Published : 07 Apr 2018 01:28 PM
Last Updated : 07 Apr 2018 01:28 PM

ரஜினி அரசியல்: 47 - ஆன்மிக வழி; அன்பு வழி

சச்சிதானந்தா சுவாமிகள் டிரஸ்ட்டைச் சேர்ந்தவர்கள் ரஜினி ஆன்மிக மந்திரத்தைத்தான் மேடையில் உச்சரிப்பார் என்று சொல்லிக் கொண்டிருக்க, கோவை ரஜினி ரசிகர்களோ மேற்சொன்ன ரஜினி அரசியல் பிரவேச சர்வே மற்றும் முந்தைய காவிரி அரசியல், நதி இணைப்பு மக்கள் இயக்கம் போன்ற விஷயங்களை முன்னிறுத்தி அரசியல் சிக்னல்தான் கொடுப்பார் என்று நம்பிக் கொண்டு பேட்டிகளும் அறிக்கைகளும் விட ஆரம்பித்தனர்.

கோவை ரசிகர் மன்றங்கள் அப்போதே பல கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தன. அதில் வேணுகோபால், கதிர்வேல் ஆகிய இருவரது தலைமையில் இரண்டு கோஷ்டிகள் பலமாக இருந்தன. அவை இரண்டும் தன் பரிவாரப் படைகளைத் திரட்டும் வேலையை முடுக்கி விட்டிருந்தன.

அவர்களிடம் பேசியபோது, ‘தலைவர் உண்ணாவிரதத்தின் போது வெளிப்படையான அரசியல் கட்சி அறிவிப்பார்னு எதிர்பார்த்தோம். நடக்கலை. பிறந்தநாளின் போது அதிரடியாய் அறிவிப்பார்னும் நெனச்சோம். அப்பவும் டாட்டா காட்டிட்டார். தலைவருக்கு குருஜிதான் எல்லாம். எனவே அவர் ஜெயந்தி நாளில்தான் அதை வெளியிடுவார்னு நம்பறோம்!’ என மிகுந்த எதிர்பார்ப்புடன் பேசினார் ஒரு ரசிகர் மன்ற நிர்வாகி.

இதைப் பற்றி விழா ஏற்பாடு செய்து கொண்டிருந்த டிரஸ்டிகளில் ஒருவரிடம் கேட்டபோது, தலையால் தண்ணீர் குடித்தார். 'நிச்சயம் அவர் அரசியல் பேசப்போவதில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எல்லாம் தீனி போடக்கூடிய நிலையிலும் அவர் இல்லை. ரஜினி அந்த மேடையில் என்ன பேசப்போகிறார் என்கிற ஸ்கிரிப்ட்டும் கூட ரெடியாகி விட்டது. அதையே தருகிறோம். பாருங்கள். தயவு செய்து ரஜினியை அரசியலோடு சம்பந்தப்படுத்தி மட்டும் மற்ற பத்திரிகைகள் போல எழுதாதீர்கள்!' என்ற வேண்டுகோளுடன் ரஜினிக்கு நெருக்கமானவர் ஒருவர் என்னிடம் அவர் பேசவிருந்த அறிக்கையையே தந்துவிட்டார்.

‘நான் எட்டு வயது முதல் ராமகிருஷ்ணா மடத்தில் கல்வி பயின்றேன். அப்போது என் குருநாதராக ராமகிருஷ்ண பரமஹம்சரையே ஏற்றேன். பதினெட்டு வயதிற்கு மேல் குரு ராகவேந்திரரை என் அகக்கண்ணில் கண்டு அகமகிழ்ந்தேன். முப்பது - முப்பத்தி மூன்று வயது காலகட்டங்களில் திருவண்ணாமலை ரமண மகரிஷியைக் கண்டேன். சகல சஞ்சலமும் நீங்கப் பெற்று, உண்மையே ஒளியாகிக் கலந்தேன். அதன் பிறகு ஆறு ஆண்டுகள். குரு தெரியாமல் குழம்பிப் போனேன். ரிஷிகேஷம், இமயமலைச சாரல்களில் எல்லாம் சுற்றித்திரிந்த எனக்கு குருஜி புலனாகவேயில்லை. ஆறு வருட காலம் அல்லலுற்ற அந்நிலை வாழ்க்கையை என்னவென்பேன். அந்தக் கால சுழற்சியின் போது கிடைத்தவர்தான் சுவாமி சச்சிதானந்த மகராஜ். ஆரம்பத்தில் அவர்தான் குரு என்பதை அறியாமல் தத்தளித்தேன். அவர் மிகப்பெரும் ஆன்மிக சித்தர் என்பதை எந்த நிலையிலும் அவர் காட்டிக் கொண்டதேயில்லை. அவர் போதித்த போதனைகள், தத்துவநெறிகள்தான் எனக்கு மார்க்கம். அவர் கொடுத்த தீட்சையின் மந்திரங்கள்தான் இனி என்னையும், உங்களையும், ஏன் எல்லோரையும் வழிநடத்தப் போகிறது!’ என்றெல்லாம் நீண்டது அந்தப் பேச்சு அறிக்கையின் சாராம்சம்.

‘சுவாமிஜி இருக்கும்போது அமெரிக்காவிலும் சரி, கோவையிலும் சரி ரொம்ப சிம்பிளாகத்தான் அவர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவோம். இப்போது சுவாமிஜி இறந்துவிட்டதால்தான் நாங்களாகவே ரஜினியை அழைத்தோம். அவர்தான் இதை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். அவரது தத்துவங்கள், ஆன்மிக நெறிகள், நம்நாட்டிலும் பரவிட வேண்டும். அதற்கு ஆரம்பமாக இந்நிகழ்ச்சி இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து, அவரவர் வேதப்படி ஒருங்கிணைந்து ஒரு தீபத்தை ஏற்றிட ஏற்பாடு செய்துள்ளோம். அதில் ரஜினியும் இருப்பார். அங்கே முழுக்க முழுக்க தியானம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான் இடம் பெறும்!’ என்று சொன்னார்கள் இந்த டிரஸ்ட் தலைவர் ராமசாமியும், விழாக்குழு அமைப்பாளர் கவிதாசனும்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புகள், சச்சிதானந்த மகராஜ் டிரஸ்ட் நிர்வாகிகளின் கூற்றுகள் இரண்டையுமே உள்ளது உள்ளபடி அப்போது நான் பணிபுரிந்து வாரமிருமுறை புலனாய்வு இதழில் முழுமையாக எழுதியுமிருந்தேன். அந்தச் செய்தி வெளியான சில நாட்களில் நிகழ்ச்சியும் வந்தது. அந்த நிகழ்ச்சி ஆன்மிக விழா போர்வையில் அரசியல் நிகழ்ச்சியாகவே மாறி விட்டது.

‘நம் நாட்டு அரசியல் என்பது கபடி விளையாட்டு போல் ஆகி விட்டது. அதில்தான் ஓர் அணியினரிடம் இன்னொரு அணியினர் ஒரே ஒருவனைத் தேர்ந்துடுத்து அனுப்புவார்கள். அங்கே அவன், எதிரணியினர் எல்லோரையும் அடித்து விட்டு வருவான். அல்லது அவனை எதிரணியினர் அவுட் ஆக்குவார்கள். அரசியல்னா எல்லாவற்றுக்கும் ஒன்று; ஒன்றுக்காக எல்லாம் என்பது போல. என்னைப் பொறுத்தவரை அரசியல் கால்பந்தாட்டம் போல இருக்க வேண்டும். அதில்தான் யாரொருவன் கோல் போடுகிறானோ, அவனை மற்றவர் அத்தனை பேரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். எந்த அரசியலானால் என்ன? அது நமக்கெதற்கு?’என புது அரசியல் உபதேசத்தை உச்சரித்தார் ரஜினி.

பொதுவாக படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சாதாரண உடையில் ஷேவ் செய்யப்படாத முகத்துடன், நரைத்த முடியுடன்தான் காட்சியளிப்பார் ரஜினி. ஆனால் அதற்கு மாறாக இந்த விழாவில் மழுங்க மழிக்கப்பட்ட தாடி, டை அடிக்கப்பட்ட தலை, பிஸ்கட் நிறத்தில் கதர் ஜிப்பா, கண்ணுக்கு அடக்கமான புதுவிதமான கண்ணாடி என இருந்தார். ஒரே ஒரு காந்த குல்லா மட்டும் மாட்டியிருந்தால் அசல் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் தோற்றுப்போயிருப்பார்கள். இந்த சூப்பர் கெட்-அப்பைப் பார்த்த ரசிகர்கள் உணர்ச்சிகளின் எல்லைக்கே சென்று விட்டனர். ‘பாபாஜி’ என்று அழைத்தவர்கள் ஒரு கட்டத்தில் ‘நேருஜி’ என்றும் கூச்சல் போட்டு அழைக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி கூடிய கூட்டம், கத்திய கத்தல், போட்ட கோஷத்தின் வெளிப்பாடோ என்னவோ ரஜினி முழக்கமும் ஆன்மிகம் கலந்த அரசியல் முழக்கமாக மாறி விட்டது.

‘ரஜினி மீறி மீறிப் பேசினால் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசுவார். அதில் பரிசுத்தமான ஆன்மிகம் மட்டுமே இருக்கும். சுவாமி சச்சிதானந்தாவுடனான நெருக்கம் குறித்த உணர்ச்சிகர சம்பவங்களே அதில் நிறைந்திருக்கும். அதை நாங்கள் படித்துப் படித்து சொல்லியும் நீங்கள் செய்தியை அரசியல் மயமாக எழுதி, அசிங்கப்படுத்தி விட்டீர்களே? என்று நான் எழுதிய செய்தியைப் படித்துவிட்டு நம்மிடம் விமர்சனம் செய்த விழாக்கமிட்டியினர் சிலர் கூட ரஜினியின் பேச்சைக் கேட்டு வாயடைத்துப் போய் விட்டனர். அதை விட வாயடைக்க வைத்தது, மற்ற ஆன்மிகத் தலைவர்களின் பேச்சு. ரஜினி பேசியது அரசியல் என்றால், மற்றவர்கள் பேசியது ரஜினி. ரஜினி, ரஜினியைப் பற்றித்தான்.

பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் பேசும்போது, ‘உங்கள் உள்ளத்தை கவர்ந்திருக்கிற ரஜினிகாந்த் உங்களை வழிநடத்திச் செல்லக்கூடிய தூதுவராக இருக்கிறார். அவர் வழி ஆன்மிக வழி. அவர் வழி அன்பு வழி. அந்த வழியில் நீங்களும் உங்கள் வாழ்வை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும். ரஜினி வருவதற்கு முந்தைய காலத்தில் இருந்த சினிமா வேறு. ரஜினிக்கு பின்னால் வந்த சினிமா வேறு. அவர் மெய்வழி காணும் உத்தமராக விளங்குகிறார். அவரால் நிச்சயம் மனித சமுதாயம் மேன்மையடையும். அத்தகைய ஞானி நிலையை அவர் அடைந்திருக்கிறார். அவ்வழியே நீங்கள் மெய்வழி காணவேண்டும்!’ எனக் குறிப்பிட்டார்.

ரஜினியின் 'எஜமான்' படத்தின் படப்பிடிப்பிற்காக தன் அரண்மனையை அளித்தவரும், சமத்தூர் ஜமீனின் வாரிசுமான கிருஷ்ணராஜ் வானவராயர் பேசும்போது, ‘எஜமான்’ பட ரேஞ்சுக்கே போனார். ‘எத்தனையோ ஆன்மிகக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். எங்கேயும் இத்தனை கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது கூட்டப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. கூட்டி வரப்பட்ட கூட்டமாகவும் தெரியவில்லை். விரும்பி வந்த கூட்டமாக, தானா சேர்ந்த கூட்டமாகத் தெரிகிறது. அதிலும் ரஜினியிடம் விளக்கம் பெற வந்திருப்பதாகவே தெரிகிறது.

நீங்கள் வரவேண்டிய இடத்திற்குதான் வந்திருக்கிறீர்கள். அதற்காக அவர் ஒருவரைப் பாராட்டி நன்றி தெரிவித்தாக வேண்டும். ரஜினிகாந்த் நடிகரானார். அதை விட அவர் ஆன்மிகத்தில் ஆழ்ந்தார். உலகப் புகழ் பெற்றார். அவருடைய ரசிகர்கள் நீங்கள். சாதனையாளராகத்தான் விரும்புவீர்கள். இம்மண்ணில் பிறந்து வளர்ந்து உருவாகி... உண்மை ஒன்று, வழிகள் பல என்பதை உலகம் முழுக்க உபதேசித்து மறைந்தவர்தான் சுவாமி சச்சிதானந்தா. அவர் இறுதியாக உபதேசம் செய்தது யாருக்காக என்று சொன்னால், நீங்கள் யாருக்காக வந்திருக்கிறீர்களோ, அவருக்காக (கைதட்டல், ஆர்ப்பரிப்பு). நடிக்க மாட்டேன் என்றவரை நடிக்க வைத்துள்ளார் அவர்.

ஒரு முறை சுவாமிஜியுடன் ஆழியாறில் பேசும்போது ஒன்றை தெரிவித்தார். ‘நான் அவரை நடிக்க வைத்தது அவருக்காக அல்ல. அவரைக் கருவியாக உபயோகித்து நாட்டிற்காக பயன்படுத்தி உள்ளேன். அதுதான் 'பாபா' படம் என்றார். நண்பரே (ரஜினியை பார்த்து) நாடு உங்களிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறது. கோடானு கோடி இளைஞர்கள் உங்கள் ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களை ஆன்மிக வழிக்கு அழைத்து வந்து இந்த பாரத தேசத்தை தூய்மைப் படுத்துங்கள்!’ என்றார்.

- பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x