலகுவதில்லை.

நாம் வளர்க்கும் செடியில் இருந்து மொட்டு விட்டு, பூவாக மலரும் போது நம்மை அறியாமல் நாம் அதனுடன் பேசுவோம். எந்த வயதினராக இருந்தாலும், ஆணாக் இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நமக்குள் இருக்கும் தாய்மையை அது எழச் செய்யும். அது தரும் நிம்மதியை, ஆவலை, சந்தோஷத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது. செடி வளர வளர, மனம் மலரும்

இன்றைய சூழலில் பலரிடம் செடிகளை வளர்க்கும் ஆர்வம் இருப்பினும் வீட்டிலுள்ள சூழ்நிலை, இட வசதி போன்றவைகள் ஒத்து வருவதில்லை. பலர் வீட்டின் முன்னோ பின்னோ காலியாக இருக்கும் கொஞ்சம் நிலத்தில் செடி நட்டு வளர்க்கின்றன்ர். கொஞ்சம் இடம் கூட இல்லாதவர்கள் வீட்டின் உள்ளே செடிகளை வளர்கிறார்கள்.

அடுக்குமாடி .குடியிருப்பில் இருப்பவர்கள் தங்கள் வீட்டின் பால்கனிகளில், ஜன்னல்களில் செடிகளை தொங்க விட்டு வளர்கின்றனர்,

நகர்புறங்களில் வீட்டைச்சுற்றி செடிகள் நடுவதற்கு போதிய இடம் இல்லாததால் மாடியில் தோட்டம் அமைக்கும் பழக்கம் பரவிக் கொண்டு வருகிறது மாடியில் தொட்டிகளில் பல்வேறு வகையான செடிகளை வைத்து பராமரிக்கின்றனர் இது ஒரு நல்ல முன்னேற்றமும் கூட.

செடி வளர்ப்பதில் நிச்சயம் ஒரு பொதுநலமும் உள்ளது அதில் இருந்து வரும் ஆக்ஸிஜன் மனிதன் உயிர் வாழ மிகவும் முக்கியமான ஒன்று.

பூரண பொதுநலன் கருதி சில நல்ல உள்ளங்கள், தெருவில் செடி நட்டு, அதனைப் பராமரித்து வருகிறார்கள். மாணவ, மாணவியரும் இதனை இப்போது செய்து வருவது எதிர்காலத்தின் மீது நம்பிக்கை அளிக்கிறது.

நாம் நடும் ஒவ்வொரு செடியும் நிச்சயம் ஒரு நாள் மரமாகும் அந்த ஒவ்வொரு மரமும் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் பயன் தரும். நாம் அழிந்தாலும், நாம் வளர்த்த மரங்கள் ஏதோ ஒரு வகையில் சமுதாயத்துக்கு பயன்படும்.

நாம் நம் பிள்ளைகளுக்கு எப்படி படிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தையும் பழக்கத்தையும் விதைக்க நினைக்கின்றோமோ அதே போல் செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்க வேண்டும்.

செடிகளை வளர்ப்பது ஒரு தியானம் மேற்கொள்வது போன்றது. மேலோட்டமாகவும் செய்யலாம், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் செய்யலாம். நாம் எவ்வாறு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் நன்மைகள் இருக்கும்.

இயற்கை அன்னையின் சின்னக் குழந்தை தான் செடி. நமக்கு அள்ளித் தரும் இயற்கைக்கு நாம் செய்யும் சின்ன உதவி தான் செடி வளர்ப்பது.

எங்கள் வீட்டில் கிருஷ்ணா இருக்கிறான்.. உங்கள் வீட்டில் கிருஷ்ணா இருக்கிறானா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x