Last Updated : 19 Jun, 2018 09:52 AM

 

Published : 19 Jun 2018 09:52 AM
Last Updated : 19 Jun 2018 09:52 AM

மேனிலைப் பள்ளி

நாங்கள் பத்தாம் வகுப்பு சேரும்போது தமிழகக் கல்விச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. கல்லூரியில் புதுமுக வகுப்பை நிறுத்திவிட்டு, பள்ளியிலேயே மேனிலை வகுப்பைத் தொடங்குவது என்று முடிவு. நாங்களே முதல் அணி. அதுவரை பள்ளி இறுதி என்பது பதினொன்றாம் வகுப்பு வரை. எங்களுக்கு முதல் அணி பத்தாம் வகுப்பில் படித்த புத்தகங்களையே பதினொன்றிலும் படித்தார்கள். எங்களுக்கு அனைத்திலும் புதிய அனுபவங்கள். இளம் பொறியியல், இளம் வேளாண்மை போன்றவை 5 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டன.

சில பள்ளிகளுக்கு மட்டுமே முதலாண்டு மேனிலை வசதி அளிக்கப்பட்டது. அவ்வாறு அட்சதை தூவப்பட்ட பள்ளிகளில் எங்களுடையதும் ஒன்று. அந்தப் புதிய முயற்சி, பள்ளிகளுக்குப் பெரிய அதிர்ச்சி. விட்டத்தில் தாவியது போன்ற பளு கொண்ட பாடத் திட்டம். ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பாடம் நடத்திய ஆசிரியர்களையே மேனிலைப் பள்ளியில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் நடத்த நியமித்தார்கள். படித்ததை அவர்கள் மறந்து வெகுகாலம் ஆன பிறகு, மீண்டும் தூசி தட்டியெடுத்துப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய நிலை.

பூனைக்கு புலியின் வால்

நாங்களோ கல்லூரி முதிர்ச்சியும் இல்லாமல், பள்ளி மனநிலையும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாய் இருந்தோம். சட்டையைவிட பனியன் நீளமாக இருப்பதைப் போன்ற பள்ளிப் பருவத்தின் நீட்டிப்பாய் அம் மேனிலை அனுபவம் இருந்தது. பள்ளியைப் போன்ற சீருடை, அதே வகுப்பறைகள், காலையில் பிரார்த்தனை, நடுவே விளையாட்டுப் பாடம் என பூனைக்குப் புலியின் வாலாய்ப் பொருந்தாமல் இருந்தது அந்த அணுகுமுறை. வெகு சில பள்ளிகளே மேனிலைப் பள்ளி என்பதால், நகரின் மையத்தில் இருந்தும் மாணவர்கள் எங்கள் பள்ளிக்குப் படையெடுத்தார்கள். விஜயராகவன் என்பவர் மருத்துவராகும் ஆசையில் மல்லசமுத்திரத்தில் இருந்து வந்து சேலம் சந்திப்பில் அறையெடுத்துத் தங்கிப் படித்தார்.

வாழ்க்கை பற்றிய பெரிய கனவுகளோ, மாபெரும் செயல்பாடுகளோ, எக்கச்சக்க எதிர்பார்ப்போ இல்லாத காலம். அப்படிப்பட்ட மாணவர்கள் அதிகம் நிறைந்த பள்ளி. என்ன படிப்பு, மேலே எங்கு படிப்பது, எதற்கு வேலைவாய்ப்பு என்று எந்த மண்ணும் தெரியாதவர்கள் அவர்கள். கிடைத்ததைப் படிப்பதும், படிப்பதில் மகிழ்வதுமே அன்றைய கல்வி.

மேனிலை வகுப்புக்காக, எல்லாப் பள்ளிகளிலும் திடீர் பரிசோதனைக் கூடங்கள் முளைத்தன. அப்போது வேதியியல் பரிசோதனை களுக்கு வெள்ளை மேலங்கி அணியும் வழக்கம்கூட கிடையாது. விலங்கியல் வகுப்பில் அறுவை உண்டு. கரப்பான்பூச்சிகளின் வாய் பாகங்களை மென்மையாக எடுத்து, அழகாக அடுக்கி, பாகங்களை எழுதிக் காண்பித்தால் முழு மதிப்பெண்கள். அதற்காக வீட்டில் கரப்பான் வேட்டை நடக்கும்.

மயக்கம் தெளியும் தவளைகள்

அடுத்தது தவளை அறுவை. புதிதாக முளைத்த செய்முறை வகுப்புகள் என்பதால், தவளையைக் கொள்முதல் செய்வதில் தகராறு. எனவே, நாங்களே எங்களுக்கான தவளைகளைப் பிடித்துவர வேண்டும். இன்று பல பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள் மாணவர்களைப் பிடிப்பதுபோல, அன்று நாங்கள் தவளையைப் பிடிக்க குளங்களிலும், குட்டைகளிலும் அலைந்தோம். தப்பாகத் தேரையைப் பிடித்துவிடக் கூடாது. கிடைக்கிற தவளை பெரிதாக இருந்தால் பலகையில் அறைவது எளிது, பாகங்களைக் குறிப்பதும் எளிது. 4 கால் களையும் ஆணியால் அடித்து வயிற்றைக் கிழித்ததும், மயக்கம் தெளிந்து சில தவளைகள் துள்ளுவது உண்டு. மனிதர்கள் மட்டுமே மயக்கத்தில் துள்ளுபவர்கள்.

2-ம் ஆண்டில் இறுதி செய்முறைத் தேர்வுக்கு எலி அறுவை சிகிச்சை. அதன் மூளையை அறுவை செய்து பாகங்களைக் குறித்து பார்வைக்கு வைக்க வேண்டும். எல்லா மாணவர்கள் வீட்டிலும் எலிப்பொறி வைத்து அவற்றைப் பிடித்து முன்கூட்டியே பள்ளிக்குத் தரவேண்டும். அவற்றை மயக்க மருந்தில் முக்கி வைப்பார்கள். நாம் பிடித்த எலி நமக்கே வரவேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பிடித்தது பெரிதாக இருக்கலாம்; அங்கு கிடைப்பது சிறிதாக இருக்கலாம். அதுவே விதி. அறுவை செய்தபோதுதான், எலிக்கு அவ்வளவு பெரிய மூளை என்பது தெரிந்தது.

தாவரவியலுக்காக செடிகளைப் பதப்படுத்தி செய்முறைத் தேர்வுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இலைகளைப் பறித்து, செய்தித்தாள்களுக்கு நடுவே வைத்து நன்றாகக் காய்ந்த பிறகு அட்டையில் ஒட்டி ‘ஹெர்பேரியம்’ ஆக்க வேண்டும். சிறப்பான செடிகளை எடுத்து வருவதற்காக தாவரவியல் ஆசிரியர் வீரப்பன் எங்கள் வகுப்பை ஏற்காடு அழைத்துச் சென்றார்.

மின்னும் இயல்பான திறமைகள்

என் நண்பன் ஒருவன் கஷ்டப்பட்டு சேகரித்த தாவரங்களையெல்லாம், அவன் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், கண்ட குப்பைகளெல்லாம் வீட்டில் இருக்கிறது என அவனது பாட்டி தூக்கி எறிந்ததையும், அவன் துடித்துத் தவித்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.

முதலாம் ஆண்டு என்பதால் தேர்வு எப்படி இருக்கும்? வினாக்கள் எவ்வாறு இருக்கும் என்பது எவருக் கும் தெரியவில்லை. தனிப்பாடம் இல்லை, சிறப்பு பயிற்சிகள் இல்லை, வழிகாட்டிக் கையேடுகள் இல்லை. அவரவர்க்குத் தெரிந்த மாதிரி படிப்பது ஒன்றே வழி. வணிக மயமாகாத சூழலில், இயல்பாக இருந்த திறமைகள் மட்டுமே மின்ன முடிந்தது. படித்த பிறகு, விரும்பிய படிப்பை அடைந்தவர் பலர் உண்டு. 75 சதவீதம் பெற்றவர்களுக்கு அரசுக் கல்லூரிகளில் பொறியியல் எளிதில் கிடைத்தது. அப்போது தனியார் பொறியியல் கல்லூரிகள் மருந்துக்குக்கூட இல்லை. மற்ற மாணவர்கள் கலைக் கல்லூரிகளில் மகிழ்ச்சியுடன் சேர்ந்தார்கள். அன்று எதுவும் இல்லை என்றாலும், எதிர்காலம் குறித்த பயமும் இல்லை.

இன்று மேனிலை என்பது அனைவரும் நடுங்கும் கல்வி நிலை. பொதுத் தேர்வு தொடங்குவது பல செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தி. இன்று பெற்றோரும் சேர்ந்து படிக்கிறார்கள். அரிதாக இருந்த மேனிலைப் பள்ளி இன்று குக்கிராமங்களிலும் இருக்கின்றன. தேர்வுகளில் வெற்றி பெற பத்திரிகைகள் ஊர்தோறும் ஊக்க முகாம்கள் நடத்துகின்றன. அரசே மாதிரிக் கேள்வித்தாள் வெளியிடுகிறது. இணையத்தைத் தட்டினால் கேள்வி வங்கி கணக்கற்று வந்து விழுகிறது. மாதிரித் தேர்வுகள் எழுத வினாத்தாள்களை எளிதில் தருவிக்க முடியும்.

அழுக்குக் கூடைத் துணி

புதுமுக வகுப்பு இருக்கும்போது அரிதாய் இருந்த பெண்களின் கல்லூரிப் படிப்பு இன்று மேனிலைப் பள்ளி யால் மேன்மை அடைந்திருக்கிறது. சிற்றூர் மாணவர்களும் சிறகடிக்கிறார்கள். பொறியியல் என்பது குதிரைக்கொம்பாக இருந்த நிலை மாறி, இன்று மாணவர்கள் வர மாட்டார்களா என பல தொழில்நுட்பக் கல்லூரிகள் வாசலில் நின்று துணிக் கடைக்கு கூவுவதுபோல அழைக்கிற நிலை. மறுபடியும் கலை, அறிவியல் கல்லூரிகளின் பொற்காலம் தொடக்கம்.

பிளஸ் 2 என்பது வர்த்தகமாகி விடுகிற சோக நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. அதற்கென்றே இன்று பிரத்யேகப் பள்ளிகள். அங்கு பிளஸ் 2 வகுப்புப் பாடத்தை முதலாண்டே முடித்துவிடுகிற அவலம். அழுக்குக் கூடையில் துணிகளைத் திணிப்பதுபோல, குழந்தைகளின் மூளையில் பாடத்தைத் திணிக்கும் பரிதாபம். மொத்தப் படிப்பையும் நாங்கள் முடித்த தொகையில், தற்போது ஓராண்டுக்குக் கட்டணம் செலுத்தும் சூழல். பள்ளி என்பது அருகில் இருக்கிற இன்னோர் இல்லம் என்பது மாறி, எப்படியாவது கனவுகளை நிறைவேற்றித் தருகிற மாயாஜாலக் கூடம் என்ற எண்ணம் கொண்ட பெற்றோர் அதிகம் உள்ள சூழல். ‘விடுமுறை என்பது விளையாட அல்ல; பயிற்சிக்குச் சென்று மதிப்பெண்களை பலப்படுத்திக்கொள்ள’ என்ற புதிய கண்ணோட்டம். நினைத்தது கிடைக்காவிட்டால், வாழ்க்கையை முடித்துக்கொள்வதில் தவறில்லை என்று எண்ணும் பலவந்தம். எப்படி இருப்பினும், உயர்கல்வி என்ற கரையைச் சேர, தத்தளித்துக்கொண்டிருக்கும் பல கப்பல் களுக்கு கலங்கரை விளக்கமாய் இருக்கிறது மேனிலைக் கல்வி.

- நினைவுகள் படரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x