Published : 13 Apr 2018 08:20 PM
Last Updated : 13 Apr 2018 08:20 PM

ரஜினி அரசியல்: 48 - ஆன்மிகத்தில் ரஜினி, அரசியலில் லதா

இறுதியாக ரஜினி பேசினார்.

‘இது ரொம்ப வித்தியாசமான மேடை. நான் இன்னமும் ஆன்மிகத்தில் குழந்தை. பக்குவமடையாதவன். நான் என் குருநாதருடைய ஜெயந்தி விழாவில் ஆன்மிகத்தைப் பற்றி பேசுவேன்னு நினைச்சுக்கூட பார்த்ததில்லை. இருந்தாலும் எனக்கு என்ன நடந்ததோ, அதை அப்படியே இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பரசுராமர். ஜமதக்கினியின் பிள்ளை. குருவை தேடிப்போனார். யாருமே அவரை சிஷ்யனா ஏத்துக்கலை. கடைசியா தத்தாத்ரேயர்கிட்ட போனார். அவர், ‘பதினான்கு ஆண்டுகள் புண்ணிய தலங்களுக்கெல்லாம் போய், ஆன்மிகப் பெரியவர்களைச் சந்தித்து அவர்களுக்கு பணி விடை செய்து விட்டு வா. உன்னை சிஷ்யனாக ஏற்றுக் கொள்கிறேன்'னு சொன்னார். பரசுராமரும் பதினான்கு ஆண்டுகள் பல்வேறு மகான்களை சந்தித்து காடு, மலைகளில் எல்லாம் அலைந்து புண்ணியங்கள் செய்து விட்டு வந்தார்.

பரசுராமருக்குள் இப்போது ஒரு சிந்தனை. இந்த தத்தாத்ரேயரை குருவாக ஏற்றுக் கொள்ளலாமே. கூடுதல் சக்தி கிடைக்குமேன்னு நினைச்சார். தத்தாத்ரேயரிடம், ‘உங்கள் குரு யார்?’ என கேட்டார். அவர், ‘காற்று, மழை, பூமி, கடல், வாயு, அக்னி, ஒரு சின்னப் பொண்ணு, சிலந்தி’ன்னு முப்பத்தியிரண்டு பேர் இருப்பதாக சொன்னார். அதைப் பிறகு விளக்கினார். எப்படி?

நதி எப்படிப் போகுது? அது எங்கேயும் நிற்காது. குழி, குன்று, மலை, காடு, கடந்து கடல் நோக்கியே போயிட்டிருக்கும். ஆண்டவன்! அதை நோக்கி போயிட்டேயிருக்கணும். அதை நான் நதிகிட்ட கத்துகிட்டேன். அடுத்து பூமி. அதை யாரெல்லாம் என்னவெல்லாமோ அசிங்கம் பண்றாங்க. ஆனாலும் அது எல்லோருக்கும் நன்மையே கொடுக்குது.. என்னை யார் என்ன, எது செஞ்சாலும் நல்லதையே கொடுக்கிறேன். இதை பூமிகிட்டயிருந்து கத்துக்கிட்டேன்.

காற்று. அது மீன் மார்க்கெட்டுல இருக்கும்போது மீன் வாசனை அடிக்கும். பூ மார்க்கெட்டுல இருக்கும்போது பூ வாசனை அடிக்கும். அங்கிருந்து வெளியே வந்துட்டா. அது கூட எதுவுமே ஒட்டாது. தூய்மையா இருக்கும். ஸோ, நான் எங்கிருந்து எப்படி வந்தாலும் எதுக்குள்ளே போனாலும் எதிலும் ஒட்டாமல், நான் நானாகவே இருக்கணும். இதை நான் காற்றிடம் கத்துக்கிட்டேன் (பலத்த ஆரவாரம்).

சரி, அந்த சின்னப் பொண்ணு பத்தின்னு கேட்டார் பரசுராமர். அதுக்கு அவர் சொல்றார். ஒரு பொண்ணு சமையல் செஞ்சு தர்றேன்னா. நானும் அங்கேயே தியானத்துல உக்காந்துட்டேன். அப்ப அந்தப் பொண்ணு கையில் நிறைய வளையல் போட்டிருந்தா. வேலை செய்யும்போது சத்தமா இருந்தது. அதனால் என் தியானத்துக்குப் பங்கம் வந்திடும்னு ஒவ்வொரு வளையலா கழற்றினா. கடைசியா ஒரு வளையல் மட்டும் இருக்கும்போது சத்தம் வரலை. அதைப் பார்த்து கூட்டத்தில் இருந்தா சாதிக்க முடியாது. சாதிக்கணும்னா தனிமையில் இருக்கணும்னு கற்றுக்கிட்டேன்’னு சொன்னார். உடனே பரசுராமர் சாஷ்டாங்கமா விழுந்து தத்தாத்ரேயரை, ‘குருதேவா’ன்னு வணங்கினார்.

இந்த ரஜினிகாந்துக்கும் பரசுராமர் நிலைதான். குருவைத் தேடி அலைந்தேன். கிடைத்தவர்தான் சுவாமி சச்சிதானந்தா. 1995-ல் அவரை சந்தித்தேன். ‘சுவாமிஜி என்ன சொல்றீங்க. ரஜினி பாலிடிக்ஸ் பேசறதைப் பத்தின்னு கேட்டிருக்காங்க சில பேர். அதுக்கு அவர் சொல்லியிருக்கார். ‘எண்பத்தஞ்சு வயசுல நான் என்னத்தை அவனுக்கு சொல்றது? அவனுக்குத் தெரியாதா? பாலிடிக்ஸ்ங்கறது வேணும்ங்கிறபோது சேர்த்துக்கிட்டு, தேவையில்லைங்கற போது கறிவேப்பிலை மாதிரி அவங்க தூக்கிப் போட்டுடுவாங்கன்னு. அவங்க தூக்கியெறியறதுக்கு முன்னாடி நாமளே வெளியே நின்னுடனும்னு முடிவு செஞ்சுட்டேன். இப்படி எவ்வளவோ விஷயங்கள் எல்லாமே சொல்லிவிட முடியாது.

‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ன்னு அவர்கிட்ட கடைசியா ஒரு முறை நிருபர்கள் கேட்டாங்க. அதுக்கு அவர், ‘அனைத்துக் கட்சித் தலைவர்களும் சேர்ந்து அழைச்சா வருவார்னும், நானே அவரை அரசியலுக்கு அழைச்சு வருவேன்னும் அப்ப அவர் பதில் சொன்னார். அப்போ நான் பெங்களூர்ல இருந்தேன். உடனே குருஜி எனக்கு போன் செஞ்சு, ‘நீ அரசியலுக்கு வருவியா?’ன்னு பத்திரிகையாளர்கள் கேட்கிறாங்க. நீ என்ன சொல்ல நினைக்கிறே?ன்னு கேட்டாங்க. ‘குருதேவா நீங்க என்னை கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் நான் குதிப்பேன்னு. அதற்கு அவர் சொன்னார்: நான் உன்னை கிணற்றில் குதிக்க சொல்ல மாட்டேன்னு. இங்கே அரசியல்ங்கிறது கபடி விளையாட்டு மாதிரி இருக்கு. அதுவே கால்பந்தாட்டம் மாதிரி இருந்தா பரவாயில்லை. எந்த அரசியலா இருந்தா என்ன. அதில் நமக்கென்ன வேலை?’

குருநாதர் ஜெயந்தி விழாவில் இப்படி அரசியலைப் பற்றி மட்டுமல்ல, தேசிய நதி நீர் இணைப்பு பற்றியும் பேசி அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு யோசனையும் சொன்னார் ரஜினி.

‘நதிகள் இணைப்புப் பற்றி பேசினேன். அதற்கொரு மக்கள் இயக்கம் அமைக்கப்போவதாகவும் சொன்னேன். ஆனால் தெய்வாதீனமாக இப்போது உச்ச நீதிமன்றமே நதிகளை இணைக்க வேண்டும்னு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருக்கு. பிரதமர் வாஜ்பாயும் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறார். இதனால் நாம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை நதி நீர் இணைப்புக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அதற்கு நிதி ஒதுக்கி, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு பகீரத யோசனா’ என்று பெயரிட வேண்டும். இது என்னுடைய யோசனை. இதனை நானே நேரடியா போ் பிரதமரிடம் சொல்லலாம்தான். ஆனால் இந்த மேடையில் சொன்னால், எனக்கு முன்னால் பத்திரிகைகள் வாயிலாக இந்தச் செய்தி அவருக்கு எட்டி விடுமே. அதற்காகத்தான் இங்கே இதைச் சொல்கிறேன்!’ என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

ரஜினி வரும்போதும், போகும்போதும் கொடீசியா கண்காட்சி வளாக அரங்கிற்குள்ளேயே அவரது கார் வந்து போக (மேடைக்கு அருகிலேயே) வசதி செய்யப்பட்டிருந்தது. அவருடன் வந்து விஐபி வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை ரசித்தபடி இருந்தார் லதா ரஜினிகாந்த். சில சமயங்களில் தன் தலைவர் ரஜினிகாந்தை நெருங்க முடியாத ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டாளம், லதாவை நெருங்கி, அவ்வப்போது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதும், ஆட்டோ கிராப் வாங்குவதாகவும் இருந்தனர்.

இதில் இன்னொரு அதிர்ச்சி +ஆச்சர்யம்+வேடிக்கையான விஷயம். ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற தீராத குழப்பத்தில் இருந்த ரசிகர்களில் ஒரு கூட்டம் அப்போது தனியே பிரிந்து, ‘லதா ரஜினிகாந்த் ரசிகர் பேரவை’ என்று ஓர் அமைப்பை ஆரம்பித்து விட்டதுதான். அவர்கள் அத்தனை பேருக்கும் இங்கே நேரடியாகவே உத்தரவாதம் வழங்கி விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். இனி, ‘ஆன்மிகத்தில் ரஜினி, அரசியலில் லதா!’ என்ற புதிய கோஷத்தைப் பிரகடனப்படுத்தப் போவதாகவும் அவர்கள் சொல்லிக் கொண்டனர்.

ரஜினி இந்த நிகழ்ச்சியை நடத்தி சென்ற மூன்றாம் நாளே உறுதிப்படுத்தினர் ரஜினி ரசிகர்கள். கோவைக்கு ரஜினி வந்திருந்த வேளையில் கோவையிலுள்ள ரஜினி ரசிகர் கோஷ்டிகளில் ஒன்று லதா ரஜினிகாந்தை தனியே சந்தித்துப் பேசியிருக்கிறது. தாங்கள் லதா ரஜினிகாந்த் பேரவை ஒன்றை ஆரம்பித்து விட்டதாகவும், அதனால் இன்னொரு குரூப் தங்களை டார்ச்சர் செய்வதாகவும், ‘ஏற்கெனவே ‘அம்மாவை’ (லதாவைத்தான் அப்படி சொன்னார்கள்) வாழ்த்தி மிகப்பெரும் கட் அவுட் வைத்திருந்தோம். அதை சத்தியநாராயணாவை வைத்து மிரட்டி கழற்றி விட்டார்கள். அதை திரும்பவும் நாங்கள் வைக்க வழி வகை செய்ய வேண்டும்!’ என்று குமுறியிருக்கிறார்கள். அப்போது லதா, ‘இப்போதைக்கு எதுவும் வேண்டாம். இரண்டு நாட்கள் பொறுமையாக இருங்கள். நான் திரும்பவும் கோயமுத்தூர் வருகிறேன். அப்போது எல்லாம் விரிவாக பேசிக் கொள்ளலாம்!’ என்று சொல்லி சென்றிருக்கிறார்.

ரசிகர்களிடம் வாக்கு கொடுத்தபடியே மூன்று நாட்கள் கழித்து தன் மகள்களுடன் கோவை வந்தார் லதா ரஜினிகாந்த். அப்போது அன்னை தெரசாவே; ஆற்றலில் இந்திராவே!’ என போஸ்டர்கள் வைத்து அவரை வரவேற்று ஜமாய்த்து விட்டார்கள் ரசிகர்களில் ஒரு பிரிவினர். அது பெரிய சர்ச்சைகளையும் கிளப்பியது.

- பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x