Last Updated : 15 Jun, 2018 09:59 AM

 

Published : 15 Jun 2018 09:59 AM
Last Updated : 15 Jun 2018 09:59 AM

சுனில் கவாஸ்கர் கொடுத்த மோசமான ‘ஐடியா’

 

உலகெங்கும் டெஸ்ட் போட்டிகளை எப்படி ரசிகர்களுக்கு உற்சாகமாக, பொழுதுபோக்காக மாற்றுவது என்பது பற்றிய கவலைகளை முன்னாள், இந்நாள் வீரர்கள், நிபுணர்கள், ஆர்வலர்கள் விவாதித்து வருகின்றனர்.

கெவின் பீட்டர்சன் கூட அன்று பட்டௌடி உரையில் சிலபல யோசனைகளைத் தெரிவித்தார், டி20 கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகளை அழிக்காமல் இருக்க வேண்டுமானால் சில புதிய விஷயங்களை பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

ஐசிசியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஒன்றை உருவாக்குவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கு வரவேற்பு கூடும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் யாருமே டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல கிரிக்கெட்டே பொதுவாக பேட்டிங் மையமாக, பேட்ஸ்மென்கள் மையமாக மாறிப்போனதுதான் ஒரு சவாலற்ற தன்மையை உருவாக்கி போட்டிகளை அறுவையாக்குகிறது என்பதைப் பேசவில்லை. பந்தை ஒரு குறிப்பிட்ட ஓவருக்குப் பிறகு தன்மையை மாற்றுவதை ஏதோ உலகமகா கிரிமினல் வேலைபோல் சித்தரிக்கின்றனர், இதை பேசாமல் சட்டப்பூர்வமாக்கலாம்.

ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒரு கலை அதற்கு பந்தின் தன்மையை மாற்றுவது ஒன்றும் பெரிய குற்றமாகப் பார்க்கப்பட வேண்டிய அவசியமில்லை. ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்தின் தன்மையை மாற்றுவதையே விதிகள் மூலம் அனுமதிக்கலாமே. பந்தின் தன்மையை மாற்றக்கூடாது என்பது என்ன எழுதப்படாத புனிதமா? இன்னும் ஏன் விக்டோரியா கால இங்கிலாந்தின் விதிமுறைகளைக் கட்டி அழ வேண்டும், கிரிக்கெட்டே இங்கிலாந்தில் தொடங்கி காலனியாதிக்க ஆயுதமாகி காலனியாதிக்க எதிர்ப்பு ஆயுதமாகி பசுந்தரைகளிலிருந்து கட்டாந்தரைகளுக்கு மாறிவிட்டதே, இன்னும் ஏன் பந்தின் தன்மை என்ற புனிதத்தைக் கட்டி அழ வேண்டும்?

ஆனால் இதனை எதிரணியினர் முன்னிலையில் செய்யுமாறு நடுவர் மேற்பார்வையில் செய்யுமாறு விதிமுறைகளை மாற்றலாம், இப்படிச் செய்தால் பவுலர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும், ஒரு புதிய சவாலும் உருவாகும்.

இந்தியா போன்ற நாடுகள் குழிப்பிட்சைப் போட்டு எதிரணியினருக்கு ஒரு % கூட வாய்ப்பை வழங்காமல் வெற்றிக்கு ஏகபோக உரிமை கொண்டாடுவதும் டெஸ்ட் போட்டிகள் அழிவதற்கு ஒரு காரணம்.

இந்நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர் வஃபாதார் நோ-பால் ஒன்றை வீசினார், அப்போது வர்ணனை அறையில் இருந்த சுனில் கவாஸ்கர், மஞ்சுரேக்கர், சிவராமகிருஷ்ணன் ஆகியோர் இதனை விவாதித்தனர்.

அப்போது கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக்க பவுலர்கள் நோ-பால் வீசினால் ஒருநாள், டி20 போன்று டெஸ்ட்களிலும்  ஃப்ரீ ஹிட் கொடுக்கலாம் என்று சீரியசாகவே ஒரு தெரிவை முன்வைத்தார். ஏற்கெனவே கிரிக்கெட், பவுலர்களை விளிம்புக்குத் தள்ளி பேட்ஸ்மென்கள் மையமாக மாறிவிட்டது குறித்து விவாதித்து வரும் நிலையில் பவுலர்களை மேலும் ஒடுக்க புதிய ஐடியா என மோசமான் யோசனையை பரிந்துரைக்கிறார் கவாஸ்கர்.

ஏற்கெனவே பவுன்சர்கள் 2-க்கு மேல் வீசக்கூடாது என்று இத்தனை பாதுகாப்பு கவசங்கள் வந்து விட்ட காலத்திலும் பிற்போக்கான ஒரு விதிமுறையை வைத்திருக்கிறார்கள், இதனால் பவுலர்கள் கை கட்டப்பட்டது, மேலும் பேட்ஸ்மென்களுக்கு வரும் ஒரு திடீர் ஆச்சரியப் பந்தும் ஒடுக்கப்பட்டது. பவுன்சர் எப்போது வேண்டுமானாலும் வீசுவார் என்ற பயத்தில்தான் பேட்ஸ்மென்கள் முன்னால் வந்து ஆட தயங்குவார்கள், பின் காலில் சென்று ஆடியபடி இருப்பார்கள் இதையும் மீறி முன்னால் வந்து ஆடுவதுதான் சவால், 2 பவுன்சர்கள் முடிந்து விட்டன என்றால் பிறகென்ன சவால் இருக்கிறது, எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் நடந்து வந்து அடிக்கலாமே.

ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரராக, உலகின் தலைசிறந்த பவுலர்கள் வீசும் முதல் பந்தை எதிர்கொண்டு வென்ற ஒரு போராளியான கவாஸ்கர் பவுலர்களை மேலும் ஒடுக்கும்விதமாக நோ-பால்களுக்கு டெஸ்ட் போட்டியில் ஃப்ரீ ஹிட் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார் என்றால் அது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. இப்போதும் எப்போதும் கிரிக்கெட்டில் பவுலர்கள் மேல்தான் கண்காணிப்புக் கட்டவிழ்த்து விடப்படுகிறது, அது மேட்ச் பிக்சிங்கானாலும், பால் டேமரிங் ஆனாலும் ஸ்பின்னர்கள் புதிர்ப்பந்துகளை வீசினால் அவர்களை அழைத்துச் சென்று ஆக்சனைத் திருத்துகிறோன் என்ற பெயரில் ‘காயடித்து’ அனுப்புவது என்று பவுலர்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும் இந்நாளில் பவுலர்களை வலுப்படுத்துவதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க ஒரே வழி. முரளிதரன், சயீத் அஜ்மல், சுனில் நரைன் உள்ளிட்ட எண்ணற்ற புதிர் பவுலர்களை கிரிக்கெட் சிஸ்டம் காயடித்து விட்டது.

சவாலேயின்றி விராட் கோலிகளும், ஸ்மித்களும் வார்னர்களும் உருவான இந்தக் காலக்கட்டத்தில் டெஸ்ட் போட்டி சுவாரசியமானதாக இருக்க வேண்டும் ஆனால் பேட்ஸ்மென்கள் மையமும் அசைக்கப் படக்கூடாது என்று கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையாகச் செயல்படுகின்றன கிரிக்கெட் அமைப்புகள். இதில் சுனில் கவாஸ்கர் போன்ற பெரிய வீரர்கள் நோ-பால்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஃப்ரீ ஹிட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது இன்னொரு பிற்போக்கு பவுலர் அடக்குமுறை யோசனையே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x