Last Updated : 08 Jun, 2018 07:12 PM

 

Published : 08 Jun 2018 07:12 PM
Last Updated : 08 Jun 2018 07:12 PM

காலாவும் மதனசுந்தரியின் கதையும்

'காலா' திரைப்படம் வெளியான அன்று இரவு செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் 'காலா' பற்றிய விவாதம் ஒளிபரப்பானது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஒருவர் பஞ்ச் டயலாக் ஒன்றை கூறினார். அது பின்வருமாறு:

“நேற்று வரைக்கும் 'காலா' படத்தைப் பற்றி பேசாதவனெல்லாம் ஒரு ஆளா என்ற நிலைமை இருந்தது. நாளை முதல், 'காலா' பார்க்காதவனெல்லாம் ஒரு ஆளா என்று பேசப்படும்.”

'காலா' படத்தைப் பற்றி பேசக்கூடாது என்று தவமாய் தவமிருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது என்று ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், நல்ல காலமாக, அதற்கு முந்தைய நாள் இரவே 'காலா' குறித்த ஒரு சிறிய விவாதத்தில் தலையை நுழைத்துவிட்டிருந்தேன்.

ஆனால், இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. நானெல்லாம் ஒரு ஆளா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. என்ன செய்வது? நாட்டு நிலைமை இப்படியாக இருக்கிறது.

'காலா' திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, இது இயக்குனர் ரஞ்சித்தின் முத்திரை பதிக்கும் படமாக இருக்குமா அல்லது ரஜினியின் பேர் சொல்லும் படமாக இருக்குமா என்ற விவாதம் பல இடங்களிலும் களை கட்டிவிட்டிருந்ததைக் கவனிக்க முடிந்தது. படம் ரஞ்சித்தின் தனித்துவமான அரசியலை வெளிப்படுத்தும் படமாகத்தான் இருக்கும் என்று அவரது ஆதரவாளர்களும், 'தலைவர்' பாணி படமாகத்தான் இருக்கும் என்று அவரது ரசிகர்களும்

மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கருத்துகளைப் பதிவிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த விவாதத்தை கவனித்துக்கொண்டிருந்த எனக்கோ வேறு விதமான ஒரு புதிர்க் கதைதான் நினைவிற்கு வந்தது. விக்கிரமாதித்யனுக்கு வேதாளம் சொன்ன புதிர்க் கதை.

கதையின் பெயர் மதனசுந்தரி. அதைச் சற்றுச் சுருக்கமாகச் சொல்கிறேன். துர்க்காபுரி என்று ஒரு நாடு. துர்க்காபுரியில் துர்க்கை அம்மனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்த அம்மனை வழிபட்டு வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. இவ்வாறு இருக்கையில், துர்க்கை அம்மனுக்கு நடக்கும் திருவிழாவில், சுந்தரத்தேவன் என்ற ஒரு இளைஞன் மதனசுந்தரி என்ற பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மயங்கிவிடுகிறான். அவளை மணந்தே ஆகவேண்டும் என்ற ஆசைப்படுகிறான். அவளைத் திருமணம் செய்யத் தனக்கு அருள் புரிந்தால், திருமணமான சில காலம் கழித்து, தன் தலையை காணிக்கையாகத் தருவதாக துர்க்கை அம்மனிடம் வேண்டிக்கொள்கிறான்.

பிறகு, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து, அவள் தகப்பனாரிடம் சென்று அவளைத் தனக்கு மணம் செய்துகொடுக்குமாறு கேட்கிறான். சுந்தரத்தேவனைப் பற்றி விசாரித்து, அவன் தன் மகளுக்குத் தகுதியானவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் மதனசுந்தரியின் தகப்பனும் அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கிறார்.

மதனசுந்தரியைத் திருமணம் செய்துகொண்ட சுந்தரத்தேவன் சில காலம் மாமனார் வீட்டிலேயே மகிழ்ச்சியாக காலத்தைக் கழிக்கிறான். பிறகு, அம்மனிடம் தான் வேண்டிக்கொண்டது நினைவிற்கு வந்துவிடவே, மாமனாரின் அனுமதி பெற்று மதனசுந்தரியோடு தன் ஊருக்குத் திரும்புகிறான். அவர்களுக்குத் துணையாக மதனசுந்தரியின் அண்ணன் தாருகனும் உடன் வருகிறான்.

ஊருக்குத் திரும்பியவுடன், சுந்தரத்தேவன், நேராக கோயிலுக்குச் சென்று, மதனசுந்தரியையும் தாருகனையும் வெளியே நிற்கவைத்து விட்டு, கோயிலுக்குள் சென்று, அம்மனிடம் வேண்டிக்கொண்டபடி, தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுவிடுகிறான்.

சுந்தரத்தேவன் கோயிலுக்குள் சென்று வெகுநேரமாகியும் திரும்பாததால், தாருகன் கோயிலுக்குள் செல்கிறான். அங்கே, தலை அறுந்துகிடக்கும் சுந்தரத்தேவனைக் கண்டு, தன் தங்கையின் வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டதே என்று பெரும் துக்கம் கொண்டு, அவனும் தன் தலையை அறுத்துக்கொண்டு மாண்டுபோகிறான்.

இருவருமே திரும்பிவராமல் போகவே மதனசுந்தரியும் கோயிலுக்கும் செல்கிறாள். இருவரும் இறந்துகிடப்பதைக் காண்கிறாள். இனி தான் உயிர்வாழ்ந்து என்ன பயன் என்று எண்ணி அவளும் தன் தலையை அறுத்துக்கொள்ளத் துணிகிறாள்.

அப்போது, அவள் மீது இரக்கப்பட்டு, துர்க்கை அம்மன் தோன்றி, அவளை ஆசீர்வதித்து, ஒரு தீர்த்தத்தைக் கொடுத்து, இதை இறந்துகிடப்பவரின் உடலிலும் கழுத்திலும் தடவி பொருத்தினால் உயிர்பெற்று எழுவார்கள் என்று அருளி மறைகிறாள்.

மதனசுந்தரியும் இரண்டு உடல்களின் கழுத்திலும் உடலிலும் அம்மன் கொடுத்த தீர்த்தத்தைத் தடவி ஒட்டவைக்கிறாள். ஆனால் பாருங்கள், மகிழ்ச்சிப் பரவசத்தில் தலைகால் புரியாமல், சுந்தரத்தேவனின் உடலில் தன் அண்ணன் தாருகன் தலையையும், தாருகன் உடலில் கணவன் சுந்தரத்தேவனின் தலையையும் பொருத்தி விடுகிறாள்.

சுந்தரத்தேவன் உடலில் தாருகன் தலையும், தாருகன் உடலில் சுந்தரத்தேவன் தலையுமாக இருவரும் உயிர்பெற்று எழுகிறார்கள்.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு வேதாளம், விக்கிரமாதித்தனிடம் கேட்டது, “கல்வி கேள்விகளிலும், ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும், வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவனாகிய மன்னா, இவர்கள் இருவரில் மதனசுந்தரிக்கு கணவன் யார்? தமையன் யார்?”

வழக்கம்போல, விக்கிரமாதித்தன் பதிலைச் சொல்லிவிட வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்கிறது.

கதையை வாசிக்கும் நமக்குத்தான் கொஞ்சநேரத்திற்கு தலை சுற்றிக்கொண்டிருக்கும். (சுற்றாதவர்கள் பாக்கியவான்கள்).

'காலா' படத்திற்கு வருவோம். திரைப்படம் வெளியான அன்று திரையரங்குகளில் ரஜினி ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்து ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாடியதை பல தொலைக்காட்சிகளிலும் காண முடிந்தது.

இயக்குனர் ரஞ்சித்தின் அரசியல் சாய்வுகளை அறிந்தவர்கள், கறுப்பு ஆடையை எதிர்ப்பின் அல்லது திராவிட இயக்கத்தின் குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார் என்று புரிந்துகொள்ளமுடியும். ஆனால், ரஜினி ரசிகர்கள் அவ்வாறுதான் புரிந்து கொண்டாடியிருப்பார்களா? ரஜினியின் ஆன்மிகம் தெரிந்த அவரது ரசிகர்கள், அதை ஏற்றுக்கொள்ளும் அவரது ரசிகர்கள், திரைப்படத்தில் அவர் கறுப்பு ஆடை உடுத்தி வருவதை சபரிமலைக்கு விரதமிருக்க அணிந்ததாக நினைத்து உருகியிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஒரு திரைப்படம் அல்லது எந்த ஒரு காட்சி ஊடகம் வழியாகவும் காட்டப்படும் குறியீடுகளை அனுப்புனர் சொல்லும் பொருளில் பெறுனர்கள் புரிந்துகொள்வதில்லை, புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது தொடர்பியல் ஆய்வுகளில் (Communication Studies) பல தசாப்தங்களுக்கு முன்பாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது.

புகழ்பெற்ற எடுத்துக்காட்டு ஒன்றைச் சொல்வார்கள். அமெரிக்காவில் 1980களில் மிகப் பெரிய வெற்றி கண்ட திரைப்படம் சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்த ஃபர்ஸ்ட் ப்ளட். செவ்விந்தியர்களுக்கு எதிரான கருத்தியல் வன்முறையை செலுத்தும் படம் என்று பரவலான விமர்சனத்திற்கு ஆளான திரைப்படம்.

இப்படத்தை செவ்வியந்தர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முற்பட்ட தொடர்பியல் ஆய்வுத்துறை அறிஞர்கள், செவ்விந்தியர்களிடையே அப்படத்தை திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் மீது வன்முறை செலுத்தப்படுவதைக் காட்டும் படத்தை செவ்விந்தியர்கள் வெறுப்புடன் பார்ப்பார்கள் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், படத்தைப் பார்த்த செவ்விந்தியர்களோ, மிகவும் ஆரவாரமாக ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். படம் முடிந்து விளக்கம் கேட்டதற்கு செவ்விந்தியனைப் போல தோற்றமளிக்கும் சில்வஸ்டர் ஸ்டோலன், வெள்ளையர்களை வேட்டையாடும் படத்தை ரசிக்காமலா இருக்கமுடியும் என்று விடையளித்திருக்கிறார்கள்.

அதாவது, ரஜினி ரசிகர்கள் காலாவை ரஞ்சித் கொடுக்க விரும்பிய அர்த்தங்களை ஏற்றுத்தான் ரசிக்கிறார்களா என்பதே கேள்வி.

வேதாளம் போட்ட புதிருக்குத் திரும்பினால், விக்கிரமாதித்தன் சொன்ன பதில் விசித்திரமானது.

விக்கிரமாதித்தன் சொன்ன பதிலாவது: “அந்த இரண்டு உருவங்களில் எவன் அவளைத் தன் மனைவி என்ற நினைப்பில் பார்க்கிறானோ அவன்தான் அவளுடைய கணவன்!”

 

தொடர்புக்கு: mathi2006@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x