Last Updated : 26 Aug, 2014 09:45 AM

 

Published : 26 Aug 2014 09:45 AM
Last Updated : 26 Aug 2014 09:45 AM

வேலைவாய்ப்பில் யாருக்கு முன்னுரிமை?

அரசு பணியிடத்தில் யார் யார் முன்னுரிமை பெற முடியும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமை பதிவு செய்வோர் யாரிடம் சான்று பெற வேண்டும் உள்ளிட்டவை குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம. மகேஸ்வரி விளக்குகிறார்.

வேலைவாய்ப்பில் யாருக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது?

ஆதரவற்ற கணவரை இழந்தோர், கலப்புத் திருமணம் செய்தவர்கள், முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தோர், அரசு பயன்பாட்டுக்காக சொந்த நிலங்களை வழங்கியோர், இலங்கை அகதிகள், பெற்றோர் இல்லாத ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமைப் பதிவு செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலக முன்னுரிமை பதிவு செய்ய என்ன சான்று வழங்க வேண்டும்?

ஆதரவற்ற கணவரை இழந்தோர் மற்றும் ஆதரவற்றோர் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வருவாய் கோட்டாட்சியரிடம் சான்று பெற வேண்டும். கலப்பு திருமணம் புரிந்தோர் வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் மட்டத்தில் பெறப்பட்ட சான்று, முன்னாள் ராணுவத்தினரைச் சார்ந்தோர் முன்னாளர் படை வீரர் நல அலுவலக உதவி இயக்குநரிடம் சான்று பெற வேண்டும். நில எடுப்பு முன்னுரிமையின் கீழ் மாவட்ட ஆட்சியர் மற்றும் நில எடுப்பு தாசில்தாரிடம் சான்று, இலங்கை அகதி எனில் வட்டாட்சியர் சான்று, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வு அலுவலரிடம் சான்று பெறவேண்டும். இந்தச் சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலக பதிவின்போது இணைத்து வழங்கினால் முன்னுரிமை பதிவு செய்யப்படும்.

எந்த சதவீதத்தில் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது?

அரசுத் துறையில் உள்ள ஒவ்வொரு காலிப் பணியிடத்துக்கும் 1:5 என்ற சதவீதத்தின் கீழ் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படும். அந்த ஐந்து நபர்களில் ஒரு மாற்றுத்திறனாளி பரிந்துரைக்கப்படுவார். அதுபோல் ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் செய்தவர்கள் என்ற முன்னுரிமை வரிசைப்படி அரசுத் துறை காலிப்பணியிடங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆதரவற்ற கணவரை இழந்தோர் வரிசையில் முன்னுரிமை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?

வருவாய் கோட்டாட்சியரிடம் பெறபட்ட சான்றிதழ் இரு நகல்கள். அந்த நகல்கள் சான்றொப்பம் (அரசு அதிகாரிகளிடம் பெற வேண்டும்) பெற்றிருக்க வேண்டும். அதுபோல் சான்றொப்பம் இடப்பட்ட குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்பற்றோர் அடையாள அட்டை மற்றும் முன்னுரிமை கோரும் மனு ஆகியவை ஆதரவற்ற விதவை வரிசையில் முன்னுரிமை பதிவு செய்ய தேவையான ஆவணங்களாகும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x