Last Updated : 09 Apr, 2018 03:10 PM

 

Published : 09 Apr 2018 03:10 PM
Last Updated : 09 Apr 2018 03:10 PM

தை புரட்சி – தொடரும் அதிர்வலைகள்

மனித மிருகம் என்பது என்ன? இக்கேள்விக்குப் பல அறிஞர்கள் பலவிதமான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். சிந்திக்கும் மிருகம், அரசியல் மிருகம், உழைக்கும் மிருகம், சிரிக்கும் மிருகம், விளையாடும் மிருகம், பழக்க மிருகம் போன்ற விளக்கங்கள் இவற்றில் அதிகக் கவனம் பெற்றவை.

அதிகக் கவனம் பெறாத விளக்கம் ஒன்றும் உண்டு. அது "போலச் செய்யும் மிருகம்". உண்மையைச் சொல்வதென்றால் "மனிதன் ஒரு போலச் செய்யும் மிருகம்" என்ற விளக்கத்தை எந்த அறிஞரும் இதுவரை அளித்திருக்கவில்லை.

ஆனால், மானுடச் சமூகத்தின் அடிப்படையான பண்பாக "போலச் செய்தல்" (imitation) இருக்கிறது என்பதை 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ் பெற்று விளங்கியவரான ஃப்ரெஞ்சு சமூகவியலாளர் கப்ரியேல் டார்ட் என்பார் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார். 1916 ஆம் ஆண்டு, கொலம்பியா பல்கலைக் கழகத்தில், இந்தியாவில் சாதிகளின் தோற்றம் குறித்து ஆற்றிய புகழ் பெற்ற ஆய்வுரையில் மாமேதை அம்பேத்கர், கப்ரியல் டார்டின் இக்கருத்தாக்கதைக் கையாண்டு, சாதிகள் இந்தியா முழுக்கப் பரவியிருப்பதற்கான காரணத்தை விளக்கியிருப்பார் என்பது சிறப்புக் கவனத்திற்குரியது.

அம்பேத்கரின் ஆய்வுரையில் அதிகக் கவனம் பெறத் தவறியக் கருத்தாக்கமும் அதுவே. போலவே, கப்ரியல் டார்டின் கருத்தாக்கமும் சமூகவியல் ஆய்வுப் புலத்தின் கவனத்தைப் பெறத் தவறியது ஒரு துரதிர்ஷ்டம். என்றாலும், அண்மைக் காலங்களில் கப்ரியல் டார்டின் கருத்தாக்கங்கள் மீளவும் கவனத்தைப் பெறத் துவங்கியிருக்கின்றன.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டிற்கு முன்பாக அவர் முன்வைத்த "போலச் செய்தல்" குறித்த செறிவு மிக்க கருத்தாக்கங்கள் தற்கால அரசியல் நிகழ்வுகளை கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்றன என்பதே அவற்றின் சிறப்பாகும்.

கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றிருக்கும் காவிரி நதி நீர் உரிமைக்கான போராட்டங்களையும் இப்"போலச் செய்தல்" நோக்கில் காணலாம்.

இவற்றில், எனது கவனத்தை ஈர்த்தவை இரண்டு. முதலாவது, 04.04.2018 அன்று கோவையில் திமுகவினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது.

இரண்டாவது, அதே நாளன்று, இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்திய இரயில் மறியல் போராட்டங்கள்.

கோவை திமுக வினர் வாயில் எலிப் பொம்மைகளை வைத்து நிகழ்த்திய மறியல் தில்லியில் தமிழக விவசாயிகள் நிஜமான செத்த எலிகளை வாயில் வைத்துக் கடித்து நிகழ்த்திய போராட்ட நிகழ்வின் "போலச் செய்தல்".

இரயில் மறியல் போராட்டங்களில், இரயில் நிறுத்தங்களில் வேகம் குறைந்து வந்து கொண்டிருந்த இரயில்களுக்கு முன்பாக இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியினர் பாய்ந்து ஓடியதை தொலைக்காட்சி செய்திகளில் தமிழக மக்கள் கண்ணுற்றிருப்பார்கள்.

இது, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கடந்த வருடம் தமிழகத்தில் வெடித்த இளைஞர்களின் எழுச்சியின்போது, மதுரையில் சில துணிச்சல் மிக்க இளைஞர்கள் மிகவேகமாக வந்துகொண்டிருந்த இரயிலைத் தம் உயிரைப் பொருட்படுத்தாது எதிர் சென்று மறித்து நிற்க வைத்த போராட்டத்தின் "போலச் செய்தல்".

ஆனால், சில வித்தியாசங்களும் உண்டு.

கடந்த வருடம் மதுரையில் மறிக்கப்பட்டது மிக வேகமாக வந்துகொண்டிருந்த ஒரு இரயில். மறித்தது, உயிரைப் பொருட்படுத்தாத இளைஞர்கள்.

இப்போது இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் மறித்தவை இரயில் நிலையங்களுக்கு வேகம் குறைந்து வந்துகொண்டிருந்த, அல்லது இரயில் நிலையங்களில் இருந்து மெதுவாகப் புறப்பட்டுக் கொண்டிருந்த இரயில்களை. மறித்தோர் பெரும்பாலும் தலை நரைத்தவர்களாக இருந்ததைக் காணமுடிந்தது.

கடந்த வருடம் தில்லியில் விவசாயிகள் வாயில் வைத்தது நிஜமான செத்த எலிகள். இப்போது கோவை திமுகவினர் வாயில் வைத்தது பொம்மை எலிகள்.

தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, போலச் செய்தலில் சில விதிகள் அமைந்துவிடுவதுண்டு. "போலச் செய்தலின் விதிகள்" (The Laws of Imitation) என்ற தமது புகழ்பெற்ற நூலில் கப்ரியல் டார்ட் அவற்றைத் தொகுக்க முற்பட்டிருக்கிறார்.

அவற்றில் சில:

சமூக மாற்றத்தின் உந்துவிசையாக இருப்பது புதியது புனைதல் (Invention).

புனையப்பட்ட புதியது, போலச் செய்தல் (Imitation) வழியாக சமூகம் முழுக்கப் பரவுகிறது.

புதியது புனைதல் சமூகத்தில் முன்னிலையில் இருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி, போலச் செய்தலாக சமூகத்தில் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் சென்று சேர்கிறது. ஜனநாயக நெறிகள் மேலோங்கியிருக்கும் சமூகங்களில், புதியது புனைதல் பின் தங்கியிருப்பவர்களிடத்தில் இருந்து தொடங்கி முன்னிலையில் இருப்பவர்களால் போலச் செய்தலாகப் பரவுவதற்கான நிலைமைகள் அதிகரிக்கின்றன.

போலச் செய்தல் காலம் மற்றும் வெளி ஆகிய இருநிலைகளில் அருகில் இருப்பவர்களிடையே கூடுதலாக இருக்கும். இடைவெளி கூடக்கூட போலச் செய்தலின் தன்மை அல்லது வீர்யம் குறையும். ஒரு குளத்தில் கல் எறிந்தால் தோன்றும் அதிர்வலைகள் போல புதியது புனைதலால் தோன்றும் போலச் செய்தலின் பரவல் இருக்கும்.

ஒரு சமூகத்தில் பல புதியன புனைதல் தோன்றுகின்றன. சில நிலைத்து போலச் செய்தல் மூலம் சமூகம் முழுக்கப் பரவுகின்றன. பல புதியன புனைதல் தோன்றிய சுவடே தெரியாமல் மறைந்துவிடுகின்றன.

சில புதியன புனைதல் நிலைத்து நிற்பதும், பல மறைந்துவிடுவதும் ஏன் என்ற கேள்வியின் ஆய்வாகத்தான் கப்ரியல் டார்டின் நூல் விரிகிறது. இங்கு விரித்து எழுதுவது சாத்தியமன்று. நோக்கமும் அன்று.

கவனத்திற்கு உரிய புள்ளிகளை மட்டும் ஒப்புநோக்கி குறித்துக்கொள்வோம்.

1000 மைல்கள் தொலைவுக்கு அப்பால் தமிழக விவசாயிகள் நிகழ்த்திய போராட்டம் ஒரு வருடம் கழித்து கோவை திமுகவினரால் போலச் செய்யப்படும்போது, நிஜ எலி பொம்மை எலியாக மாறிவிடுகிறது.

மிக வேகமாக வந்து கொண்டிருந்த இரயிலை உயிரையும் பொருட்படுத்தாது மறித்த இளைஞர்களின் போராட்டம் ஒரு வருடம் கழித்து போலச் செய்யப்படும்போது, இரயில்களின் வேகம் குறைந்துவிடுகிறது. மறிப்பவர்களின் வயதும் கூடிவிடுகிறது.

காலம் வெளி இவற்றுக்கிடையிலான தொலைவு கூடும்போது போலச் செய்தலின் வீர்யம் குறைந்துவிடுகிறது. குளத்தில் எறியப்பட்ட கல்லால் தோன்றும் அதிர்வலைகள் குளத்தின் கரையில் வேகம் குறைந்திருப்பதைப் போல.

சமூகத்தில் பொருட்படுத்தப்படாத பிரிவினராகக் கருதப்படும் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் புனைந்த புதியனவற்றை, சமூகத்தில் மிகவும் முன்னேறிய பிரிவினராக, முற்போக்கானவர்களாகக் கருதப்படும் இரண்டு கட்சியினர் (திமுக, கம்யூனிஸ்ட்டுகள்) போலச் செய்கின்றனர். வழி காட்ட வேண்டியவர்கள் காட்டப்பட்ட வழியில் பின் தொடர்கின்றனர்.

பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஜனநாயக நெறிகள் நிலைபெற்றிருப்பதற்கான சான்றுகளில் இது ஒன்று. அதே சமயம், கருத்தாக்கங்களின் அளவில் முன்னேறிய பிரிவினராகக் கருதப்படுவோரின் தேக்கத்தையும் சுட்டுவது.

தமிழக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் எறிந்த கல்லின் அதிர்வலைகள், புனைந்த புதிய போராட்ட முறைகள் நிலைபெற்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதே இதில் மகிழ்ச்சிக்குரியது.

தொடர்புக்கு: mathi2006@gmail.com)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x