Published : 21 May 2018 03:29 PM
Last Updated : 21 May 2018 03:29 PM

ரஜினி அரசியல்: 53 - கருணாநிதி மீதான மரியாதை

கோவை போஸ்டர்கள், ரஜினி ரசிகர்கள் கைது நடவடிக்கை, அதைத் தொடர்ந்து புறப்பட்ட அவர்களின் ஆவேசம் மற்ற மாவட்டங்களிலும் பற்றிக் கொண்டது. அதன் வீரியம் அடுத்த வாரமே விழுப்புரத்தில் ஒரு சம்பவம் மூலம் கூடுதல் ஆனது.

04.02.2004 அன்று விடியற்காலை. விழுப்புரம் பேருந்து நிறுத்தம். பாமக நிறுவனர் ராமதாஸைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து பாமகவினர் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் மீது வன்னியர் அறக்கட்டளையின் போஸ்டர்களை ஒட்டினார்கள்.

தாங்கள் ஒட்டிய போஸ்டர்களின் ஈரம் காய்வதற்குள் அதன் மீது பாமகவினர் போஸ்டர் ஒட்டியதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், சென்னை -விழுப்புரம் சாலையில் மறியல் செய்யத் திட்டமிட்டுக் குழுமினார்கள். நேரம் செல்லச் செல்ல ரசிகர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் ஆனது. இதற்குள் அங்கு வந்த போலீஸார் ரசிகர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இரண்டு தரப்புமே போஸ்டர் ஒட்டுவதை நிறுத்திவிட்டனர்.

அன்று இரவு எட்டு மணிக்கு, பஸ் நிலையத்திலுள்ள மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற அலுவலகத்தில் குழுமி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அப்போது அங்கு வந்த பாமகவினர் கற்களை வீசினர். அதில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவ, விஷயம் கேள்விப்பட்டதும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்தும் ரசிகர்கள் விழுப்புரத்துக்கு வரத் தொடங்கிவிட்டனர். போலீஸார் அவர்களை ஆங்காங்கே நிறுத்தி சமாதானம் செய்து திருப்பி அனுப்புவதிலேயே இரவு கழிந்தது.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா இரவே மாவட்ட மன்றத்தலைவர் இப்ராஹிமை போனில் அழைத்து விசாரித்தார். மறுநாள் காலையிலும் போனில் கூப்பிட்டு, ‘வழக்கு போட்டிருக்கிறார்களா? நம் மன்றத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா?’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார். இந்த சம்பவங்களையெல்லாம் ரஜினியிடம் கூறி, ‘இனியும் பொறுமை காத்தால் நன்றாக இருக்காது!’ என்று அபிப்ராயம் தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து ரஜினியிடம் கிரீன் சிக்னல் கிடைக்க, சத்தியநாராயணா ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரை அழைத்து, ‘தலைவரின் வாய்ஸ் வரும் என காத்திருக்க வேண்டாம். அவர்கள் போட்டியிடக்கூடிய ஆறு தொகுதிகளில் ஒன்றில் கூட பாமக ஜெயிக்க விடக்கூடாது!’ என அறிவுறுத்தியதாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் சங்கதிகள் புறப்பட்டது. அதுவே ரஜினியிடமிருந்து ரசிகர்களுக்கு பாமகவிற்கு எதிராக க்ரீன் சிக்னலையும் பெற்றுத்தந்தது. அதன் விளைவே 2004 மக்களவைத் தேர்தலின் போது பாஜகவிற்கான ஆதரவு நிலையை ரஜினியை எடுக்கவும் வைத்தது.

இந்த நேரத்தில் கோவையில் ஒரு லட்சம் வண்ண நோட்டீஸ்களை அச்சடித்திருந்தார்கள் ரஜினி ரசிகர்கள். அந்த நோட்டீஸின் மேலே ரஜினி 'பாபா' காஸ்டியூமில் தியானம் செய்கிற மாதிரி படம். கீழே டாக்டர் ராமதாஸ் குரங்கு போல சித்திரிக்கும் ஒருபடம். நோட்டீஸில் வாசகம்:

‘தமிழ் மக்களே, நம்மை காக்க, விதைக்குள் அடைக்கப்பட்ட ஆலமரம் கண் விழிக்கிறது. தயாராகுங்கள். குறிப்பாக புதுச்சேரி, தர்மபுரி, அரக்கோணம், திண்டிவனம், செங்கல்பட்டு, சிதம்பரம் வாழ் தமிழ் மக்களே, உஷராகுங்கள். சுயநலம் தேடி, மரம் விட்டு மரம் தாவும் துஷ்ட மந்தி வருகிறது. தூர விலகுங்கள்!’

இந்த நோட்டீஸ்களை பாமக போட்டியிடும் ஆறு நாடாளுன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களின் வீட்டுக் கதவுகளிலும் ஒட்டப்போவதாகவும் அறிவித்தார்கள் ரசிகர்கள். விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் இப்ராஹிம் தன்னிடம் சத்தியநாராயணா தொலைபேசியில் ஆறுதல் கூறியதையும், ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என காத்திருக்க வேண்டாம். செயலில் இறங்குங்கள் என வாய்மொழி அறிவுறுத்தலையும் ஒப்புக் கொண்டார். ‘பாமக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கக் கூடாது. அதற்கான பணியில் இறங்குங்கள். அதேநேரம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை கூறவில்லை!’ என்றே அவர் உத்தரவு இருந்ததாகவும் தெரிவித்தார்.

அந்த வாரத்தில் விழுப்புரம் ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமணம் ஒன்றிற்கு வரும் சத்தியநாராயணா அங்கே ஆறு தொகுதிகளைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அசெம்பிள் ஆக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி கூடும் சமயம் யாருக்கு ஓட்டு என்பதை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் இருந்தது.

பாமகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்களின் திரட்சி இப்படி சென்று கொண்டிருந்த சமயம் ரஜினியை தன் அரசியல் கூடாரத்தில் இழுத்துப் போடுவதற்கான முயற்சியில் இறங்கியிருந்தது பாஜக. பாமகவை எதிர்ப்பது என்றாலே அது பாஜகவை ஆதரவு தெரிவிப்பது போலத்தானே? அதை நேரடியாகவே அறிக்கை மூலம் ஆதரித்து விடலாமே!’ என்று பாஜகவின் டெல்லி தலைமை பீடத்திலிருந்து ரஜினிக்கு நெருக்கமானவர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

ரஜினியும் அவரிடம் கலந்தாலோசனை செய்ததில், அந்தப் பிரமுகரே பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பது போல ஓர் அறிக்கையும் தயாரித்து, அதில் ரஜினியை கையெழுத்திட சொல்லியிருக்கிறார். ரஜினியும் அதில் கையெழுத்திட்டு தந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த ரஜினி மீண்டும் அந்த நபருக்கு போன் செய்து, ‘அந்த அறிக்கையில் சில வார்த்தைகளில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கு. கொஞ்சம் திருப்பி அனுப்புங்கள்!’ என்று கேட்டதாகவும், அதன்படி அந்த நெருக்கமான நண்பரும் அந்த அறிக்கையை திருப்பி அனுப்ப, ரஜினி அந்த அறிக்கையை கிழித்து எறிந்து விட்டதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

‘அந்த நண்பர் மீது ரஜினிக்கு மிகுந்த மரியாதையுண்டு. அதனால்தான் அவர் சொன்னதும் நேரடியாக மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அதன் பிறகு வீட்டுக்கு வந்து அறிக்கையை திரும்ப வாங்கிக் கொண்டார்!’ என்பதே அந்தத் தகவல்களில் உச்சபட்சமாக கசிந்த விஷயம்.

ஆனால் அப்போது இது சம்பந்தமாக என்னிடம் பேசிய ரஜினி மன்ற பிரமுகர் ஒருவர், ‘ரஜினிக்கு திமுக தலைவர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதையுண்டு. அவர் கூட்டணியில் ராமதாஸ் உள்ளார். பாஜகவை அதிமுக கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளது. இது ரஜினிக்கு சிக்கலான அரசியல் களம். எனவேதான் பாமகவை அது போட்டியிடும் ஆறு தொகுதியை மட்டும் எதிர்த்தாலும், பாஜகவை ஆதரிக்க அவர் மனம் ஒப்பவில்லை!’என்றார்.

இப்படியான சூழ்நிலையில் சில நாட்களில் ரஜினியே விழுப்புரம் சம்பவத்தை ஒட்டி அம்மாவட்டத் தலைவர் இப்ராஹிமை ரஜினி அழைத்துப் பேசினார். வரும் தேர்தல்- பாமக விஷயத்தில் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும். மற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் அழைத்துப் பேசுவேன். அதன் பிறகு அறிவிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள்!’ என ஆறுதல்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன.

இது நடந்து ஒரு வாரத்தில் நீலகிரி ரஜினி மன்றப் பொறுப்பாளர்களில் ஒருவரான சுலைமான் என்பவருக்கு திருமணம் நடந்தது. அந்த விழாவிற்கு வந்திருந்தார் சத்தியநாராயணா. அவர் அங்கு செல்வதற்கு முன்னரே கோவை ரஜினி ரசிகர்களுக்கு ஊட்டிக்கு வரச்சொல்லி சிறப்பு அழைப்பு வந்தது. அதையொட்டி கோவையிலிருந்து மட்டும் ஐம்பத்தைந்து ரஜினி மன்ற நிர்வாகிகள் ஏக உற்சாகத்துடன் ஊட்டிக்குப் புறப்பட்டனர்.

சுலைமான் திருமணத்தில் கலந்து கொண்ட ரசிகர்களை மாலையில் ஊட்டியில் உள்ள ஒரு தியேட்டர் வராண்டாவில் சந்தித்தார் சத்தியநாராயணா. அப்போது கோவை ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். ‘நம் தலைவருக்காக (ரஜினிக்காக) முதன்முதலா போலீஸ் ஸ்டேஷன் போனவங்க நீங்க. உங்க உணர்ச்சி கொந்தளிப்பு தலைவருக்கும் தெரியுது. இருந்தாலும் உங்களைக் கட்டுப்படுத்திக்ட்டு சைலன்டா இருங்க. அதைத்தான் தலைவர் உங்ககிட்ட சொல்லச் சொன்னார். கூடிய விரைவில் இப்ராஹிமை சந்தித்தது போலவே உங்களையும் தலைவர் சந்திப்பார். அதற்குள் அதிமுக கூட்டணிப் பங்கீடும் நடந்து முடியட்டும். அதற்குப் பின்னால் உங்களுக்கு தலைவர்கிட்ட இருந்து நல்லதொரு அறிவிப்பு வரும்!’ என்பதே அப்போது அவர் அறிவுறுத்தலாக இருந்தது.

- பேசித் தெளிவோம்

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x