Published : 25 May 2016 11:53 AM
Last Updated : 25 May 2016 11:53 AM

எம்ஜிஆர் 100 | 71 - விளம்பரத்தை விரும்பாத உள்ளம்!

M.G.R. ஜாதி, மத, இன, மொழி, மாநில எல்லைகளை எல்லாம் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் உதவுவார். அதேநேரம் தமிழர்களையும் அவர்களது கலாசாரத்தையும் மற்ற மாநிலத்தவர் இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டார். பாதிக்கப் பட்டவர்களுக்கு செய்யும் உதவியைவிட, தனது எதிர்ப்பையே முன்னிலைப்படுத்துவார்.

ஒருமுறை ஒடிசா மாநிலத்தில் (அப் போது ஒரிசா) பெரும் வெள்ளம் ஏற் பட்டது. ஏராளமானோர் உயிரிழந்த னர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவித்தனர். சென்னையில் தங்கியிருந்து மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த ஒடிசா மாணவர்கள், தங்கள் மாநிலத்துக்கு நிவாரண நிதி திரட்டித் தர விரும்பினர்.

அதற்காக, நடிகை வைஜெயந்தி மாலாவும், நடிகர் கிஷோர் குமாரும் நடித்து அப்போது வட மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ‘நியூ டெல்லி’ என்ற இந்திப் படத்தை சென்னை அசோக் திரையரங்கில் (இந்த திரை யரங்குதான் பின்னர் சிவசக்தி என்று பெயர் மாற்றப்பட்டது) காலைக் காட்சி யாக திரையிட முடிவு செய்தனர். அது 1956-ம் ஆண்டு. அப்போதே திமுகவில் எம்.ஜி.ஆர். முக்கிய பிரமுகராகவும் திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டுமென்றும் அவர் வந்தால் வசூல் அதிகமாக கிடைக்கும் என்றும் ஒடிசா மாணவர்கள் கருதினர். திரையிடப்படுவதோ இந்திப் படம். திமுகவோ இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கம். இதனால், எம்.ஜி.ஆரை அழைத்தால் அவர் நிகழ்ச்சிக்கு வரு வாரா என்று மாணவர்களுக்கு சந்தேகம். இருந்தாலும் கேட்டுப் பார்க்கலாம் என்று எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

ஒருவர் துன்பப்படுகிறார் என்றால், அவர்கள் தன்னை எதிரியாக நினைப்பவர் களாக இருந்தாலும் உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.! நிகழ்ச்சிக்கு வர சம்மதித் தார். ஒடிசாவைச் சேர்ந்த மாணவர் களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்த சமயத் தில் திடீரென ஒரு சிக்கல் முளைத்தது.

வட மாநிலங்களில் ஓடிக்கொண்டி ருந்த ‘நியூ டெல்லி’ திரைப்படம் சென்னை யிலும் வெளியானது. படத்தில் ஒரு காட்சியில் தமிழர் ஒருவரின் தலையில் செருப்பை வைத்து கதாநாயகன் கிஷோர் குமார் ஆடிப் பாடி வருவார். அருகே கதாநாயகி வைஜெயந்தி மாலாவும் இருப்பார். இந்தக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘‘ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் தமிழர்களை இழிவு படுத்துவது போன்ற காட்சி எப்படி இடம் பெற்றது? இது தமிழர்களை அவமதிக்கும் செயல். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கலாமா?’’ என்று கண்டனக் குரல்கள் கிளம்பின. ‘நியூ டெல்லி’ படத்தை திரையிட ஏற்பாடு செய் திருந்த மாணவர்களுக்கு பயத்தோடு கவலையும் சேர்ந்துகொண்டது. விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவாரா? என்று கவலைப்பட்டனர்.

படத்துக்கு எழுந்த எதிர்ப்பு எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு சென்றது. அவருக்கும் தர்மசங்கடம். ‘‘தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட படத் துக்கு நான் எப்படி தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதுபோன்ற காட்சி படத்தில் உள்ளது என்று என்னிடம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை?’’ என்று விழா ஏற் பாட்டாளர்களிடம் கடிந்துகொண்டார். தாங்கள் அந்தப் படத்தை பார்க்கவில்லை என்றும் தெரிந்திருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறிதுநேரம் நிதானமாக யோசித்த எம்.ஜி.ஆர்., ‘‘நிகழ்ச்சிக்கு வருகிறேன். ஆனால், எனது எதிர்ப்பைத் தெரிவிப் பேன்’’ என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதற்கிடையே, எம்.ஜி.ஆரை விமர்சிப் பவர்கள் ஒருபக்கம், ‘‘தமிழர்களை இழிவு படுத்தும் படம் திரையிடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். எப்படி கலந்துகொள்ள லாம்?’’ என்று கேள்வி எழுப்பினர்.

இந்த அமர்க்களங்களுக்கிடையே, குறிப்பிட்ட நாளில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். திரை யரங்கம் இருந்த பகுதியில் நுழையவே முடியாதபடி மக்கள் வெள்ளம். மாண வர்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே வசூல் கிடைத்தது. படம் திரையிடப்பட்டு இடைவேளையின்போது, எம்.ஜி.ஆர். பேச அழைக்கப்பட்டார்.

‘‘திரைப்படம் என்பது சக்தி வாய்ந் தது. பார்ப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதியக்கூடியது. மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, வெறுப்பை யும் வேற்றுமையையும் ஏற்படுத்தக் கூடாது. இந்தப் படத்தில் ஒரு தமிழரின் தலையில் செருப்பு வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்தக் காட்சியைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்பட் டேன். என்னைப் போலவே தமிழ் மக் களும் வேதனை அடைந்துள்ளனர். நாட் டின் எந்த பகுதி மக்களின் உணர்வுகளை யும் பாதிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெறச் செய்யக் கூடாது.’’ என்று தனது எதிர்ப்பை எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

அதேநேரம், மாணவர்களின் நாட்டுப் பற்றையும் நல்ல நோக்கத்தையும் பாராட்டுவதாகவும் அதற்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் கூறினார். அவரது பேச்சை ஆமோதித்து கூட்டத் தினர் பலத்த கரகோஷம் செய்தனர்.

நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, ‘‘நாளை என்னை வந்து சந்தியுங்கள்’’ என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறிவிட்டு எம்.ஜி.ஆர். புறப்பட்டார். மறுநாள் அவரது வீட்டுக்குச் சென்று மாணவர்கள் சந்தித்தனர். அவர்களை வரவேற்று உபசரித்தார் எம்.ஜி.ஆர்.! ‘‘உங்கள் நோக்கம் உயர்வானது. ஆனால், நீங்கள் திரையிட தேர்ந்தெடுத்த படம் பற்றி என்னால் அப்படி சொல்ல முடி யாது. உங்களின் நற்பணிக்கு எனது சிறிய காணிக்கை’’ என்று கூறி, மாணவர்களிடம் ஒரு பெரும் தொகையை நன் கொடையாக அளித்தார்.

இதை எதிர்பார்க்காத மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தன்னை வந்து சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். கூறியது இதற்குத்தான் என்பதையும் புரிந்து கொண்டனர். ‘இந்த நன்கொடையை நேற்று மேடையிலேயே கொடுத்திருக்க லாமே?’ என்று மாணவர்களுக்கு சந் தேகம். அதற்கு விடையளிப்பதுபோல எம்.ஜி.ஆர். சொன்னார்…‘‘நேற்று நான் நன்கொடை கொடுத்திருந்தால் அதற்குத் தான் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். என் எதிர்ப்பின் வலிமை குறைந்து போயிருக்கும்’’ என்றார்.

ஒடிசா வெள்ள நிவாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் உதவி வெளியே தெரிய வில்லை. ஆனாலும், விளம்பரத்தை விரும்பாத அவரது உதவும் உள்ளம் ஒடிசா மாணவர்களுக்குத் தெரிந்தது!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்



‘நவரத்தினம்’ படத்தில், ‘லடுக்கே ஸே மிலீ லடுக்கி’ என்ற இந்திப் பாடல் இடம் பெற்றது. இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருடன் நடிகை ஜரீனா வஹாப் நடித்திருந்தார். தமிழ் படம் ஒன்றில் முழுமையாக இந்திப் பாடல் இடம் பெற்றது அப்போது புதுமை!

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x