Last Updated : 10 Jul, 2018 10:57 AM

 

Published : 10 Jul 2018 10:57 AM
Last Updated : 10 Jul 2018 10:57 AM

காற்றில் கரையாத நினைவுகள்! 19: பண்டிகை, பலகாரம், புத்தாடை!

ஒரு நுகர்வில் ஏற்கெனவே முழுமையாக தயாரிக்கப்பட்டவற்றை சமூகம் தேர்ந்தெடுக்கத் தொடங்கினால் மற்றவற்றிலும் அதைக் கடைப்பிடிக்கும் என்பதற்கு சாட்சியாக இன்றைய பண்டிகைகள் குறித்த அணுகுமுறைகள் இருக்கின்றன.

புதுத்துணி என்பது மகிழ்ச்சியான ஒன்றாக இருந்த காலம் உண்டு. அடுத்த நாள் புதுத்துணி போடப்போகிறோம் என்றால் முதல் நாளே மனத்தில் மகிழ்ச்சி மத்தளமடிக்கும். முழுஆண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்படும்போது அடுத்த நாள் புதுப் பேனா, புதுநோட்டு, புதுப் பை, புதுச் சீருடை என அனைத்தும் புத்தம்புதிது என்பதில் மெத்த மகிழ்ச்சி ஏற்படும்.

துணி எடுப்பது ஒரு பக்கமென்றால், அதைத் தைப்பது இன்னொரு பக்கம். கோடை விடுமுறையில் சீருடைக்கான துணியும், ஆண்டுக்குத் தேவையான வண்ணத் துணிகளும் எடுக்கப்படும். அன்று ஆண்டுக்கான நுகர்வு மனப்பான்மை பல நேர்வுகளில் இருந்தது. வருடம் முழுவதும் தேவையான பருப்பு, புளி, அரிசி ஆகியவற்றை ஒரே சமயத்தில் வாங்கி வைப்பர். ‘வருடத்துப் பண்டம்’ என்று அவற்றை அழைப்பார்கள். துணிகளிலும் அதே அணுகுமுறை.

‘ஊதா கலரு’ சட்டை

பள்ளி திறக்கப்படுகிறது என்றால் விடுமுறை முடிந்து நண்பர்களைப் பார்க்கும் ஆர்வமும், புதுச் சீருடையுடன் போகும் குதூகலமும் இதயத்தில் ஏறிக்கொள்ளும். எங்களுக்கு தொடக்கப் பள்ளியில் வெள்ளைச் சட்டை, நீலக் காற்சட்டை. உயர்நிலைப் பள்ளியில் வெள்ளைச் சட்டை, காக்கி காற்சட்டை. வெள்ளையும் மருவி மருவிநாளடைவில் காக்கிக் கலருக்கு வந்துவிடும். சிலர் நீலத்தை கண்டபடி கலந்து ‘ஊதா கலர்’ சட்டையுடன் வருவார்கள். அன்று சொட்டு நீலமெல்லாம் இல்லை.

பெற்றோரே தொடக்கத்தில் பிள்ளைகளுக்குத் துணியெடுத்து வருவார்கள். பிறகு, கொஞ்சம் வளர்ந்ததும் குழந்தைகளை அழைத்துச் சென்றாலும் பெற்றோரே துணிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் பெற்றோர் தேர்வு செய்ததில் எது வேண்டும் என்பதை பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் விருப்புரிமை மட்டும் வழங்கப்படும். தோளுக்கு வளர்ந்ததும் துணியெடுக்க பணம் தரப்படும். அதற்குள் விருப்பமானதை எடுத்து வரலாம். அப்போது 500 ரூபாயைத் தாண்டினால் கடைக்காரர் மஞ்சள் பை ஒன்றை இலவசமாகத் தருவார். அதைப் பெறுவதற்கு சிலர் வாக்குவாதம் நடத்துவார்கள். துணியெடுத்து திரும்பி வரும்போது சிற்றுண்டிச்சாலையில் அனைவருக்கும் உணவு. அந்த உணவு அவ்வளவு தித்திப்பு.

தீபாவளிக்கு மட்டும் சிறப்பாக அதிகப் பணத்தில் துணியெடுத்துத் தருவார்கள். துணியைத் தைத்துக் கொடுக்க குடும்பத் தையல்காரர் இருப்பார். அவர் தைத்துக்கொடுக்க கடைசி வரை இழுத்தடிப்பார். அதைத் தைத்து வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். விடியும் வரை காத்திருந்து வாங்கி வந்த நிகழ்வுகளும் உண்டு.

முற்றத்தில் சிரிக்கும் கோலம்

பண்டிகைகள் அன்று ஆண்டு முழுவதும் உண்டு. அவற்றுக்காக சின்னச் சின்ன பலகாரங்கள் வீட்டிலேயே செய்யப்படும். ஆடி முதல் தேதி தேங்காய் சுடுவது; கார்த்திகைக்குப் பொரி; சரஸ்வதி பூஜைக்கு கடலை, பொரி, சுண்டல்; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்துக்கு பாயாசம்; பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை என்று எளிய பலகாரங்கள் அக்கம்பக்கத்து வீடுகளை ஒன்றிணைத்தன. ஆளுக்கொரு பணி செய்தால் மட்டுமே பண்டிகை சிறக்கும்.ஆயுத பூஜைக்குப் பிள்ளைகள் அனைவரும் கதவு, ஜன்னலைத் துடைக்க வேண்டும். பிறகு அவற்றுக்கு பொட்டு வைக்கப்படும். அத்தனை உபகரணங்களும் சுத்தமாக்கப்படும்.

முதல் நாள் பூஜை போட்டவரே அடுத்த நாள் பூஜை போடும் வரை அவற்றை எடுத்து உபயோகிக்க முடியாது. புத்தகங்கள் அனைத்தையும் பூஜைக்கு வைத்துவிடுவோம். பொங்கலன்று இரவு அக்காமார்கள் வாசலில் பல மணி நேரம் பிரயாசப்பட்டு பெரிய பெரிய கோலம் போடுவார்கள். செம்மண் சரிகையுடன் வெள்ளைக் கோலங்கள் வீட்டு முற்றத்தில் சிரிக்கும். வீடுகளில் முறுக்கை அடைக்கும் டின்கள் கட்டாயம் இருக்கும்.

சீடை எப்படி இருக்கும்?

பண்டிகைகளில் எதற்கும் இல்லாத சிறப்பு நகர்ப்புரத்தில் தீபாவளிக்கு உண்டு. பெரும்பாலும் முறுக்கு அல்லது காராபூந்தி. அம்மாவே தயாரிக்கும் லட்டு, அல்லது மைசூர் பா. அவ்வப்போது கொசுறாக அதிரசம். கிருஷ்ணர் ஜெயந்தியை சில மாணவர்கள் சீடையோடு கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்குசீடை என்றால் தெரியாது. சொன்னவனை ‘கொண்டுவந்து காட்டு’ என்றேன். அவனும் ‘நாளை கொண்டு வருகிறேன்’ என ஒவ்வொரு நாளும் சொல்லி கடைசி வரை கொண்டுவரவே இல்லை.

இன்று எல்லாம் தயார்நிலையில் கிடைக்கின்றன. வாசலில் ஒட்டுகிற நெகிழிக்கோலங்கள். ஏனென்றால் இன்று பலருக்கு குனிந்தால் நிமிர முடியாது. தரையிலே அமர்ந்து கோலமிட இயலாது. சீடை, முறுக்கு என பண்டிகைக்குத் தகுந்தவாறு பொட்டலம் கட்டி விற்பனைக்குத் தயார். பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டைகள் விற்கப்படுகின்றன.

தீபாவளிக்குப் பல்வேறு இனிப்புகளை வாங்கி வர சீட்டுப்போடும் பழக்கம் பல இடங்களில் முளைத்துவிட்டன. யாரும் சிரமப்படாமல் பண்டிகைகளைக் கொண்டாடிவிடுகிறார்கள், எந்தத் திருப்தியும் இல்லாமல்.

உல்லாசம் பொங்கும் தீபாவளி அப்போதெல்லாம் தைக்காமல் ஆயத்த ஆடையை வாங்கி வருவது கவுரவக் குறைவு. கடைசி நாளில் ஊக்கத்தொகை (போனஸ்) பெறுபவர்கள் அவசரத்துக்காக வாங்கி உடுத்துவது ஆயத்த ஆடை என்கிற அபிப்பிராயம் இருந்தது. இப்போது பெரும்பாலானோர் தைத்த உடைகளுக்குத் தாவிவிட்டார்கள். உடையைவிட தைப்பதற்கு அதிக செலவாகும் காலம்.

உடை உடலோடு ஒட்டியிருக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. தொளதொளவென அணிந்தாலும் தொல்லையில்லை என்பது இன்றைய நாகரிகம். அடுத்தவர் அணிவதைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்கிற மேற்கத்திய பண்பாடு நமக்குள்ளும் ஊடுருவி விட்டது. பண்டிகை என்றால் அன்று பகிர்வதே அடையாளமாக இருந்தது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு விநியோகிப்பதே பண்டிகையின் நோக்கம். அக்கம்பக்கம் இருக்கும் ஏழைபாழைகளுக்கு இனிப்பையும், பலகாரங்களையும் வழங்குவது முறை. பண்டிகை அன்று நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள். அப்பாவின் நண்பர்கள், அம்மாவோடு பணிபுரிந்தவர்கள் என அனைவரின் வருகையால் வீடு அல்லோகலப்படும்.

அதிகாலை 3 மணிக்கே தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் கொள்வார்கள். 6 மணிக்கெல்லாம் வருபவரை வரவேற்கத் தயார். அண்டை வீடுகளில் இருந்து தட்டில் பலகாரங்கள் தவழ்ந்து வரும்.

வந்த தட்டை சொந்தப் பலகாரங்களால் நிரப்பி அனுப்புவார்கள். இப்போதும் சில இடங்களில் இருக்கிறது சன்னமாக இந்தப் பழக்கம். சென்ற தீபாவளிக்கு தெரிந்த ஒருவர் ‘ஹோம் மேட் ஸ்வீட்ஸ்’ எனச் சொல்லி ஒரு பொட்டலத்தை அன்போடு கொடுத்துச் சென்றார். மறுபடியும் அந்த அன்பைக் கலந்து செய்யும் அதிசயம் முளைக்காதா என்று அதில் இருந்த அதிரசங்கள் நினைக்கத் தூண்டின.

அழையாமல் போகாதே...

இப்போது பண்டிகையின்போது எல்லோருக்கும் அவர்களுக்கான பரப்புவெளி தேவைப்படுவதால் நண்பர்கள் வந்து அளவளாவும் நிகழ்வுகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இப்போது பல வீடுகளில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பாகும் படங்களைப் பார்ப்பதில் மட்டுமே மக்கள் மும்முரம் காட்டுகிறார்கள். யாரேனும் தெரியாமல் வந்துவிட்டால் அவர்கள் அழையா விருந்தினராகவே நடத்தப்படுவார்கள்.

இப்போதும் முதல் நாள் வரை ஊக்கப்பணம் (போனஸ்) வரும் என்று காத்திருப்பவர்களையும், அவர்கள் எதிர்பார்த்த தொகை கிடைக்காமல் போவதையும் பார்க்க நேரிடுகிறது. ‘நம் தந்தையும் நல்ல துணி வாங்கித் தருவார்’ என்று வாசலை நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கும் அந்தக் குழந்தைகள் இப்போதும் கண்ணீரின் விளிம்பில் கலங்கித் தவிக்கின்றனர்.

நோகாமல் நோன்பு கொண்டாடுபவர்கள் ஒருபுறமும், நோன்பே நோயாக மாறும் அவல நிலையில் சிலர் இன்னொருபுறமும் இருக்க வாழ்க்கை எப்போதும் சீனப் பெருஞ்சுவர்களுக்கு இடையே நிகழ்கிற நாடகமாகத் தொடர்கிறது.

- நினைவுகள் படரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x