Published : 16 Apr 2018 06:39 PM
Last Updated : 16 Apr 2018 06:39 PM

மனதில் நினைப்பதையெல்லாம் பேசினால்...?- ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடக இயக்குநர் கீதா கைலாசத்துடன் ஓர் உரையாடல்

மனதில் நினைப்பவற்றை வெளியே சொல்லிவிட வேண்டும் என நினைக்கின்றோம். ஆனால், பல நேரங்களில் நினைத்ததையெல்லாம் நம்மால் பேசிவிட முடிவதில்லை. கவலை, கோபம், சிரிப்பு, ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் பேசி வெளிப்படுத்திவிட நினைத்தாலும் பல சமயங்களில் அது சாத்தியமாவதில்லை.

நினைத்ததைப் பேசுவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது எதிரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்தில் மனதிற்குள்ளேயே சொல்ல வந்தவற்றை பூட்டி வைத்துக்கொள்வோம். பயம் காரணமாக இருக்கலாம் அல்லது சண்டை வந்துவிடுமோ என்ற உணர்வில் அவற்றை சொல்லாமல்யேயே இருந்துவிடுவோம். ஆனால், அவற்றை சொல்லியிருக்கலாமோ என மனதிலேயே வைத்து அல்லல்படுவோம்.

அப்படி நினைத்ததையெல்லாம் ஒரு சில பல நிமிடங்கள் பேச நாயகி லதாவுக்கு வாய்ப்பு கிட்டுகிறது. அப்படி, மனதில் தோன்றுவதையெல்லாம் லதா பேசும்போது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா? இல்லையா? எதை வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் பேசினால் என்ன நடக்கும்? என்பதை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் மேடை நாடகம் 'ஒரு சில பல நிமிடமும் பேச்சும்'. வெளியே சொல்லிவிடுவதால் அவர்களுக்குள் ஏற்படக்கூடிய மகிழ்ச்சிதான் இந்நாடகம்.

இந்நாடகத்தை எழுத்தாளரும் கதை சொல்லியுமான கீதா கைலாசம் இயக்கி, முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். 'மர்ம தேசம், 'கையளவு மனசு' போன்ற தொடர்களை தயாரித்த மின் பிம்பங்கள் நிறுவனம் இந்த மேடை நாடகத்தை தயாரிக்கிறது.

கதையின் முக்கியக் கதாபாத்திரமான லதா கதாபாத்திரத்தில் மேடைக் கலைஞர் மேகா ராஜன் நடிக்கிறார். லதாவின் கணவர், மாமனார், மாமியார், மைத்துனர், தோழி, வேலைக்காரர் போன்ற கதாபாத்திரங்களும் லதாவுடன் இக்கதையில் பயணம் செய்கின்றனர்.

இந்நாடகம் வரும் 20-ம் தேதி நாரத கான சபாவில் அரங்கேற உள்ளது.

நாடகத்தின் இயக்குநர் கீதா கைலாசம் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் என்றாலும், எழுத்துத் துறையில் தனக்கே என தனி பாணியைப் பின்பற்றி வருகிறார். கதை சொல்லியான கீதா கைலாசம் இயக்கும் முதல் மேடை நாடகம் இது.

தன்னுடைய முதல் நாடகம் என்பதாலும், கதைகள் எழுத தனக்கு உந்து சக்தியாக திகழ்ந்த மாமனார் கே.பாலசந்தர் மற்றும் கணவர் பால கைலாசம் இருவரும் உயிருடன் இல்லாத நிலையில் இந்நாடகம் அரங்கேறுவதாலும் சற்றே உணர்வுப்பூர்வமான தருணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம் கொஞ்சம் உரையாடுவோம்.

உங்களுடைய முதல் நாடக அரங்கேற்றத்தின்போது உங்களுக்கு உந்துசக்தியாக இருந்த இயக்குநர் கே.பாலசந்தர், கணவர் பாலகைலாசம் ஆகியோர் உயிருடன் இல்லை. இத்தருணத்தின்போது என்ன சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?

20-25 வருடங்களாக இயக்குநர் கே.பாலசந்தரின் திறமையையும், ஒரு படத்தை இயக்கும்போது அவர் கையாளும் நுணுக்கங்களையும் பார்த்து வந்துள்ளேன். என்னுடைய முதல் நாடகத்தை அவர் இருந்து ஆசிர்வதித்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அதனால், என்னுடைய முதல் நாடகத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். எனக்கு அவர் நிறைய ஊக்கம் அளித்திருக்கிறார். அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால், ‘மின்பிம்பங்கள்’ நிறுவனத்தில் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு வேலைகளிலேயே அச்சமயங்களில் இருந்துவிட்டேன்.

தொலைக்காட்சி தொடர் தயாரிப்பிலிருந்து கதை எழுதுதல், மேடை நாடகம் இவற்றில் உங்கள் கவனம் திரும்பியது எப்படி?

நான் படித்தது சி.ஏ., அதனால், நமக்கு நிர்வாகம் சார்ந்த வேலைகளில் நிபுணத்துவம் இருந்ததால் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு வேலைகளில் இறங்கினேன். அந்த சமயத்தில்தான், இயக்குநர் (கே.பாலசந்தர்) படப்பிடிப்பு தளங்களில் எவ்வாறு நடந்துகொள்வார், அவரது கடின உழைப்பு, திறமை இவற்றையெல்லாம் அறிந்துகொண்டேன். தான் நினைத்தது வரும் வரை நடிகர், நடிகைகளை இயக்குநர் விடவே மாட்டார். பணம் இரண்டாம்பட்சம்தான். மாமனார் தவிர கணவர் பாலகைலாசம் பணியையும் நான் பார்த்திருக்கிறேன். அதனால், கதை எழுதுதல், இயக்கம் சார்ந்த வேலைகளில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்டுகளாகவே எனக்கு இருந்துள்ளது. கடந்த 7-8 வருடங்களாக கதை எழுதி வந்திருக்கிறேன்.

கதை எழுதும்போது கே.பாலசந்தரிடம் இருந்து உங்களுக்கு வந்த பாராட்டு?

ஆரம்பத்தில் நான் எழுதத் தொடங்கியபோது ஒரு கதைக்கு காகிதத்தில் “நன்றாகவே எழுத வருகிறது” என எழுதிப் பாராட்டியிருந்தார். பல்வேறு பணிகளுக்கிடையில் நான் கதை எழுதுவதை குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தார். அதை என்னால் மறக்க முடியாது.

உங்களின் முதல் நாடகம் குறித்து சொல்லுங்கள்...

சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றிற்காக நான் இயக்கிய குறுநாடகம் தான் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பாராட்டு தந்த உந்துதலாலேயே இந்த ஒன்றரை மணிநேர நாடகத்தை இயக்கியிருக்கிறேன். நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ அதுபற்றி சொல்லுங்கள்...

பல்வேறு காரணங்களால் நாம் பேச நினைக்கும் பலவற்றை நம்மால் பேச முடிவதில்லை. ஆனால், சில பல நிமிடங்கள் ஒரு பெண்ணுக்கு எல்லாவற்றையும் பேசும் வாய்ப்பு கிடைத்தால் அவள் எப்படி நடந்துகொள்வாள்? அதனால் எவ்வாறு மகிழ்ச்சியாக உணர்கிறாள் என்பதை நகைச்சுவையாக நாடகத்தில் கொண்டு வந்திருக்கிறோம். பெண் உணர்வுகளுக்கே இந்நாடகத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், ஆண்களின் உணர்வுகளையும் இந்நாடகம் பிரதிபலிக்கும். நகைச்சுவையாக இருக்கும் அதே சமயத்தில் யோசிக்க வைப்பதாகவும் அமையும். 3 மாதங்கள் ஒத்திகை பார்த்திருக்கிறோம். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேகா ராஜன் உட்பட பலரும் சிறப்பான நடிப்பை அரங்கேற்றத்தின்போது வெளிப்படுத்துவார்கள்.

உங்களின் எதிர்கால திட்டங்கள்?

மேடை நாடகங்கள் அதிகம் இயக்கவும், உரிய வாய்ப்பு கிடைத்தால் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதவும் திட்டமிட்டுள்ளேன்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x