Published : 13 May 2016 10:10 AM
Last Updated : 13 May 2016 10:10 AM

எம்ஜிஆர் 100 | 64: மக்களின் அடிமை நான்!

M.G.R. எப்போதும் மக்களோடு மக்களாகவே இருந்தார். தமிழகத்தின் முதல்வர் என்ற உயர்ந்த பதவியில் இருந்தபோதும் தன்னை மக்களிடமிருந்து அப்பாற்பட்டவராக அவர் நினைத்ததோ, செயல்பட்டதோ இல்லை.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.

காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராள மானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப் பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.

மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்; மனுக்கள் கொடுத்தவர்கள் உட்பட.

‘படகோட்டி’ படத்தில் ஒரு காட்சி. இரு மீனவ குப்பங்களுக்கிடையே பகை நிலவும். ஒரு குப்பத்தின் தலைவரான எம்.ஜி.ஆரும் எதிரி குப்பத்தைச் சேர்ந்த தலைவரின் மகளான நடிகை சரோஜா தேவியும் காதலிப்பார்கள். இதற்கு எம்.ஜி.ஆரின் குப்பத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்கள் விருப்பப்படி தனது காதலை தியாகம் செய்ய எம்.ஜி.ஆர். முடிவு செய்வார்.

அதனால் வருத்தப்படும் சரோஜா தேவி, ‘‘எனது காதல் கருக வேண்டியதுதானா?’’ என்று கேட் பார். அதற்கு எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்…

‘‘நான் தனிமனிதனல்ல. மக்களுக்கு கட்டுப் பட்டவன். நான் தலைவன் அல்ல. தலைவன் என்ற பெயரில் மக்களின் அடிமை நான்.’’

அப்படி, மக்களின் அடிமையாக தன்னைக் கருதி சேவை செய்ததால்தான் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்



எம்.ஜி.ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் ‘கல்கண்டு’ பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். ஒருமுறை தமிழ்வாணன் இப்படிக் கூறினார்: ‘‘ஒரு குழந்தை முன் பத்து நடிகர்களின் படங்களை போட்டால் அது எம்.ஜி.ஆர். படத்தைத்தான் எடுக்கும். ஏனென்றால், அவரது சிரிப்பில் உண்மை இருக்கிறது!’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x