Last Updated : 30 Apr, 2018 06:52 PM

 

Published : 30 Apr 2018 06:52 PM
Last Updated : 30 Apr 2018 06:52 PM

‘ஸ்கீம்’ மந்திரக்காளி – தலைபோகும் பிரச்சினைகளா? அரசியல் லாப-நட்ட கணக்குகளா? எது முக்கியம்?

அண்மைய காவிரி உரிமை போராட்டங்களில் “ஸ்கீம்“ என்ற ஒரு வார்த்தை ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆவேசத்தையும் மத்திய அரசுக்கு எதிராகக் கிளறிவிட்டது. உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவின் இறுதியில் “ஸ்கீம்“ என்பதை விளக்குமாறு மத்திய அரசு மனு அளித்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து தமிழகம் கொதிநிலையை அடைந்தது.

கர்நாடக மாநில தேர்தல்களை மனதில் வைத்து மத்திய அரசு செய்யும் காலம் தாழ்த்தும் நாடகம் என்று இது சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது என்றாலும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவின் உள்ளடக்கம் முழுமையாக கவனத்தில் கொள்ளப்படவில்லை. “ஸ்கீம்“ என்ற கருத்தாக்கத்தின் பின்னணியும் உரிய கவனத்தைப் பெறவில்லை. இவற்றின்பால் கவனத்தைக் குவிப்பது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான முன்னெடுப்புகளுக்கு உதவக்கூடும்.

மத்திய அரசு 1956 ஆம் ஆண்டு இயற்றிய மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டம் (Inter-State Water Disputes Act)

மட்டுமே நதிநீர் பங்கீட்டு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சட்ட வழியாக உள்ளது. இச்சட்டம் இயற்றப்பட்டபோது, அதில் “ஸ்கீம்“ என்ற கருத்தாக்கம் இடம்பெற்றிருக்கவில்லை.

1979 ஆம் ஆண்டு நர்மதா நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பையொட்டி, 1980 ஆம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு,புதிதாக பிரிவு 6 (A) சேர்க்கப்பட் ட து. 2007 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நதிநீர் ஆணையத் தீர்ப்பு இப்பிரிவின் பின்னணியைதெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது:

“நர்மதா நதிநீர் ஆணையம் 1979 இல் வழங்கிய தீர்ப்பிற்குப் பிறகு, நாடாளுமன்றம் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தில் 1980 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் 45 மூலம் பிரிவு 6 - A ஐ புகுத்தியது. இச்சட்டத் திருத்தத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த கூற்று அறிக்கை, நர்மதா நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பே இச்சட்டத்தில் பிரிவு 6 – A ஐ அறிமுகப்படுத்துவதற்கான காரணமாக அமைந்தது என்று குறிப்பிடுகிறது.“ (காவிரி ஆணையத் தீர்ப்பு, தொகுதி V பக்கம் 222).

முரண்பட்ட நலன்களுடைய மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் ஆணையத்தின் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும், அத்தீர்ப்பைச் செயல்படுத்துவதில் மாநிலங்கள் மீண்டும் முரண்டு பிடிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே இச்சட்டப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

இச்சட்டப் பிரிவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

“பிரிவு 6. மத்திய அரசாங்கம் ஆணையத்தின் தீர்ப்பை அரசிதழில் அலுவல்பூர்வமாக வெளியிடவேண்டும். ஆணையத்தின் தீர்ப்பு இறுதியானது என்பதோடு, பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்துவதும், அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதும் ஆகும்.

6 A . (1) பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், ஆணையத்தின் தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவர அவசியமான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு திட்டம் (ஸ்கீம்) அல்லது திட்டங்களை வடிவமைத்து, மத்திய அரசாங்கம், அரசிதழில் வெளியிடலாம்.

(2) உட்பிரிவு (1) இன் கீழ் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் (அ) ஆணையத்தின் தீர்ப்பு அல்லது வழிகாட்டல்களை செயலுக்கு கொண்டுவரக்கூடிய அதிகார அமைப்பு எதுவொன்றும் (கமிட்டி அல்லது வேறு வகையான அமைப்பாக வரையறுக்கப்பட்ட ஒன்று) நிறுவ வழிவகுக்கப்படலாம்.”

மேலும், உட்பிரிவு (7) இத்திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் வைத்து, அவசியமான திருத்தங்களைச் செய்துகொள்ளலாம் என்கிறது.

இவையல்லாது, 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் 14 இன்படி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினை சட்டத்தில் மேலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி உட்பிரிவு 6(2) பின்வருமாறு திருத்தப்பட்டது:

“உட்பிரிவு (1) இன் கீழ் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசாங்கம் அரசிதழில் வெளியிட்ட பிறகு, அது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு

அல்லது தீர்ப்பாணைக்கு நிகரான அதிகார வலிமையுடையதாக கொள்ளப்படவேண்டும்”

இவற்றின் சாராம்சம்:

1) ஆணையத்தின் தீர்ப்பிற்குப் பின்னரும், அதை நடைமுறைப்படுத்துவதில் முரண்பட்ட நலன்களைக் கொண்ட மாநிலங்கள்

முரண்டு பிடிக்கலாம் என்பதால், அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2) மத்திய அரசாங்கம், ஆணையத்தின் தீர்ப்பை செயலுக்கு கொண்டுவர, ஒரு திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைத்து, அரசிதழில் வெளியிடவேண்டும்.

3) அத்திட்டமானது ஆணையத்தின் தீர்ப்பை செயலுக்கு கொண்டுவரக்கூடிய அமைப்பு, அதன் அதிகார எல்லைகள், நிர்வாகம்,

பரிசீலனைக் கமிட்டி இன்னபிறவற்றை வகுக்கவேண்டும்.

4) அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மத்திய அரசாங்கம் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைத்து, அவசியமான திருத்தங்களை செய்யலாம்.

5) ஆணையத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நிகரான அதிகார வலிமையுடையது.

இத்தகைய அதிகார வலிமையுள்ள ஆணையத்தின் தீர்ப்பில் சில மாற்றங்களை செய்து உச்சநீதிமன்றம் தனது “இறுதியிலும் இறுதியான” தீர்ப்பை வழங்கியது.

ஆறு வாரங்களுக்குள் ஸ்கீமை வடிவமைக்கும்படி உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிப்ரவரி 12 அன்று வழங்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைக்கவோ அல்லது குறைந்தபட்சம் அதற்கான வரைவறிக்கையைத் தயாரிக்கும் முயற்சியோ செய்யவில்லை. அமைச்சரவை அளவில் ஆலோசனை எதுவும் நடைபெற்றதாகவும் தெரியவில்லை.

மாறாக, மார்ச் 9 அன்று – ஏறத்தாழ 3 வாரங்கள் கழிந்த நிலையில், மத்திய அரசின் நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலர் திரு. யு. பி. சிங் அவர்களின் தலைமையில், தமிழகம், கர்னாடகம், கேரளம், புதுவை ஆகிய நான்கு மாநில தலைமை மற்றும் முதன்மை செயலர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நான்கு மாநிலப் பிரதிநிதிகளும் ஸ்கீம் அமைக்க ஒப்புக்கொண்ட போதிலும் அது குறித்து மாறுபட்ட கருத்துக்களைத்தெரிவித்துள்ளனர். மார்ச் 19 அன்று எழுத்து வடிவிலும் சமர்ப்பித்துள்ளனர்.

இவ்வாறு ஸ்கீம் அமைப்பதில் மாநிலங்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதையும், மத்திய அரசு தானே ஸ்கீமை வடிவமைத்தால், மாநில அரசுகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தைக் காட்டியும், காவிரி ஆணையத்தின் தீர்ப்பில் சில மாறுதல்களை செய்துகொள்ளலாமா என்று கேட்டும் மார்ச் 31 அன்று மத்திய அரசு மனுவை சமர்ப்பித்தது.

இவ்விடத்தில் 2002 ஆம் ஆண்டு பிரிவு 6(2) இல் செய்யப்பட்ட மற்றொரு திருத்தம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ள புள்ளி மிகுந்த கவனத்திற்குரியது.

மத்திய அரசின் தரப்பை முன்வைத்த சொலிசிடர் ஜெனரல் திரு. ரஞ்சித் குமாரின் வாதத்தை மறுத்து, மத்திய மாநில உறவுகள் குறித்த சர்காரியா கமிஷன் அறிக்கையின் (1980) பரிந்துரையை சுட்டிக் காட்டி, “ஆணையத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எந்தவொரு மாநிலமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கவும், அதன் வழிகாட்டுதல்களின் படி நடக்கச் செய்யவும் உரிய வலிமையைத் தரும் பொருட்டே பிரிவு 6(2) இல் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. திட்டத்தை (ஸ்கீம்) வடிவமைப்பதன் நோக்கமே தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதுதான்,“ (பக்கம்: 456 - 7), என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளது.

இந்த விளக்கத்தையும் மீறி முரண்பட்ட நலன்களையுடைய மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கூட்டி, மீண்டும் கலந்தாலோசிப்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கேலிக்குரியதாக்குவது என்பதல்லாமல் வேறு என்ன?

இதைக் காட்சிலும் வேடிக்கையான மற்றொரு விஷயத்தையும் மத்திய அரசு சத்தமில்லாமல் செய்திருக்கிறது.

2017 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி 1956 மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினைகள் சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்யும் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அத்திருத்த மசோதாவை ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் ஆகஸ்டு 2017 இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக தீர்க்கப்படாதிருக்கும் நதிநீர் பிரச்சினைகளை விரைவில் தீர்க்கும் பொருட்டு, இச்சட்டத் திருத்தம் முன்மொழியப்படுவதாக கூறப்பட்டது. இதன்படி, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நதிநீர் ஆணையங்களின் தீர்ப்புகளில் எவ்வித மாற்றமும் செய்ய இயலாது. தற்போது நடப்பில் உள்ள நதிநீர் ஆணையங்கள் கலைக்கப்பட்டு, ஒரு மத்திய ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்தின் தீர்ப்பே இறுதியானது. அதன் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஸ்கீம் என்ற வார்த்தைக்கே அதில் இடமும் இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இச்சட்டத் திருத்தத்தின் மீது நாடாளுமன்ற நிலைக்குழு அளித்துள்ள பரிந்துரைகள் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினை ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்திருக்கும்.

அல்லது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்கீமை வகுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தாலும் பிரச்சினை தீர்ந்திருக்கும்.

இரண்டில் ஒன்றையும் செய்யாமல், தமிழக ஆளும் கட்சியின் மூலம் நாடாளுமன்றத்தை முடக்கி, தனது அரசின் மீது கொண்டுவரப்பட இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவொடாமல் செய்ததோடு, கர்னாடக தேர்தலுக்கு அவகாசமும் எடுத்துக்கொண்டதுதான் மோடியின் தந்திர அரசியல் நகர்வு.

குடிமக்களின் தலைபோகும் பிரச்சினைகளைக் காட்டிலும், அரசியல் லாப – நஷ்டக் கணக்குகளே முக்கியம் என்ற அணுகுமுறையில் காங்கிரசிற்கும் பாஜகவிற்கும் வித்தியாசம் இல்லை என்பதையே இது மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

தொடர்புக்கு: mathi2006@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x