Last Updated : 16 Apr, 2018 07:35 PM

 

Published : 16 Apr 2018 07:35 PM
Last Updated : 16 Apr 2018 07:35 PM

புத்தருடன் ஒரு காலை நடை: 7 - பூனையாக இரு

உன் கண்ணாடியில் உன் முகம்

புத்தர் தனது சீடர்களில் சில பேரை அருகில் அழைத்தார்.

ஏழு சீடர்கள் வந்து நின்றனர். ஒவ்வொருவரிடமும் ஒரு மெல்லிய நீண்ட துணியைக் கொடுத்தார் புத்தர். ஒவ்வொரு துணியும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. அவரவருக்கு கொடுத்த துணியின் நிறத்தை நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்.

அந்தத் துணியில் அவரவர்களையும் இறுக்கமாக ஒரு முடிச்சுப் போடச் சொன்னார். புத்தர் சொன்னது போலவே முடிச்சுப் போட்டர்கள். இதையடுத்து அந்த முடிச்சுப் போட்ட துணியை அவர்களுக்கிடையே மாற்றிக்கொள்ளச் சொன்னார். மாற்றிக்கொண்டார்கள்.

‘’இப்போது நான் ’ம்’ என்று சொன்னவுடன்... 10 நொடிகளில் அந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்’’ என்று சொல்லி ‘’ம்...’’ என்றார். அவர் குறிப்பிட்ட 10 நொடிகளில் எவராலும் துணி முடிச்சை அவிழ்க்க முடியவில்லை.

’’ ஆரம்பத்தில் யார் யாரிடம் எந்தந்த நிறத்தில் துணியிருந்ததோ, அவர்கள் அந்தந்த துணியை வாங்கிக் கொள்ளுங்கள்...’’ என்றார். அவரவர்களிடம் அவரவர் நிறத் துணி வந்தது.

‘’இப்போது நான் ‘ம்’ என்று சொன்னவுடன் 10 நொடிகளில் அந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்’’ என்று சொல்லி ‘’ம்...’’ என்றார்.

இப்போது 3 நொடிகளில் எல்லோரும் முடிச்சை அவிழ்த்துவிட்டார்கள்.

புத்தர் அவர்களைப் பார்த்து சொன்னார்: ’’அடுத்தவர் போட்ட முடிச்சை அவ்வளவு எளிதில் ஒருவர் அவிழ்த்துவிட முடியாது!’’

===============

'குழந்தை இழுத்தக்

கோடுகளில் சிரிக்கிறார்

தியான புத்தர்!'

- வெற்றிப்பேரொளி

------------------

சொல்ல வந்த கருத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி , அதை நினைவில் பதிய வைப்பது புத்தரின் பாணி. அதாவது, எப்போதும் அலைபாய்ந்துகொண்டிருந்த மனித மனத்தில், எந்தவொரு கருத்தையும் மூன்று முறை சொல்ல கவனத்தை ஈர்ப்பார் புத்தர்!

==========

புத்தர் சொன்ன கதை:

அரண்மனை வைத்தியர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் தனது உள்ளங்காலில் ஏதோ குதித்து ஓடுவதைப் போல உணர்ந்து, வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார்.

அவர் சத்தம் போட்டுக்கொண்டே எழுந்ததைக் கண்டு அவரது வீட்டினர் அனைவரும் எழுந்துகொண்டுவிட்டனர். என்னவென்று பார்த்தால் - ஒரு மிகப்பெரிய எலி ஒன்று அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

இவர்தான் வைத்தியராயிற்றே, அதுவும் ராஜ வைத்தியர். தன்னிடம் பாஷாணங்களைக் கொண்டு இரு விஷ மருந்து தயாரித்து, அதனை உணவோடு கலந்து ஆங்காங்கே வைத்தார். அந்த எலி விஷம் கலந்தை உணவை முகர்ந்து பார்த்துவிட்டு, உண்ணாமல் ஓடிவிட்டது.

அரண்மணை வைத்தியரின் ராஜ தந்திரம் எலியிடம் பலிக்கவில்லை. அரண்மனை தலைமைக் காவலரிடம் தனது வீட்டிலிருக்கும் எலித்தொல்லையைப் பற்றி கலந்தாலோசித்தார்.

அவர் ‘’நான் அரண்மனையில் செல்லமாக வளர்க்கப்படும் ராஜ பூனையை அனுப்பி வைக்கிறேன். அது ஒரே நாளில் எலிக்கு வேட்டு வைத்துவிடும் ... அது மட்டுமல்ல அந்த ராஜ பூனை இனிமையாகப் பாடும், அற்புதமாக நடனமாடும். அது உங்கள் வீட்டினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்’’ என்றார்.

அரண்மனை வைத்தியர் வீட்டுக்கு ராஜ பூனை வந்தது. வந்த நிமிடத்தில் இருந்து வீட்டினர் எல்லோரிடமும் சிநேகமானது ராஜபூனை. அனைவரிடமும் ஒட்டிக்கொண்டது. பாடியது, நடனமாடியது... வீட்டையே கலகலப்பாக்கியது. ஆனால்... அந்தப் பூனையால் வீட்டைச் சுற்றி வந்த எலியை எதுவுமே செய்ய முடியவில்லை. எதற்குமே பயப்படவில்லை அந்த எலி.

’என்னடா அது ராஜபூனையால் கூட அந்த எலியை எதுவும் செய்துவிட முடியவில்லையே...’ என்று வைத்தியர் மனம் நொந்து போனார். என்ன செய்வது என்று அவருக்குப் புரியவே இல்லை. குழப்பமாக இருந்தார்.

ராஜ வைத்தியருக்கு மூலிகைச் செடிகள் பறித்து வந்து கொடுக்கிற தோட்டக்காரர் வந்தபோது, பெருங்குழப்பத்தில் இருக்கிற ராஜ வைத்தியரைப் பார்த்து ‘’என்ன வைத்தியரே... சோகமாக இருக்கிறீர்கள் என்ன விஷயம்?’’ என்றார் .

’சாதாரண தோட்டக்காரரிடம் எலி விஷயத்தைச் சொல்லலாமா...’ என்று யோசித்தவர் ’சரி... சொல்லித்தான் பார்ப்போமே...’ என்று முடிவு செய்து எலி தொல்லையையும், ராஜ பூனையால் கூட அந்த எலியை எதுவும் செய்ய முடியவில்லை என்பதையும்... சொன்னார்.

அதற்கு தோட்டக்காரர் சொன்னார்: ‘’இதுக்கு ஏன் ராஜபூனையை எல்லா வரவழைச்சீங்க? சாதாரண ஒரு பூனையை கொண்டாந்து விடுங்க... அது அந்த எலியை என்ன பண்ணுது பாருங்க...’’என்றான்.

தோட்டக்காரர் சொன்னது போலவே சாதாரண பூனையைத் தூக்கி வந்து வீட்டில் விட்டார். அந்த பூனைக்கு பாடத் தெரிந்திருக்கவில்லை; நடனமும் ஆடத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் - ஒரே இரவில் வீட்டில் தொல்லை தந்த எலியை கவ்விப் பிடித்துக் கொன்றது.

அந்த சாதாரண பூனையிடம் ராஜபூனை ‘’என்னால் முடியாதது உனக்கு எப்படி சாத்தியமாச்சு?’’ என்று கேள்வி கேட்டது.

அதற்கு சாதாரண பூனை சொன்ன பதில்: ‘’பூனையாக இரு!’’

==============

பாடிய நல்லூரில் தண்ணீர் திருவிழா

சென்னை - செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் பர்மாவில் இருந்த வந்த தமிழர்கள் புத்தர் கோயிலைப் பராமரித்து வருகிறார்கள். அந்தக்கோயிலில் பர்மாவின் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு அன்று, தண்ணீர் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் நேற்று பாடியநல்லூர் புத்தர் கோயிலில் தண்ணீர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இவ்விழா மியான்மரில் இருந்து வந்துள்ள புத்தபிட்சு நந்தத கிரியா, கோயில் நிர்வாகி பாபுராவ் ஆகியோர் தலைமையில் நடந்தது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இங்குள்ள புத்தர் சிலைக்கு புனித நீர் ஊற்றி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். மேலும் பர்மா தமிழர்கள் ஒருவருக்கொருவர் தண்ணீர் ஊற்றி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு பர்மா முறைப்படி பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

-------

அமைதியாக உரையாடுங்கள்!

சாக்கிய இனத்தினருக்கும், கோலியர் இனத்தினருக்கும் இடையில் நீண்டகாலமாக ரோஹிணி ஆற்று நீர்ப் பிரச்சினை இருந்து வந்தது. இரண்டு பிரிவினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

எங்களுக்குத்தான் ரோஹிணி ஆற்றின் தண்ணீர் சொந்தம் என்று இரண்டு பேரும் உரிமை கொண்டாடினர். இரண்டு இனக் குழுக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புக்கு இடையே ஓடிக்கொண்டிருந்த ரோஹிணி நதி நீரை யார்? எப்படி பகிர்ந்துகொள்வது என்கிற பிரச்சினையை ஒட்டி இரண்டு பிரிவினருக்கும் 2,500 ஆண்டுகளுக்கு முன்பாக போர் கூட நடைபெற்றது. போரில் இரண்டு இனக்குழுக்களும் ரத்தம் சிந்தின. காயம் சுமந்தன. சரித்திரத்தின் பக்கங்களில் ஆறாத வடுக்களாகின ரோஹிணி நதி நீர் பிரச்சினை.

இரண்டு இனக் குழுக்களின் தீராப் பகையும், நதி நீர் பிரச்சினையும் புத்தருக்குத் தெரிய வந்தன. இரண்டு குழுக்களும் அமைதியாக உட்கார்ந்துப் பேசி... இப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வாகும் என்றும் புத்தர் விரும்பினார்.

போர்க்களத்தில் ரத்தம் சிந்திய இரண்டு இனக்குழுவினரையும் சந்தித்த புத்தர் அவர்களை நோக்கி ‘’போர்க்களத்தில் சிந்துகின்ற உங்களுடைய ரத்தம் மதிப்புள்ளதா..? நீங்கள் தண்ணீருக்காக மோதிக்கொள்கிறீர்களே... அந்தத் தண்ணீர் மதிப்புள்ளதா?’’ என்று கேட்டார்.

‘’ரத்தம்தான் மதிப்புள்ளது...’’ என்று பதில் சொன்ன அவர்களிடம் ‘’அப்படியெனில் - இரண்டு இனக்குழுக்களும் அமைதியாக உட்கார்ந்து உரையாடுங்கள். உங்கள் அமைதி உரையாடல் ரோஹிணி நதி நீர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வினை வழங்கும்...’’ என்று அறவுரை வழங்கினார்.

அன்றைக்கு புத்தரின் அறவுரைக்கு எவரும் செவிமடுக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வரலாற்று சோகம்!

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x