Last Updated : 23 Nov, 2014 10:13 AM

 

Published : 23 Nov 2014 10:13 AM
Last Updated : 23 Nov 2014 10:13 AM

ஈரம் காயாத கிணற்றடிகள்

நினைவறியும் பருவத்தில் நான் பார்த்த முதல் நீர்நிலை எங்கள் வீட்டுக் கொல்லையில் இருந்த கிணறுதான். பூமிக்குள் புதைத்து வைத்த ஒரு பெரிய வட்டக் கண்ணாடி போலிருக்கும் அந்தக் கிணறு. அதைப் பார்த்துக்கொண்டிருப்பதே அத்தனை அலாதி! ஒரு சிட்டுக்குருவி அந்தக் கிணற்றுக்கு அடிக்கடி வந்துபோகும். ‘விசுக்’கென்று கிணற்றுக்குள் நுழைந்து நீரில் முக்கி எழுந்து பறந்து வெளியேறும் அந்தக் குருவி குளிக்கிறதா? இல்லை தண்ணீர் குடிக்கிறதா என்று அம்மாவிடம் கேட்பேன். “ரெண்டும்தான்டா” என்று அம்மா சொல்லும்.

எங்கள் தளத்தெரு கிராமத்தில் அப்போது கிணறு இல்லாத வீடுகள் இல்லை. திண்ணையில் தொடங்கும் எல்லா வீடுகளும் கிணற்றடியில்தான் முடியும். பல்லாண்டுகளாக அடுக்களையில் சிறை கிடந்தனர் நமது பெண்கள் என்பார்கள். அந்தச் சிறையை இரண்டாகப் பிரிக்கலாம். வீட்டுக்குள் அடுப்படி. கொல்லைப் பக்கம் கிணற்றடி. திண்ணையும் கிணற்றடியும் ஒரு வகையில் ஆணாதிக்கம்-பெண்ணடிமைத்தனத்தின் குறியீடுகள். திண்ணையில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து, வெற்றிலையைக் குதப்பியபடி, ஆண்கள் ஊர்க் கதை பேசிக் கொண்டிருப்பார்கள். கிணற்றடியில் பெண்கள் பாத்திரம் துலக்குவார்கள் அல்லது துணி துவைப்பார்கள்.

அக்கால தெருக் காட்சிகளின் பின்னணி இசையாக, கிணற்றடியில் பெண்கள் நீர் இரைக்கும் ஓசைகளே நிறைந்திருந்தன. வீட்டுக்கு வீடு கிணறுகளின் அளவுதான் மாறுபடும். ஆனால், எல்லா வீடுகளிலும் நீர் இரைப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான்.

காய்த்துப்போன கரங்கள்

முதலில் தாம்புக் கயிற்றில் இரும்பு வாளியால் நீர் இறைக்கும் முறையே இருந்தது. காலப்போக்கில் சகடைகள் (நீர் இறைக்கும் உருளைகள்) வந்தன. மரச் சகடைகள், இரும்புச் சகடைகள் என இரு வகை உண்டு. அதில் கயிற்றுக்குப் பதில் ஈரத்தில் இற்றுப் போகாத இரும்புச் சங்கிலிகள் பயன்படுத்தப்பட்டன. மின்சார தானியங்கி நீர் இறைக்கும் கருவிகள் வரும்வரை, பெண்கள் கிணற்றடியின் கொத்தடிமைகளாகவே இருந்தனர். நீர் இறைத்து நீர் இறைத்து அவர்களின் மெல்லிய உள்ளங்கைகள் காய்ச்சிக் கிடந்தன.

பெண்கள் வேலைச் சுமை தெரியாமல் கிணற்றடியில் நாள் முழுதும் உழைக்க, பக்கத்து வீட்டுப் பெண்களின் வாயும் செவியுமே பொழுதுபோக்காக இருந்தன. வேலை பார்த்தபடி அவர்கள் பேசிக்கொள்ளும் கதைகளெல்லாம் அவரவர் கணவன்மார்களின் புகழ்புராணங்கள்தான். தனியே இருக்க நேர்ந்தால் மனசுக்குப் பிடித்த சினிமா பாடல்களை முணுமுணுப்பார்கள். பக்கத்து வீட்டு வனஜாக்கா மாலை நேரங்களில் கிணற்றில் நீர் இறைக்கும் நேரங்களில் முணுமுணுக்கும் ஒரே பாடல் ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே...’

வீட்டுக் கிணறுகள் தவிர ஊருக்குள் வேறு சில குடிதண்ணீர்க் கிணறுகள் உண்டு. அதற்குப் பெயர் ‘நல்ல தண்ணீர்க் கிணறு’. சிவன் கோயில் தண்ணீரின் சுவை சுமாராக இருக்கும். ஆனால், பக்கத்திலேயே இருக்கும் தங்க மாரியம்மன் கோயில் கிணற்றுத் தண்ணீரின் சுவையோ தேன் சுவை. ஆண்டு முழுவதும் ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் தாராளமாகத் தண்ணீர் வார்த்த அந்தக் கிணற்றின் வற்றாத நீர் வளத்தை இப்போது நினைத்தாலும் வியப்பாகவே இருக்கிறது. இவை தவிர ஊருக்கு நடுவாந்தரமாக ஒரு பொதுக்கிணறும் இருந்தது. அதற்குப் ‘பாழும் கிணறு’ என்று பெயர். அது எப்போதோ தூர்ந்துபோய்க் கிடந்தது. அந்தக் கிணறுபற்றி ஊருக்குள் நிலவிய மர்மக் கதைகளை இப்போது நினைத்தாலும் வியர்த்துவிடும்!

பாதாளக் கரண்டி

என் வீட்டுக் கிணற்றுச் சகடைத் தூண்கள் இரண்டிலும், இரண்டு விளக்கு மாடங்கள் இருக்கும். அவற்றில் பெரிய கார்த்திகை இரவுகளில் மட்டும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்படும். மற்ற நேரங்களில் கோபால் பல்பொடியும் புலி மார்க் சீயக்காய் பாக்கெட்டுமே அந்த மாடங்களில் இருக்கும். கிணறு என்றவுடன் நினைவைத் தூண்டிலிட்டு இழுக்கும் இன்னொரு உபகரணம் ‘பாதாளக் கரண்டி.’ கிணற்றில் தவறி விழும் பண்ட பாத்திரங்களையோ அல்லது நீர் இழுக்கும் வாளியையோ கிணற்றுக்குள் துழாவிக் கண்டெடுக்கும் கருவி. நீளமான ஒரு இரும்புக் கம்பியின் நான்கு பக்கத்திலும், கருவேல மரத்தின் முட்கிளைகளைப்

போல பல அளவுகளில், பல வளைவு வடிவங்களில் கொக்கி

கள் பின்னப்பட்டிருக்கும். அதை தாம்புக் கயிற்றில் கட்டி கிணற்றுக்குள் விட்டுத் துழாவுவார்கள். தவறி விழுந்த எந்தப் பொருளும் ஏதாவதொரு கொக்கியில் மாட்டிக்கொண்டு மேலே வரும். அதை வேடிக்கை பார்ப்பதற்கு அக்கம்பக்கத்திலிருந்து பொடிசுகள் கூட்டம் கூடிவிடும்!

காற்றில் கரைந்த ஈரம்

கிணறு இருந்த அந்த வீட்டை விற்றாகிவிட்டது. இன்று ஊருக்குப் போகும்போதெல்லாம் வேறொருவருக்குச் சொந்தமாகிவிட்ட என் வீட்டுக் கிணற்றையும் எங்கள் வடக்குத் தெருவின் சில வீட்டுக் கொல்லைக் கிணறுகளையும் வெகுநேரம் பார்த்தபடி அசைவற்று நிற்கிறேன். ஒருகாலத்தில் எப்போதும் ஈரம் உலராத கிணற்றடிகள் இப்போது காய்ந்துபோய்க் கிடக்கின்றன. அதன் அருகில் ஆள் நடமாட்டம் இல்லை.

நீர் தளும்பும் கிணற்றுத் தொட்டிகளில் சருகுகள் மண்டிக் கிடக்கின்றன. துணி துவைக்கும் ‘பவர்லைட் சவுக்கார’ வாசனை இல்லை. கோபால் பல்பொடி, பயோரியா பல்பொடி வாசனைகள் இல்லை. சகடைத் தூண்களின் விளக்கு மாடங்களில் குளவிக் கூடும் புளியங்கொட்டைகளும் தென்படுகின்றன. கிணற்றுக்குள் போடப்பட்டிருக்கும் மின்சார நீர் இரைக்கும் குழாய் வழியே, சத்தமின்றி தண்ணீர் வீட்டுக்குள் சென்றுவிடுகிறது. இப்போதெல்லாம் தங்கள் அழகை ரசிக்க ஆளில்லாமல், தனிமையில் உறைந்து நிற்கின்றன கிணறுகள். பழைய நண்பர்கள் பார்க்க வந்தால் ஒரு புன்னகைத் துளியைச் சிந்துகின்றன. அவை கிணற்றின் நீர் அல்ல, நம் மனதின் ஈரம்!

- எஸ்.ராஜகுமாரன், எழுத்தாளர்- ஆவணப்பட இயக்குநர், தொடர்புக்கு: s.raajakumaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x