Published : 03 Jan 2016 12:11 PM
Last Updated : 03 Jan 2016 12:11 PM

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 9

குறள்

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல். (203)



பொருள்:

அறிவுக்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு எது தெரியுமா?

தனக்குத் தீமை செய்கிற பகைவருக்கும் கூட தீமை செய்யாமல், அவருக்கு நன்மை செய்வதே ஆகும். பொதுவாக பார்த்தால் - தனக்கு நன்மை செய்தவருக்கு நன்மை செய்வதையும்; தனக்குத் தீமை செய்தவருக்குத் தீமை செய்வதையுமே எல்லா மக்களும் இயல்பாகக் கொண்டிருப் பார்கள். அதுதான் சரியானது என்றும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆகவேதான், தீமை செய்பவருக்கு நன்மை செய்வது அல்லது, தீமையைத் திருப்பி செய்யாமல் இருப்பது என்பதை அறிவுகளுக்கெல்லாம் தலையாய அறிவு என்று கூறுகிறார் வள்ளுவப் பெருமான்.

விளக்கம்:

நான் ஒருமுறை தென் ஆப்பிரிக்கா நாட்டுக்குப் பயணம் போயிருந்தேன். அந்தப் பயணத்தின்போது, மறக்க முடியாத மிக முக்கிய தருணமாக ஒரு நிகழ்வு நடைபெற்றது. அங்கே மனிதப் புனிதர் திரு.நெல்சன் மண்டேலாவைச் சந்தித்தேன். அந்தத் தியாகச் செம்மலிடம் சுவாரஸ்யமான ஒரு தன்மையைக் கண்டேன்.

தென் ஆப்பிரிக்க தேசத்தின் அதிபராக அவர் பதவியேற்றபோது, நிற வேற்றுமையின் காரணமாக கொடிய மனம் கொண்டு தன்னை துன்புறச் செய்து, 26 ஆண்டுகள் சிறையில் வாடி வதங்கச் செய்தவர்களைக் கூட அந்த நாட்டில் சுதந்திரமாக உலவச் செய்திருந்ததை நேரிடையாகக் கண்டறிந்து நெகிழ்ந்து மகிழ்ந்தேன். திருவள்ளுவர் இத்தகைய மனிதத் தன்மையைத்தான் வெகு எழிலாகச் சுட்டிக்காட்டுகிறார்.

யாரெல்லாம் தங்களுக்குத் துன்பம் செய்கிறார்களோ, அவர்களுக்கு வழங்க வேண்டிய கொடிய தண்டனை என்ன தெரியுமா?

அப்படி கொடுமனம் கொண்டு கொடுமை செய்த அத்தகைய மனிதர்களுக்கே நன்மை செய்வதாகும். இத்தகைய பெருந் தன்மை சாதாரண எளிய மனிதர் முதல் இந்த உலகை ஆளும் தகுதி கொண்டவர்களுக்கும், அறிவுசார் உலகில் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் தேவையான குணாம்சம் ஆகும்.

தேசத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுகிற தலைவர் களிடையே இப்படியான தன்மை அவசியம் இருக்க வேண்டும். மனிதக் கூட்டம் கூடிவாழும் இந்தச் சமுதாயத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்த இத்தகைய தன்மை மிகவும் அவசியம்.

குறள்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

எனஆற்றுங் கொல்லோ உலகு (211)



பொருள்:

மழை எந்த எதிர்பார்ப்பும் இன்றிப் பொழிந்து, நம்முடைய தேவைகளைப் பூர்த்திசெய்கிறது. இதற்காக மழை நம்மிடம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதே இல்லை. அது போலவே பிறருக்கு உதவும்போது, நாம் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.

விளக்கம்:

நான் 1954-57களில் சென்னை எம்.ஐ.டியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு டிசம்பர் சமயம் கல்லூரி நண்பர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். ஒரு தேர்வு மிச்சமிருந்ததால் நான் மட்டும் விடுதியில் இருந்தேன். என் மச்சான் ஜலாலுதீன் தொலைபேசி மூலம், இராமேசுவரத்தை புயல் தாக்கிவிட்டதாகவும் வீட்டினர் என்னை பார்க்க ஆசைப்படுகின்றனர் என்றார். உடனே ஊருக்குச் செல்ல மனம் துடித்தாலும், கையில் பணம் இல்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்போது என்னிடம் 400 ரூபாய் விலைகொண்ட ‘Theory of Elasticity' என்ற புத்தகம் இருந்தது. பேராசிரியர் லட்சுமணசுவாமி முதலியார் என்னை சிறந்த மாணவனாக தேர்ந்தெடுத்து எனக்கு பரிசாக வழங்கிய புத்தகம் அது.

அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மூர் மார்க்கெட் சென்று, அங்குள்ள பழைய புத்தகங்களை வாங்கும் கடையில் கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் அந்தப் புத்தகத்தை கையில் வாங்கி புரட்டிப் பார்த்துவிட்டு, என்னுடைய அவசரத் தேவையையும் புரிந்துகொண்டார். எனக்கு அந்த நேரத்தில் தேவையான பணத்தை கொடுத்து ‘‘நீ ஊருக்குச் சென்று அப்பா, அம்மாவை போய்ப் பார்… திரும்பி வந்து நீ பெற்றுக்கொள்ளும் வரையில் உனது இந்தப் புத்தகம் இங்கேயே இருக்கும்’’ என்றார். நான் பணத்தை பெற்றுக் கொண்டு இராமேசுவரம் சென்று, என்னுடைய குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தேன். ஆனாலும் என் மனம் முழுவதும் அந்தப் புத்தகத்திலேயே இருந்தது.

வீட்டில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு சென்னை திரும்பியதும், மூர் மார்க்கெட் சென்றேன். அந்தக் கடைகாரர் தான் சொல்லியபடியே அந்தப் புத்தகத்தை பத்திரமாக வைத்திருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த புத்தகக் கடைக் காரர் எனக்கு உதவி புரிந்ததை இந்தக் குறள் நினைவூட்டுகிறது.

- நல்வழி நீளும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x