Published : 20 Jul 2015 10:31 AM
Last Updated : 20 Jul 2015 10:31 AM

சர் எட்மன்ட் ஹில்லரி 10

முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்த சர் எட்மன்ட் ஹில்லரி (Sir Edmund Percival Hillary) பிறந்த தினம் இன்று (ஜூலை 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l நியுசிலாந்து நாட்டின் ஆக்லாந்து (Auckland) நகரில் பிறந்தவர் (1919). தேனீக்களை வளர்த்து, தேன் சேகரிப்பது இவர்களது குடும்பத் தொழில். எப்போதும் புத்தகங்களைப் படிப்பதிலும் சாகசங்கள் நிறைந்த கற்பனை உலகிலும் பொழுதைக் கழித்தார். உயர் கல்வி கற்கும் சமயத்தில் நிறைய புத்தகங்களைப் படித்தார்.

l இதனால் தன்னம்பிக்கை மிக்கவராக மாறினார். 16 வயதில் பள்ளியில் ராபியூ மலைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மலையேறுவதில் இவருக்கு ஆர்வம் பிறந்தது. ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் கணிதம், மருத்துவம் பயின்றார்.

l 20 வயதில் தெற்கு ஆல்ப்ஸ் மலைக்கு அருகில் இருந்த மவுன்ட் ஆலிவர் என்ற 12 ஆயிரம் அடி உயர மலையில் தன் சகோதரருடன் ஏறினார். ரேடியன்ட் லிவிங் என்ற மலை ஏறுவோருக்கான அமைப்பில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது விமானப்படையில் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது, வார இறுதிகளில் அருகில் இருந்த மவுன்ட் எக்மென்ட் மலையில் ஏறுவார்.

l இந்த காலகட்டத்தில் மலை ஏறும் சாகசத்துக்கு கிட்டத்தட்ட அடிமையாகி விட்டார் என்றே சொல்ல வேண்டும். மலை ஏற்றம் குறித்த புத்தகங்களைப் படித்தார். சாகச ஆர்வம் பெருக்கெடுத்தது. 11 வெவ்வேறு மலைச் சிகரங்களைத் தொட்டுவிட்ட இவர் இமயத்தின் சிகரத்தை எட்ட வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினார்.

l தொடர்ந்து சிகரங்களை எட்டி சாதனைகள் படைத்து வந்த இவர், இமயமலையேறும் பிரிட்டன் குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்தக் குழு இமயமலை ஏறும் முயற்சியைத் தொடங்கியது. 1935-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் வாரன், தன்னுடன் மலை ஏறிய டென்சிங்கை, ஹில்லரிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

l 1920 முதல் 1952 வரை பல்வேறு மலை ஏறும் குழுக்களால் பல முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியிலும் உயிர் பலியிலும் முடிந்தன. இவர் மனம் தளரவில்லை. 1953-ல் பிரிட்டன் குழு மீண்டும் இமயத்தின் சிகரத்தைத் தொட ஒரு முயற்சியை மேற்கொண்டது.

l கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட எட்மன்ட் ஹில்லரியும் டென்சிங்கும் தன்னம்பிக்கைத் தளராமல் தொடர்ந்து ஏறினர். மே 29 அன்று காலை சுமார் 11.30 மணிக்கு இவர்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தனர். அப்போது ஹில்லரிக்கு வயது 34.

l விடா முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தொடர்ந்து முயற்சி செய்து லட்சியத்தில் வெற்றி பெற்றவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. சிகரத்தை எட்டிய இவர்கள் இந்தியா, பிரிட்டன், நேபாளம், ஐ.நா. சபையின் கொடிகளை அங்கு பறக்கவிட்டனர்.

l இவர்களது சாதனையை உலகம் முழுவதும் போற்றிக் கொண்டாடியது. சிகரத்தை எட்டிய சாதனையே போதும் என்று நினைக்காமல், 1958-ல் தென்துருவத்தை அடையும் புதிய சாதனைப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றியடைந்தார் ஹில்லரி. இமயத்தின் அருகில் உள்ள நேபாள மக்களின் நலவாழ்வில் கவனம் செலுத்தினார்.

l ஹிமாலயன் டிரஸ்ட் என்ற அமைப்பை 1960-ல் தொடங்கினார். இந்த அறக்கட்டளை மூலம் பள்ளிகள், மருத்துவமனைகள், விமான தளங்களை அமைத்துக் கொடுத்தார். நேபாளத்தின் கவுரவ குடிமகன் என்ற பெருமை இவருக்கு வழங்கப்பட்டது. இமாலய சாதனையை நிகழ்த்தி உலக வரலாற்றில் முக்கிய தடம் பதித்த எட்மன்ட் ஹில்லரி, 2008-ல், 89-ம் வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x