Last Updated : 07 Aug, 2016 10:33 AM

 

Published : 07 Aug 2016 10:33 AM
Last Updated : 07 Aug 2016 10:33 AM

ஆகஸ்ட் 10 சாவி 100-வது பிறந்த நாள்: என்றும் இளமையுடன் இருந்தவர்!

தன் முன் அமர்ந்திருந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தார் கல்கி. அவர் முன்னால் பத்திரிகையில் வந்திருந்த விளம்பரம் இருந்தது. “உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே!”

“பார்த்திருக்கிறீர்கள். இதே ‘ஆனந்த விகடன்’ ஆபீஸில்தான். சில நாட்களுக்கு முன் என் கதைகளைக் கொடுத்துவிட்டு, வேலை கேட்டேன். வேலை கொடுக்க மறுத்துவிட்டீர்கள். அதனால், நானே பத்திரிகை நடத்தலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.”

“சரி. அது ஏன் ‘கத்திரி விகடன்’ என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?”

“ஆனந்த விகடன், ஹனுமான் போன்ற பத்திரிகைகளில் வரும் செய்திகளைக் கத்தரித்து, அதாவது ஊளைச் சதை நீக்கி, நாங்கள் கொடுக்கப் போகிறோம்.”

கல்கி யோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு ‘விகடன்’ என்ற பெயரில் இன்னொரு பத்திரிகை வருவதில் சம்மதம் இல்லை. இந்த இளை ஞனை வெளியே விட்டுவைக்கக் கூடாது.

“எங்கள் பத்திரிகையில் சேர்ந்து விடுங்கள். 40 ரூபா சம்பளம். என்ன சொல்கிறீர்கள்?”என்றார் கல்கி.

‘அட, இதை எதிர்பார்த்துத்தானே இந்த விளம்பரமே போட்டேன்’ என்று இளைஞனின் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

“கொஞ்சம் அவகாசம் கொடுங் கள். நான் யோசித்து சொல்கிறேன்.”

“என்ன யோசனை? நீங்கள் கைக் காசை இழக்க வேண்டியது இல்லை. அதே நேரம் எழுதவும் செய்யலாம்.”

“என்னை நம்பி பணம் போடு கிறேன் என்று சொன்னவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டாமா?”

“இதுவரை எவ்வளவு செலவழித் திருப்பார்கள்?”

“160 ரூபாய்!”

கல்கி ஒரு காகிதத்தை எடுத்தார். ‘ப்ளீஸ் பே ருபீஸ் 160 டு எம்.எஸ். விஸ்வநாதன்’ என்று ஒரு குறிப்பு எழுதி, “இதை அக்கவுண்ட்ஸில் கொடுத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நாளை இங்கு வேலைக்குச் சேர்ந்துவிடுங்கள்...” என்றார் கல்கி.

அந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மாம்பாக்கம் சாமா சுப்ரமணியன் விஸ்வநாதன்தான் எழுத்தாளர் சாவி. அவர் ஆனந்த விகடனுக்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத் தது இப்படித்தான். இந்த சம்பவம் நடந்தது 1937-ல். அப்போது சாவிக்கு 21 வயது.

சாவி, அந்த இளைஞனைக் கூர்ந்து பார்த்தார். இளைஞனுக்கு வயது 30. முந்தைய நாள் நடந்த ஆசிரியர்க் குழு கூட்டத்தில் அவன் ஒரு யோசனை சொல்லியிருந்தான். அது யோசனை அல்ல. கடுமையான விமர்சனம். அதைக் குறித்துப் பேச அவனை அழைத்திருந்தார்.

“நீங்கள் சொன்னதை யோசித் தேன். நமது பத்திரிகையில் இளை ஞர்கள் எழுத அதிகம் வாய்ப்பு கொடுப்பதில்லை என்று சொல் கிறீர்கள். என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

“நம் பத்திரிகையில் மாறி மாறி தொடர்கதை எழுதும் எழுத்தாளர் களுக்கெல்லாம் என்ன வயது?”

“தொடர்கதை என்பது சர்குலே ஷனுடன் தொடர்புடைய விஷயம். பிரபலமானவர்களை அதற்குப் பயன்படுத்திக் கொள்வதைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?”

“அரைத்த மாவையே அரைக்க நாம் எதற்கு? புதிதாக ஏதாவது செய்தால்தானே வாசகர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும்?”

“மசால் தோசை வேண்டுமானால் மாவு அரைத்துத்தான் ஆக வேண்டும். அரைக்காமல் என்ன செய்வது?”

“இட்லி, தோசை, இடியாப்பமே வேண்டாம். உப்புமா கிண்டுவோம். சப்பாத்தி இடுவோம். பூரி பொரிப்போம். பரோட்டா போடு வோம்..!”

‘‘யோசிக்கிறேன்...”

யோசிக்கிறேன் என்று சொன்ன சாவிக்கு அப்போது வயது 64. அந்த சீனியர் யோசித்ததன் விளைவு ‘திசைகள்’.

“நீங்கள் சொல்வது சரிதான். இளைஞர்களுக்கு என்று தனி யாகவே ஒரு பத்திரிகை ஆரம்பித்து விடலாம் என்று தீர்மானித்திருக் கிறேன். அதன் ஆசிரியரையும் முடிவு செய்துவிட்டேன்” என்றார்.

“யார்?” என்றேன்.

‘‘நீங்கள்தான்!” என்றார் புன்னகை தவழ.

‘திசைகள்’ தொடங்கியபோது ‘ஆசிரியர் மாலன் வழங்கும் திசை கள்’ என்ற ஒரு வரி மட்டும்கொண்ட போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுக்க ஒட்டச் செய்தார். ஒரு இடத்தில்கூட அவரது பெயர் கிடையாது. வாணி மகாலில் விழா வைத்து என்னையும் என் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார். அவையெல் லாம் அவரது பெருந்தன்மைக்குச் சான்று!

எழுதும் ஆர்வமும் யோசனை களும் உள்ளே ஊற்றெடுத்துக் கொண்டிருந்த இளம்வயதில் போதுமான வாய்ப்பு கிடைக்கா மல் தத்தளித்துத் தவித்தவர் சாவி. அதனால் ஆற்றல் உள்ள இளைஞர்கள் மீது அவருக்கு எப்போதும் பரிவு சுரந்து கொண்டே இருந்தது.

வாரா வாரம் வரம்

‘வாஷிங்டனில் திருமணம்’ சாவிக்கு மிகப் பெரும் புகழைத் தேடித் தந்தது. ஆனால், அது மிகச்சிறிய தொடர். 11 வாரங்கள் மட்டுமே வந்த தொடர். அது வெளிவந்தபோது அதில் வாரா வாரம் அவரது பெயர் இடம் பெறவில்லை. கடைசி அத்தியாயம் பிரசுரமானபோதுதான் ‘சாவி’ என்ற பெயர் இடம்பெற்றது.

வாஷிங்டனில் திருமணத்துக்குப் பிறகு ‘விசிறி வாழை’ எழுதினார். இரு முதியவர்களுக்கு இடையே ஏற்படுகிற காதல் பற்றிய உருக்க மான கதை அது. அப்படியொரு ‘தீம்’மை முன்மொழிந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், ‘ஜெயகாந்தனைக் கொண்டு அதை எழுதச் செய்யலாம்’ என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், சாவி யிடம் அதை எழுதும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரது ‘நவகாளி யாத்திரை’, ‘இங்கே போயிருக்கிறீர்களா..? ’ இரண்டும் வெவ்வேறு வகையான பயண அனுபவங்கள்.

இப்படிப் பலவிதமாக எழுத அடிப்படையாக அமைந்தது அவரது இலக்கிய வாசிப்பு. ஹனுமான், ஹிந்துஸ்தான், சந்திரோதயம், சக்தி போன்ற இலக்கிய ஏடுகளில் பணியாற்றிவிட்டுத்தான் ஆனந்த விகடனுக்கும் கல்கி இதழுக்கும் வந்தார். இலக்கிய வாசிப்பு என்பது அடி உரம். ஆனால் உரத்தின் நெடி வெகுஜன எழுத்து என்ற கனியில் தெரியக்கூடாது என்பதில் உறுதியாகஇருந்தார்.

அடித்தளத்தில் இருந்து தடை களைத் துளைத்துக் கொண்டு எழுந் தவர் சாவி. அவரிடம் இருந்து அறிந்து கொள்ள, இளைஞர்கள் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது.

வரலாற்றை வாசிக்காதவர்கள் வாழ்வில் வளர்ச்சி கண்டதே இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x