Published : 05 Apr 2018 07:33 PM
Last Updated : 05 Apr 2018 07:33 PM

ரஜினி அரசியல்: 46 - அதிர்ச்சி தந்த ரகசிய சர்வேக்கள்

‘ரஜினி ரொம்பவும் அழுத்தமானவர். எதைச் செய்ய வேண்டுமோ அதை உடனே செய்து விடுவார். அவரைப் பொறுத்தவரை அரசியலில் விருப்பமேயில்லை. ஆன்மிக வழியில்தான் நிறைவு இருப்பதாக கருதுகிறார். அதில் தன் குருஜிக்கான ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது தன் தார்மீக கடமை என்று உணர்ந்தே இருக்கிறார். சென்னையில் இருந்தாலும், கோவையிலேயே இந்த விழா ஏற்பாட்டை செய்யச் சொன்னதோடு அடிக்கடி தொலைபேசியிலும் விழாக் குழுவினருடன் அவர் பேசி வருகிறார். விழா எப்படியெல்லாம் அமைய வேண்டும். நிகழ்ச்சி வரவேற்பு முதல் நன்றியுரை வரை எப்படி இருக்கவேண்டும். யாரெல்லாம் என்ன பேச வேண்டும். நிகழ்ச்சியில் டிசிப்ளின், பங்க்ச்சுவாலிட்டி எவ்வளவு முக்கியம் என்பதையெல்லாம் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

எந்த இடத்திலும் சினிமாவோ, அரசியலோ வந்து விடவே கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறார். அவரது ஒவ்வொரு அசைவையும் பார்க்கும்போது குருஜி வழியில்தான் அவரும் செல்கிறார் என்பதையே எங்களால் உணர முடிகிறது. குருஜி என்னவெல்லாம் செய்ய நினைத்தாரோ, அதையெல்லாம் செய்தாக வேண்டும் என்ற வேகத்துடிப்போடு நிற்கும் ஒரு சரியான சிஷ்யனின் நிலையை அவரிடம் காண முடிகிறது. அந்த வகையில் பார்த்தால், குருஜி ஜெயந்தி விழாவில் அவர் ஒரு மந்திரத்தை ஓதப்போகிறார். அது நிச்சயம் ஆன்மிக மந்திரமாகத்தான் இருக்கும்!’ என்பதை உறுதிபட சொன்னார்கள் டிரஸ்டியினர்.

ஆனால் ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரமோ அதற்கு நேர் எதிரிடையான கருத்தைப் பேசியது. ‘சமீபத்தில் நடந்து முடிந்த காவிரி உண்ணாவிரதம், அதைத் தொடர்ந்து ரஜினியே அறிவித்த மக்கள் இயக்கம் என்பதெல்லாம் அவரின் ஆன்மிகப் பயணத்தை உணர்த்தவில்லை. அதிலும் தன் மீது களங்கம் கற்பிக்க காவிரியைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்தில் பதிலடி கொடுப்போம். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்த வார்த்தைகளுக்கு நிறைய அர்த்தம் உண்டு. அது வெறுமனே சந்நியாசம் கொள்ளும் ஆன்மிகத்திற்கான கூற்று அல்ல. அதை சச்சிதானந்த மகராஜ் ஆன்மாவும் கூட ஏற்றுக் கொள்ளாது.

மக்கள் விரும்பி அழைத்தால் ரஜினியை நானே அரசியலுக்கு போக வலியுறுத்துவேன் என்று அவர் சொன்ன கருத்தும் பொய்யாகாது. அந்த வகையில் தனக்கு தற்போது அரசியல் செல்வாக்கு எந்த அளவு இருக்கிறது. காவிரி உண்ணாவிரதம், நதிநீர் இணைப்பு பிரச்சாரம் எல்லாம் எந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறது என்பதையெல்லாம் முன்வைத்து ஒரு அரசியல் சர்வேயை அவரின் நெருக்கமான நண்பர்கள் செய்து முடித்துள்ளார்கள். அதை முன்வைத்து தன் அரசியல் பயணத்தை ரஜினி அறிவிப்பார்!’ என்றே அதில் குரல்கள் உயர்ந்து நின்றன.

அதையொட்டி ரஜினி அரங்கில் நெருக்கமான பத்திரிகை நண்பர் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதன் சுருக்கம் இதுதான்:

1996. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக எந்த ஒரு சர்வேயும் தேவைப்படாத வருடம். அவரது வருகைக்காக பட்டுக்கம்பளம் விரித்துக் காத்திருந்தது தமிழக அரசியல். 1991 முதல் 1996 வரை கோட்டையில் இருந்த அதிமுக அரசின் மீதும், ஜெயலலிதா மீதும், ஆழ்ந்த வெறுப்பு கொண்டிருந்த தமிழக மக்கள், ஒரு புதுமுகத்தை விரும்பினார்கள். அது ரஜினியின் முகமாகவே இருந்தது.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் சரிவிகிதத்தில் கலந்து, ரஜினிக்கு அசாத்திய பலம் வந்திருந்த அந்தச் சூழலில் ரஜினி வெளிப்படையாக தன் எண்ணத்தைக் கூறவேயில்லை. ஆனால் அவர் அப்போது பொதுவாகக் கூறிய ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டன. ரஜினியிடம் மக்களுக்கு இருந்த காந்த சக்தியைக் கண்ட மற்ற அரசியல் கட்சிகள், ஆளுக்கொரு தூண்டிலுடன் அவரைப் பிடிக்கக் காத்திருந்தன.

அப்போதும் நிதானத்தையே கையாண்ட ரஜினி, திமுகவிற்கும் அப்போதைய தமாகாவிற்கும் தனது ஆதரவைத் தந்தார். அமோக வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போதிலிருந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விஷயம் கூடுதல் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது. அதை உண்மையாக்கும் வண்ணம் ரஜினியின் படங்களில் அதிரடி அரசியல் வசனங்கள், 'பஞ்ச்'கள் வெடித்துக் கிளம்பின. தனிக்கட்சி ஒன்றைத் தலைவர் எப்போது அறிவிப்பார் என்ற காத்திருப்பில் ரசிகர்களின் பல்ஸ் எகிறியது.

அப்போதும் மவுனத்தையே தன் பதிலாக ரஜினி முன்வைத்தார். எந்த மவுனம் தன் பலம் என ரஜினி நினைத்தாரோ, அதுவே அவரது பலவீனமாகவும் போய்விட்டது. பொதுமக்களிடம், அவரது அரசியல் பிரவேசம் பற்றிய உற்சாகம் குறைந்தது. ரஜினிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம் என எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத் தேர்தல். இதிலாவது ரஜினி தனிக்கட்சி கண்டு போட்டியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தித்தனர்.

இம்முறை ரஜினியும் சில தீர்மானகரமான முடிவுக்கு வந்திருந்தார். அதனடிப்படையில் ரகசிய சர்வே ஒன்றும் எடுக்க முடிவானது. அந்த சர்வே ரஜினிக்கு நெருங்கியவர்களால் தமிழகம் எங்கும் நடத்தப்பட்டது. நிச்சயம் சாதகமான முடிவுகளை தரும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த சர்வே, ‘ஆன்ட்டி-க்ளைமேக்ஸ்’ ஆனது. ரஜினியும், அவருக்கு வேண்டியவர்களும் சர்வே முடிவுகளைப் பார்த்து அதிர்ச்சியே அடைந்துவிட்டனர்.

ரஜினியின் அரசியல் பிரவேசம், ஒரு போதும் அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது. அதிமுக ஆதரவு வாக்குகளில் சில சதவீதங்கள் கூட ரஜினிக்கு வராது. திமுக போன்ற இதரக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் வேண்டுமானால், கணிசமான ஆதரவு ரஜினிக்கு வரக்கூடும். காரணம் அக்கட்சிகளில் பரவிக்கிடக்கும் ரஜினி ரசிகர்கள். அதிலும் தனிக்கட்சி மூலம் திமுக வாக்குகளையும் ரஜினியினால் அதிகமாகப் பெற முடியாது என்பதுதான் 2001-ல் எடுக்கப்பட்ட சர்வே சொன்ன தகவல்கள்.

இந்த கருத்துக் கணிப்புக்குப் பிறகு மறுபடியும் அமைதியாக விட்டார் ரஜினி. இந்த மவுனம் 'பாபா' பட அறிவிப்பு வரை நீடித்தது. அதன் பிறகு மீண்டும், ‘ஆன்மிகமா, அரசியலா? ரஜினி எதற்கு வருவார்’ என்ற கேள்விகள் இன்னொரு ரவுண்ட் வந்து தீவிரமாக அலசப்பெற்றன. இதற்கிடையே பாமக உள்ளே புகுந்து 'பாபா' படத்துக்கு பெரும் இம்சையைக் கொடுத்தது. தன் படத்திற்காக மட்டுமல்லாது, ரசிகர்களை சூடாக வைத்துக் கொள்வதற்காகவேனும், அதற்கும் எதிர் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது.

அதே நேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக, கர்நாடக திரையுலகம் திடீரென குதிக்க, அரசியல் ரீதியாக இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நெருக்கடி ரஜினிக்கு ஏற்பட்டது. காவிரி பிரச்சினைக்காக வெற்றிகரமாக உண்ணாவிரதம் நடத்திய ரஜினி, ‘தேர்தல் வரும்போது பதில் சொல்வேன்!’ என தன்னை எதிர்த்தவர்களுக்கு பதில் சொன்னார். இந்த சமயத்தில்தான் ரஜினியின் செல்வாக்கு பற்றி மற்றுமொரு சர்வே எடுக்க திட்டமிடப்பட்டது.

இம்முறையும் ரஜினிக்கு நெருக்கமானவர்களே அந்த சர்வேயை எடுத்தனர். அதன் முடிவும் 2001-ம் ஆண்டு சர்வேயின் ஜெராக்ஸ் போலவே இருக்க, ஆடிப்போனது ரஜினி தரப்பு. எம்.ஜி.ஆரைப் போலவோ, என்.டி.ராமராவைப் போலவோ மாபெரும் அலையாக ரஜினி உருவாவது கஷ்டம். அதற்கான சூழல் 1996-ம் ஆண்டுடன் முடிந்துவிட்டது. இப்போதும் அதிமுகவைத் தவிர, பிற கட்சிகளின் வாக்குகளை வேண்டுமானால் ரஜினியின் அரசியல் பிரவேசம் பிரிக்கும். மற்றபடி தனி முத்திரை பதிக்க வாய்ப்பில்லை என்பதே இப்போது சொல்லியிருக்கும் சேதியும் ஆகும்.

சேலம் திருமண விழாவில் விஜயகாந்த் ஆவேசம், சரத்குமாரின் மன்றக் கொடி இவையெல்லாம் அவர்களுடைய ரசிகர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. அதுபோல கோவையில் தன் குருவுக்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்ளும் ரஜினி, என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ, அதை ரசிகர்கள் மட்டுமல்ல, பிற அரசியல் தலைவர்களும், மக்களும் கூட உன்னிப்பாக கவனிக்கக் காத்திருந்தனர். ஆனால் அவருக்கு அரசியல் ரீதியான ரிசல்ட்தான் பாசிட்டிவ்வாக இல்லை!’

- பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x