Published : 13 Mar 2018 09:36 AM
Last Updated : 13 Mar 2018 09:36 AM

இணைய களம்: கர்நாடக வனங்களில் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடு!

ராண்டுக்கு முன்பு நண்பர்களுடன் கர்நாடகத்தின் முத்தத்திக் காடுகளுக்குச் சென்றோம். அது காவிரிக்கரை. காடுகள் வழியே செல்லும் வழித்தடம் என்றாலும் அது பாதுகாப்பானது. மேலே இருக்கும் கிராமங்களுக்கு அதுவே வழி. இருப் பினும், வாகனங்களைவிட்டு இறங்கவே கூடாது. ஒலி எழுப்பாமல் ஹாரன் அடிக்காமல் செல்ல வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர் வனத் துறை அதிகாரிகள். வாகன வேகம் 30 கிலோ மீட்டரைத் தாண்டக் கூடாது எனும் கட்டுப்பாடும்கூட.

மேலே சென்று இளைப்பாறி, காவிரியில் குளித்து எல்லாம் ஆயிற்று. காடுகளினூடே நடந்துசெல்ல நினைத்து வன அதிகாரிகளை அணுகினால், “இதற்கெல்லாம் முன் அனுமதி வாங்க வேண்டும். இல்லை யெனில், உள்ளே நுழையவே இயலாது” எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

உள்ளூர் ‘பெரிய கை’யிடம்கூட முயற்சிசெய்து பார்த்தோம். ம்ஹூம்.. நடக்கவேயில்லை. வேறுவழியின்றி, கரையில் அமர்ந்தபடியே பார்த்துவிட்டு வந்தோம். காடுகளுக்குள்ளே நடக்க வேண்டும் என்றால், அதற்கென கானக அதிகாரி/ ஊழியர் ஒருவர் கூடவே வருவார். அதற் கான அனுமதியை ஒருநாள் முன்கூட்டியே வாங்க வேண்டும். எப்படி முயற்சிசெய்தும் நடக்கவேயில்லை.

அதேபோல், சில நாட்களுக்கு முன்பு சித்ரதுர்கா கோட்டைக்குச் சென்றிருந்தோம். கோட்டையைச் சுற்றிப்பார்த்துவிட்டு அருகே உள்ள ஒரு மலை வாசஸ் தலத்துக்குச் செல்ல முயன்றோம். எங்களுடன் வந்த வழிகாட்டி திப்பேசாமி, “தம்பிகளே, அங்க காட்டுக்குள்ள போறதுன்னா முன்அனுமதி வாங்கணும்” என்றார். “கொஞ்சம் முயற்சிசெய்யுங்க” என்று நாங்கள் கேட்டுக்கொள்ள, சரி என்று எங்களுடனேயே பயணித்தார்.

கானக நுழைவு வாயிலில் சொல்லிவைத்தாற்போல கானக அதிகாரி காரைத் தடுத்து நிறுத்தினார். விசாரித்தால், “சுள்ளிகளைத் தீ வைத்துக் கொளுத்திக்கொண்டிருக்கின்றனர். எனவே, அனுமதி இல்லை” என்று சொன்னார். “தம்பிகளா, நான் முன்பே சொன்னேனில்லயா” என்றார் வழிகாட்டி திப்பேசாமி. எனினும், அலுவலகத்துக்குச் சென்று தன்னிடம் இருக்கும் அத்தனை அடையாள அட்டைகளையும் காண்பித்து அனுமதி வாங்கிவந்தார். அவருக்குத் தொல்பொருள் ஆய்வு, அவற்றை உள்ளடக்கிய கானகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுள் ஆட்களை அழைத்துச் செல்ல சிறப்பு அனுமதி உண்டு.

பின்னரும் அதே மாதிரியான சிறப்புக் கட்டுப்பாடுகள். 30 கிலோ மீட்டர் வேகம்; ஹாரன் ஒலித்தலாகாது; வண்டியை விட்டு ஒருபோதும் கீழிறங்கக் கூடாது; திடீரென வழியில் வந்துவிடும் விலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது என கடுமை யாக எச்சரித்த பின்னரே எங்கள் வண்டிக்கு அனுமதி கிடைத்தது. அதுவும் “எல்லா நானு மேனேஜ் மாடித்தினி” என்று வனத் துறை அதிகாரிகளை திப்பேசாமி சமா தானப்படுத்திய பிறகே எங்களுக்கு அனுமதி கிடைத்தது.

மேலே சென்று அனைத்தையும் பார்த்துவிட்டுப் பத்திரமாகக் கீழிறங்கினோம். மலையில் ஆங்காங்கே தீ எரிந்து கொண்டுதானிருந்தது. மேலே வன அதிகாரிகள் அமர்ந்திருந்தனர், கண்காணித்தபடி!

- ராம் சின்னப்பயல், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x