Last Updated : 28 Mar, 2018 06:39 PM

 

Published : 28 Mar 2018 06:39 PM
Last Updated : 28 Mar 2018 06:39 PM

காற்றில் கரையாத நினைவுகள்: கடிதாசி

கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம். அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடம் இருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம் என்று உறையைப் பார்த்ததும் உடம்பு முழுவதும் உணர்ச்சி கொந்தளிக்கும்.

கடிதத்தால் வாழ்க்கை மாறிப்போனதாக காவியங்களும், திரைப்படங்களும் வெளிவந்த காலம் உண்டு. தாமதமான வேலைவாய்ப்புக் கடிதத்தால் நிலைகுலைந்த இளைஞன், தவறிப் போன காதல் கடிதத்தால் தலைகுனிந்த காதலர்கள், அநாமதேயமாக வந்த புகார்க் கடிதத்தால் அவமானப்பட்ட அபலைகள் என புனைவு இலக்கியத்தில் பல நிகழ்வுகளுக்குக் கடிதம் காரணமாக கற்பிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.

முகவரி மாறியதால் வாழ்வே திசை திரும்பியதாக படைக்கப்பட்ட புதினங்களும் உண்டு. கடித இலக்கியம் என்கிற புனைவும் இருந்தது.

கடிதத்தில் முகம் தெரியும்

கடிதங்களாலே அதில் மொத்தக் கதையும் நகரும். தம்பிக்கும், தந்தைக் கும் கடிதம் எழுதுவதுபோல நாட்டு நடப்பை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைமுறையும் இருந்தது.

அறிவுரைகளை மாணவர்களுக்குத் தோளில் கைபோட்டு தோழமையுடன் கடிதமாக எழுதும் வழக்கமும் இருந்தது.

கடிதம் என்பது காகிதமல்ல; வாழ் வின் பகுதி. அந்தக் காலத்தில் கடிதத்தை வாசிக்கும்போது எழுதியவர் முகம் அதில் தெரிவதைப் போலவும், அவரே பேசுவதைப் போலவும் திரைப்படங்களில் காண்பிப்பார்கள். வாழ்க்கையின் ஒருகட்டத்தில் எல்லோருமே அன்று ஒரு கடிதத்துக்காகக் காத்திருந்தார்கள்.

வேலைவாய்ப்புக்கான ஆணை கிடைக்காதா என்றும், பெண் வீடு பார்த் துச் சென்றவர்கள் சம்மதம் தெரிவிக்க மாட்டார்களா என்றும், எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராதா என்றும், விரும்பிய படிப்புக்கு அழைப்பு வராதா என்றும் வாழ்நாள் முழுவதும் அன்று நல்ல சேதிக்காக தபால்காரரை எதிர்பார்த்து மக்கள் தவமிருந்தார்கள்.

அன்று ஒரு கடிதம் வந்தால் இல்லத் தில் யார் வேண்டுமானாலும் பிரித்துப் படிக்கலாம் என்ற சுதந்திரம் இருந்தது. கடிதம் வீட்டுக்கானது. முகவரி மட்டுமே குடும்பத் தலைவரின் பெயரில் இருக்கும்.

வீட்டில் நீளக் கம்பி குடைக் கைப் பிடியைப் போன்ற தோற்றத்துடன் தொங்கிக்கொண்டிருக்கும். படித்து முடித்த கடிதங்கள் அதில் பத்திர மாகச் சொருகப்படும். எந்தக் கடிதத்தையும் தூக்கி எறியும் வழக்கமில்லை.

மஞ்சள் குளித்த அஞ்சல்

எப்போதாவது நுனிகளில் கருப்பு மை தடவிக்கொண்டு மரண அஞ்சல் அட்டை வந்து சேரும். உடனே, அது கண்டந்துண்டமாகக் கிழிக்கப்பட்டு குப்பையில் வீசி எறியப்படும். மங்கள நிகழ்வுகள் மூலைகளில் மஞ்சள் பூசிக்கொண்டு வருவதும் அவற்றை நிகழ்வு முடிந்த பிறகும் கோத்து வைப்பதும் உண்டு.

கடிதங்களெல்லாம் ஆவணங்களாகக் கருதப்பட்ட காலம் அது. ஆண்டு முடிந்த பிறகு அனைத்துக் கடிதங்களும் ஆராயப்படும். போகிப் பண்டிகை அன்று தேவையற்றவை நெருப்புக்குக் கொடுக்கப்படும்.

சொந்தங்களை அன்று கடிதக் கயிறுகள் இறுக்கிக் கட்டின. தொய்வு விழும்போதெல்லாம் ஆறுதலாகக் கடிதம் வந்தால் அத்தனை வருத்தமும் ஆவியாகும். எல்லாவற்றையும் கடிதத்தில் சொல்லி நிம்மதி அடையும் உறவும் நட்பும் இருந்தன. எல்லோரும் நலம் என்று தொடங்கும் கடிதத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அம்மை வந்த சேதி விலாவாரியாக விளக்கப்படும்.

காலில் புண் ஏற்பட்டது முதல் வீட்டு முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சி வந்தது வரை அனைத்தையும் தெரி விக்கும் வழக்கம் இருந்தது. ஒரு செய்தியில் இருந்து இன்னொரு செய்திக்கு கடித வரிகள் தாவும்போது ‘நிற்க’ என்று எழுதும் மரபும் இருந்தது.

ஒரே கடிதம் பல முறை படிக்கப் படும். அப்பா படித்து முடித்த பிறகு அம்மா அதை சாவகாசமாகப் படிப்பார். பலர் எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றது கடிதம் என்னும் காவியத்தால்தான். வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக் கடிதமும், தோல்வியுற்றதற்கு ஆறுதல் சொல்லியும் சாயும் தோளாய் நீளும் கடிதங்கள் நிறைய இருந்தன.

நலம், நலமறிய அவா

கடிதம் போடாவிட்டால் கோபித்துக்கொள்வார்கள். அதற்காகவே எதையேனும் எழுதி அஞ்சலில் சேர்க்கும் வழக்கம்கூட இருந்தது. திடீரென எழுதுபவர்கள் கடிதம் போட்டுவிட்டு உடனே மறுமடல் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அழகான கையெழுத்தால் கடிதத்தை அலங்கரிப்பார்கள் சிலர். அந்த முத்துமுத்தான கையெழுத்தைப் பார்க்கும்போதே பரவசம் ஏற்படும். அவர் கள் நம் அருகில் வந்து காதுகளின் ஓரம் கிசுகிசுப்பதைப் போல நெருக்கம் தோன்றும். நமக்காக மெனக்கெட்டு எழுதியிருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். அஞ்சலட்டையில் அந்தரங்கங்களை எழுதும் கஞ்சர்களும் இருப்பார்கள். எந்தப் பகுதியையும் வீணாக்காமல் வளைத்து வளைத்து எழுதிச் சிக்கனம் காட்டும் சிலரும் உண்டு.

அஞ்சல் கொண்டு வருகிறவர் அன்று முக்கியப் பிரமுகர். தபாலில் இருப்பதற்கு அவரே பொறுப்பு என்பதைப் போன்ற எண்ணம் அன்று எல்லோருக்கும் இருந்தது.

தேர்வில் வெற்றி பெற்றதும் அவ ரைக் கட்டிப்பிடித்த மாணவர்கள் உண்டு. இல்லத்தின் அங்கமாக ஆன தபால்காரர்களும் இருந்தார்கள். அவர் கள் அந்தப் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமான பிரபலம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

திருமணங்களுக்கும் அழைக்கப்படுவார். இன்று கடிதத்தைக் கொண்டு வருகிறவர் பெயர்கூட தெரியாத நிலை. அதைக் கடமையாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை. அன்று அஞ்சல்காரரை மட்டுமா மதித்தோம். சிவப் புத் தபால் பெட்டியையும் பார்த்தால் சிலிர்த்துப் போவோம். அதன் வழியாக எத்தனை தகவல்கள் வந்து சேர்ந்தன என்று பூரிப்பு அடைவோம். எத்தனை கோந்து இருந்தாலும் எச்சிலால் ஒட் டிய கடிதங்களே அதிகம்.

அஞ்சலகம் அடிக்கடி செல்வதை செயலாகக் கொண்டவர்களும் இருந்தார்கள். பணவிடை அனுப்பவும், பதிவு அஞ்சல் அனுப்பவும் வரிசையில் காத்திருப்போம். படித்து முடித்த பிறகு பணிக்காக எதிர்பார்க்கும் அவசரத்தில் வீட்டுக்கு அஞ்சல் வரும் வரை காத்திருக்காமல் அஞ்சல் நிலையத்துக்கே சென்றுவிடுவோம்.

கடிதம் என்றால் களிப்பும், தந்தி என்றால் பயமும் ஏற்பட்ட காலம் அது. மாணவர்களாக இருந்தபோது விடுதிக்குச் சென்றதும் முதலில் விலாவாரியாகக் கடிதம் எழுதுவோம்.

பேராசிரியர் பெயர் முதல் காலை யில் உண்ட சிற்றுண்டி வரை அனைத்தையும் எழுதி ஆர்வமாகப் பகிர்வோம். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு பணம் கேட்பதற்கு மட்டும் கடிதம் செல்லும். சடங்காக நான்கு விசாரிப்புகளை அங்கங்கே தூவுவோம்.

தொடக்கத்தில் வீட்டுச் சிந்தனையைவிட்டு வெளிவர முடியாத பழக்கதோஷம். அப்போது அப்பாவின் கடிதத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து அறைக்குச் செல்வோம். பிறகு பழக்கமே தோஷமானதால் கடிதம் மீது நாட்டம் குறையும்.

மற்றவை நேரில்

அன்று பேனா நண்பர்கள் என்ற நட்பு வட்டம் உண்டு. தெரியாதவர்களை நட்பாக நினைத்து கடிதத்தின் மூலம் சிநேகம் செய்யும் நடைமுறை அது. இன்று அதுவே முகநூலாக ஆகிப்போனது. முகம் தெரியாதவர்களும், முகவரி தெரியாதவர்களுமே முகநூல் நண்பர்கள்.

காலம் எதையும் நீடிக்க விடுவது இல்லை. இன்று கடிதம் என்பது மொழிப் பாடத்துக்கான ஒரு பயிற்சி. மின்னணுச் சாதனத்தில் உடனே அழைத்துப் பேசலாம், குறுந்தகவல் தரலாம், மின்னஞ்சல் செய்யலாம்.

எந்த வீட்டிலும் கடிதங்களை கோக் கும் கம்பியும் இல்லை; அப்படியான பழக்கமும் இல்லை. கடிதம் எழுதும் பொறுமையும் யாருக்கும் இல்லை. கைப்பட எழுதும் பழக்கம் இளைய தலைமுறையிடம் அறவே இல்லை. கடிதம் என்பது மறைமுகமான சமூகத் தணிக்கை.

அரசு அலுவலகங்களால் மட்டுமே இன்று கடிதப் போக்குவரத்து உயிர்த்திருக்கிறது. மொட்டைக் கடிதங்களை யும் சேர்த்து.

தந்தியைப் போல தபாலும் காலாவதியாகும் காலம் ஒன்று வரலாம். கடிதம் மறைந்தால் அத்துடன் பல கனவுகள் அழியும். கடிதங்களை காலத் தின் இதயத்தில் வைத்து காப்பாற்ற வேண்டாமா!

- நினைவுகள் படரும்...

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x