Published : 17 Mar 2018 04:18 PM
Last Updated : 17 Mar 2018 04:18 PM

யூடியூப் பகிர்வு: அணுகும் ஆண்களை இனங்காட்டும் பச்சோந்தி குறும்படம்

நன்றாகப் படித்து பன்னாட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களாக இருக்கட்டும், தங்களுடைய அடிப்படை வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வீட்டு வேலை செய்யும் பெண்களாக இருக்கட்டும், யாரும் தங்கள் மேலதிகாரிகளின் பாலியல் சீண்டல்களிலிருந்தும், அவர்களை போகப்பொருளாக பார்க்கும் பார்வையிலிருந்தும் தப்பிக்க முடிவதில்லை.

பணியிடங்களில் மேலதிகாரியாக இருப்பதால் மட்டுமே தனக்கு கீழ் பணிபுரியும் பெண்களை நமக்கு சொந்தமானவர்கள், அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்ட ஆண்களே இங்கு அதிகம்.

அப்படிப்பட்ட ஆண்கள் நமக்கே தெரியாமல் நம் அருகிலேயே, ஏன் அவர்கள் நமக்கு மிக நெருக்கமான உறவாக இருக்கக்கூடும் என்பதை ‘பச்சோந்தி’ குறும்படம் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

பெருநிறுவனமொன்றில் வேலை பார்க்கும் லஷ்மியை, அவருடைய மேலதிகாரி தன்னுடைய அறைக்கு அழைக்கிறார். அப்போதே நமக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. ஆனால், உள்ளே என்ன நடந்தது என்பதை நமக்கு காட்டாமல், அடுத்த காட்சியில் லஷ்மி தன் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி இடம்பெறுகிறது. அறையில் நிகழ்ந்தவற்றை லஷ்மி தன் அம்மாவிடம் எடுத்துக்கூறி அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனைக்காக காத்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால், அவருடைய அம்மா எடுத்த எடுப்பிலேயே, “வேலையை விட்டுவிடு”, “கல்யாணம் செய்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது” என, பாதிக்கப்பட்ட தன் மகள் மீதே பழியை சுமத்துகிறார். அப்போது எதிர்பாராமல் வரும் லஷ்மியின் அப்பா, தன் மகளுக்கு நம்பிக்கையளித்து நடந்தவற்றைக் கூறச் சொல்கிறார். அதுமட்டுமின்றி என்ன செய்யவேண்டுமெனவும் ஆலோசனை கூறுகிறார்.

சாமிகள் எங்கும் இருப்பதைச் சுட்டிக்காட்டும் இக்குறும்படம் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்கும் வழிமுறைகளையும் கூறியுள்ளது ஆறுதலான விஷயம். இப்படத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகவே தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளார்கள்.

ஏ டென் ஹெட் மீடியா புரடக்ஷன்ஸ் தாயாரித்திருக்கும் இந்தக் குறும்படத்தை நடிகர் சம்பத் ராஜ் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தைப் பார்த்தால் ‘சாமி எல்லா இடத்துலயும் இருக்கு’ன்னு பெரியவங்க ஏன் சொன்னார்கள் என்பது புரிந்துவிடும்.

 

குறும்படத்தைக் காண:

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x