Published : 23 Apr 2018 12:17 PM
Last Updated : 23 Apr 2018 12:17 PM

ரஜினி அரசியல்: 49 - லதாவும், சில ரசிகர்களும்

அப்போது கோவை வந்த லதா ரஜினிகாந்த் நேரே பொள்ளாச்சி ஆழியாறில் உள்ள வேதாத்ரி மகரிஷி ஆசிரமத்திற்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கினார். அவர் வருகைக்குண்டான காரணம், ‘ஆசிரமத்தில் மகள்களுடன் யோகா பயிற்சி எடுக்கிறார்’ என்பதுதான்.

ஆனால் ரசிகர்களில் ஒரு பிரிவினரோ, ‘ரசிகர்களுடன் கலந்து பேசி பேரவை எப்படி அமைக்கலாம். அதை எப்படி வழிநடத்துவது? அதற்கு யாரையெல்லாம் பயன்படுத்துவது? மக்கள் மத்தியில் பேரவையை எப்படி வலிமை பெறச் செய்வது? அதனால் ரஜினியின் இமேஜ் கூடுமா, குறையுமா? சரிந்திருக்கும் ரஜினி இமேஜை நம் பேரவை மூலம் எப்படி தூக்கி நிறுத்தலாம்?’ என்பதை ஆலோசிக்கவே என்று கூற்றை முன்மொழிந்தனர்.

அதன் நிமித்தம் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் லதாவை சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்தனர். அவருடன் ஆலோசித்ததில் சம்மதம் கிடைத்ததன் விளைவாகவே லதா வந்து சென்ற வழியெங்கும் போஸ்டர்களை ஒட்டியதாகவும் குறிப்பிட்டனர் சிலர். ஆனால் அப்போதைய (2003 ஆம் ஆண்டு) கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத் தலைவராக இருந்த வி.வேணுகோபால் இது சுத்தமாக வதந்தி என்றார். இப்படியொரு போஸ்டர் அச்சடிக்கப்பட்டதும், ஒட்டப்பட்டதும் கூட தனக்குத் தெரியாது என்றே மறுத்தார்.

‘லதா ரஜினிகாந்த் பேரவை உருவாகியிருப்பது என்பதெல்லாம் வீண் வதந்தி. தலைவர் ரஜினி மீது அதீத பற்று கொண்ட சில இளைஞர்கள், அன்னையின் (லதாதான்) மீதும் அன்புகொண்டு குருஜி சச்சிதானந்த மகராஜ் ஜெயந்தி விழாவன்று ஒரு பேனர் வைத்திருந்தார்கள். அப்போதே அவர் வேதாத்திரி மகரிஷி ஆசிரமத்திற்கு ஓரிரு நாளில் வருவதாகத்தான் சொல்லிச் சென்றார். அப்படி வந்த அவரை ஆசிரமத்தில் சந்தித்து மரியாதை நிமித்தமாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் பேசினார்கள்.

அவ்வளவுதான். அவருக்கு வரவேற்பு போஸ்டர்களும் ரசிகர்களின் மகிழ்ச்சி வெளிப்பாடாகவே ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த போஸ்டரில் என் பெயர் இடம் பெற்றிருந்ததை கூட தெருவில் அது ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை!’ என்பதே அவரின் விளக்கமாக இருந்தது.

இப்படி லதா ரஜினி பேரவை சர்ச்சை என்பது 2003 ஜனவரியில் மட்டுமல்ல, அதற்கு சில மாதங்கள் முன்னரே கோவையை மையமாக வைத்து உருவாகியிருந்தது. அதன் உருவாக்கம் பல்வேறு பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளியாகியிருக்கிறது.

ரஜினியின் ரசிகர்கள் என்பவர்கள் அந்த காலகட்டத்தில் செய் என்றால் செய்து முடிப்பவர்களாகவும், செய்து முடி என்றால் செய்து மடி என்கிற சித்தாந்தத்தோடு செயல்படக் கூடிய அளவில் இருந்து வந்தனர். தங்களது தலைவர் உத்தரவினை இடுவார்; அரசியலில் ஒரு கலக்கு கலக்கலாம் என்று பல வருடங்களாக காத்திருந்து சோர்ந்து போயிருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், அதில் ஜெயிக்கிற வேகம்; அந்தப் படத்தை ஓட வைக்க ரசிகர்களை உசுப்பேற்றுகிறதில் உள்ள வேகம், அரசியலில் தென்படுவதேயில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தார்கள். அதுவும் படம் எடுக்காத நேரங்களில் பூர்ண அமைதி என்பது ரசிகர்களை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்றது.

ஆனால் அவர் மனைவி லதாவோ துடிப்பாக இருக்கிறார். கணவரின் பொறுப்புகளை சுமப்பதோடு, ரசிகர் மன்ற செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டுகிறார். இதனால் ரசிகர்களில் ஒரு பிரிவினர் ரஜினி வராவிட்டாலும் பரவாயில்லை. லதா ரஜினிகாந்த் வந்தால் கூட போதும். அரசியலில் ஓர் என்ட்ரியை கொடுத்துவிட முடியும் என ரசிகர்களில் ஒரு பிரிவினர் உறுதியாக நம்பினர். இதற்குள் கோஷ்டிப் பூசலும் ஒலித்தது.

ரஜினி ரசிகர் மன்றங்களில் சில தீவிரமான இளைஞர்கள், அகில இந்திய தலைவர் சத்தியநாராயணாவிற்கு கட்டுப்படாதவர்கள், அவரின் சொல்பேச்சு கேட்காதவர்கள், அவரால் பொறுப்புகள் தரப்படாதவர்கள், அவரின் ஆதரவாளர்களுக்கு எதிராகப் புறப்பட்டனர். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு, கோஷ்டிகள் செயல்பட்டன. அதுவே கோவையில் வேணுகோபால், கதிர்வேல், உலகநாதன் ஆகிய நிர்வாகிகள் தலைமையில் மூன்று கோஷ்டிகளாக செயல்பட்டன.

'பாபா' படம் வெளியான காலத்தில் இந்த மூன்று கோஷ்டிகளும் முதல் ஷோ விழாவை மூன்று இடங்களில் கொண்டாடினார்கள். இவர்கள் வைத்திருந்த போஸ்டர்கள், கட் அவுட் வாயிலாக அந்த பிளவு அடையாளப்படுத்தப்பட்டது. சிறப்பாகச் செயல்பட்ட பல மன்றங்களுக்கு மாவட்டத் தலைமை, 'பாபா' ரசிகர் காட்சிக்கு டிக்கெட் தரவில்லை. புறக்கணிக்கப்பட்ட மன்றத்தினர் அன்றே ஆவேசம் பொங்க மாவட்ட மன்றத் தலைவர் வீட்டிற்குச் சென்றனர். இந்த விவரம் தெரிந்த அவரோ கோவையில் 'பாபா' படத்தைக் கொண்டாடுவதை, முதல் ஷோ பார்ப்பதை தவிர்த்து பொள்ளாச்சிக்கு சென்று கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இவர்களை எல்லாம் அகில இந்திய ரசிகர் மன்றத்தலைமையே உசுப்பேத்தி விடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இவர்களுக்கு எதிராக கோவையில் அபு, ஷாஜகான், முபாரக், சவுந்திரபாண்டியன், நந்தகுமார் என ஒரு பிரிவினர் நேரடியாகவே பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்தனர்.

‘தமிழகம் முழுவதுமே மன்றங்களில் கோஷ்டிப் பூசல் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சத்தியநாராயணா இதை குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. சின்ன சின்ன அமைப்புகள் கூட கோவையில் அலுவலகம் வைத்திருக்கும் நிலையில் கோவையில் ரஜினி மன்றத்திற்கென அலுவலகம் இல்லை. முறையான தலைமை இல்லாததுதான் இதற்கு காரணம். 'பாபா' பட டிக்கெட் போன்ற விவகாரங்களை கவனித்துக்கொள்ள சத்தியநாராயணா அவருக்கு வேண்டிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தார். இதனை அம்மா லதாவிடம் போனில் சொன்னோம். அதைத் தொடர்ந்து அந்த குழு ஏழு பேர் கொண்ட குழுவாக மாற்றப்பட்டது. லதா அம்மாவைப் பொறுத்தவரை ரசிகர் மன்றப் பிரச்சினைகள் தன் கவனத்திற்கு வந்தால் உடனடி ஆக்‌ஷன்தான். கோவைக்கு சத்தியநாராயணா வந்தால் முன்பெல்லாம் அவரை எளிமையாகச் சந்திக்க முடியும். ஆனால் இப்போது முடிவதில்லை. அவரது நண்பர்கள் வீட்டில் தங்கி விடுகிறார்.

ஒரு முறை ஒத்துக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் வீட்டுத் திருமணத்திற்கு வருவதாக சத்தியநாராயணா உறுதி கொடுத்திருந்தார். அவரும் அதை நம்பி ஏராளமாய் செலவு செய்து ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால் கல்யாணத்திற்கு அவர் வரவில்லை. நொந்து போன கிருஷ்ணகுமார் சத்தியநாராயணாவை போன் போட்டு, ‘என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்களே?’ என கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக மாவட்டத் தலைமையை தொடர்பு கொண்டு கிருஷ்ணகுமாருக்கும் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அறிவிக்கச் செய்தார். இப்படி சத்தியநாராயணாவின் கோபத்திற்கு ரசிகர்கள் பலர் பலியாகி உள்ளனர். இப்படி அகில இந்தியத் தலைவரால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய உள்ளனர். இதனால் எங்கள் மன்ற வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது. மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்து அதற்கு முடிவு கட்ட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளோம்!’ எனச் சொன்னவர்கள் ‘இனிமேற்கொண்டு லதா பேரவை’ என்ற பெயரில் அமைப்பு உருவாக்கி செயல்படப் போவதாக அறிவித்தனர். இது நடந்தது 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்.

‘இப்படியொரு பேரவையை நாங்களாகவே தொடங்க உள்ளோம். எங்களை நற்பணிகள் செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் பாதை போட்டுக் கொடுத்தவரே லதா அம்மாதான். இந்த இக்கட்டான நேரத்தில் நிறைய ரஜினி ரசிகர்கள் அநாதரவாக கை விடப்பட்ட நிலையில் உள்ளோம். எங்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க அம்மாவே முன் வர வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு நிம்மதி. இதற்காக நாங்கள் சென்னை சென்று லதா அம்மாவை சந்திக்க உள்ளோம். அதன் பிறகு பேரவை அங்கீகாரத்துடன் செயல்படும்!’ என்றும் அறிவித்திருந்தனர்.

- பேசித் தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x