Last Updated : 18 Jun, 2018 09:30 AM

 

Published : 18 Jun 2018 09:30 AM
Last Updated : 18 Jun 2018 09:30 AM

பிரியாணியும் தமிழ் அரசியலும்!

 

ம்ஜானைப் பற்றி எதையாவது மகிழ்ச்சியாகப் பேச விரும்பும் வெகுஜன மனதுக்குப் பிரியாணி தவிர வேறெதுவும் தெரியவில்லை. பிரியாணி யில் மொத்தமே மூன்று வகைகள்தான். அரிசியையும் இறைச்சியையும் ஒன்றாக வேக வைப்பது; தனித் தனியே வேக வைத்து இறுதியில் கலப்பது; இறுதி வரை கலக்கப்படாதவை.

தமிழக பிரியாணி முதல் வகை. ஒன்றாக வேகவைத்துவிடு கிறார்கள். கண்ணுக்கே தெரியாது, இறைச்சி குழையும் வகையில் வேகவைக்கப்படுகிற முறைகளும் உண்டு. குழைகிறதோ இல்லையோ, ஒன்றின் குணம் இன்னொன்றில் ஏறிவிடுவதுதான் தமிழக பிரியாணி. இதில், இரண்டு வெவ்வேறு அடையாளங்கள் ஒன்றோடொன்று முயங்க வேண்டும். முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், அரிசியும் இறைச்சியும் சம அளவில் இருக்க வேண்டும் என்பதுதான். இதில் தீவிரவாத வகைகளும் உண்டு. அரிசியில் சீரகச் சம்பாதான் என்றும், இறைச்சியில் ஆடுதான் என்று பிடிவாதம் பிடிக்கும் தீவிரவாதிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

வட இந்திய பிரியாணி வகை, அரிசியையும் இறைச்சியையும் தனித்தனியே வேக வைப்பது. அது அது, அதனதன் நறுமண மசாலாக்களுடன் தனித்தனியே வெந்துகொண்டிருக்கும். அடையாளக் கலப்பு என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. இரண்டும் தனித் தனியே வெந்து வந்ததும், பின்னொரு பாத்திரத்தில் இட்டு அவற்றை வம்படியாய் கலக்கும்படிச் செய்கிறார்கள். ஒன்றன் சாரம் இன்னொன்றில் இறங்க இதில் வாய்ப்பில்லை. மேம்போக்காகவே இரண்டும் கலக்கின்றன. தமிழர்களுக்கு இது பிடிக்கிறதில்லை.

 

மூன்றாவது வகை, ஹைதராபாத் பிரியாணி. சிலர் இதைத்தான் ஒரிஜினல் பிரியாணி என்கிறார்கள். இறுதி வரை, அரிசி தனியாகவும் இறைச்சி தனியாகவுமே இருக்கின்றன. இறுதி என்றால், உங்களது தட்டுக்கு வரும் வரை. அடுக்கடுக்காய், வெந்த அரிசியையும் இறைச்சியையும் பாத்திரத்தில் நிரப்புகிறார்கள். இடையில், அரிசியின் மீது போலியான குங்குமக் கலர் ஊற்றுவதும் உண்டு. ‘நானும் இறைச்சி மாதிரிதான்’ என்று அரிசி போடும் போலி வேடம் இது. இந்த வகையில் அரிசியும் இறைச்சியும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தத்தம் அடையாளங்களைத் தொலைப்பது இல்லை. தமிழர்கள் இதைப் பிரியாணி வகையில் சேர்ப்பது இல்லை. அரிசிக்கும் இறைச்சிக்கும் எந்த உரையாடலும் இல்லாமல் என்ன அது பிரியாணி?

இரண்டு வெவ்வேறு அடையாளங்கள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதன் ‘உணவு உவமை’யே பிரியாணி. இஸ்லாமியர்களைப் பற்றிய எந்தவொரு பேச்சும் பிரியாணியில் மையம் கொள்வதற்கு இதுதான் முக்கியமான காரணம். அந்த வகையில் பிரியாணி ஒரு கருத்துருவ பதார்த்தம். உணவையும் பகிர்ந்துண்ணலையும் தவிர எளிய, பிரபலமான வெகுஜன உரையாடல் கூறுகள் வேறு எதுவும் இல்லை. அந்த வகையில் ‘பாய், பிரியாணி இன்னும் வரல!’ என்று சொல்வது மிகச் சிறந்த தமிழுணர்வு!

- டி.தருமராஜ், ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ நூலின் ஆசிரியர். ஆய்வாளர், தொடர்புக்கு: dharmarajant@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x