Last Updated : 27 Feb, 2018 07:50 AM

 

Published : 27 Feb 2018 07:50 AM
Last Updated : 27 Feb 2018 07:50 AM

காற்றில் கரையாத நினைவுகள்: பண்பாட்டின் கடைசிக் காட்சிகள்!

நா

ம் வசிக்கும் உலகம் விடிந்துவிட்டதை என் அறையின் சாளரம் வழியே விரல்களை நீட்டிக்கொண்டு வந்த வெளிச்சக் கதிர்கள் உணர்த்தின. வெளியே எட்டிப் பார்த்தபோது எப்போதும் கேட் கும் பறவைகளின் இசை காணாமல் போயிருந்தது. அவற்றைத் தாங்கி நிற்கும் மழைமரம் வீழ்த்தப்பட்டிருந்தது. வாழ்விடம் பறிக்கப்பட்டதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவை காலி செய்திருந்தன.

வெற்றிடங்கள் எல்லாம் கட்டிடங்களாக உருவாகிக் கொண்டிருக்கும் மூச்சுத் திணறும் சூழலில், எனக்குள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வெறுமை உறுத்திக் கொண்டே இருக்கிறது.

நினைவு தெரிந்த நாளில் இருந்து அரை நூற்றாண்டு கால இடைவெளி யில் பார்க்கும் திசையெங்கும் நிகழ்ந்து இருக்கும் மாற்றங்கள் இந்த பூமியை அந்நியக் கிரகமாக ஆக்கியிருக்கின்றன.

மாணவர்கள் புன்னகையுடன் புத்தக மூட்டையைத் தூக்கிக்கொண்டு நாம் சென்ற புகழ்பெற்ற பள்ளிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, சீண்டுவார் இல்லாமல் நோஞ்சானாக மாற, புஷ்டியு டன் புதிய பள்ளிகள் ஊரெங்கும். விளையாடுவதும், படிப்பதும் செயல்பாடாக ஆகிவிட்ட செயற்கைச் சூழ லில் கல்வி. பாரம்பரியப் பள்ளிகள் களையிழந்து எந்த நொடியிலும் அணைந்துவிடும் விளக்காக நீடிக்கும் நிலை.

ஒரு மணி நேரம் முன்பே சென்று ‘நல்வரவு’ என்று போடுவதில் தொடங்கி ‘வணக்கம்’ போடும் வரை ஆர்வத் தோடு தவமிருந்த திரையரங்குகள் பல்லடுக்கு அங்காடிகளாக மாறிப்போய்விட்டன.

அந்தத் திரைகளில் தெரிந்த அவதா ரப் புருஷர்களும், சரித்திர நாயகர் களும், அங்கே காற்று மண்டலத்தை இனிய இசையால் நிரப்பிய பாடல்களும் நமக்கு மட்டுமே தெரியும் மாயச்சூழல். அவற்றின் மறைவோடு நமக்குள்ளும் ஒரு பகுதி மரித்துப்போன வருத்தம்.

கரைந்துபோகும் சாம்பிராணிப் புகை

சின்ன வயதில் நீள, அகலங்களை அளந்து பருவத்துக்கு ஏற்ற விளையாட்டை விளையாடிய மைதானங்கள் வீடுகளாக எழும்பிவிட்டன. அங்கே பந்தோடும், பம்பரத்தோடும், கில்லி தாண்டலோடும், நுங்கு வண்டியோடும், எதுவும் இல்லாதபோது ஓடிப் பிடித்தும் விளையாடி மகிழ்ந்த நினைவுகள் சாம்பிராணிப் புகையாகக் கரைந்து போகின்றன. கைகளைக் கொண்டு வாசனையைப் பிடிக்க முயல்வதைப் போல வீண் பிரயத்தனங்களுடன் பழமையில் நீந்த நினைக்கும் முயற்சிகள்.

மழை என்றால் நனைவதில் மகிழ்ந்து, உடையை ஈரமாக்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி யும் எந்த நோயும் அப்போது தாக்கவில்லை. தேங்கிய தண்ணீரிலெல்லாம் காகித ஓடங்கள் விட்டு மழையை வரவேற்ற அந்த நாளையும், மழை அறிவிப்பு வந்தால் இலவச இணைப்பாக வரும் விடுமுறை அறிவிப் பையும் எதிர்பார்த்து பிள்ளைகள் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் இந்த நாளையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. அன்று சன்ன மழைக்கே கிணற்றில் நீர் சல சலக்க ஆரம்பித்துவிடும். சின்ன மழை பெய் தால் நிரம்பிவிடும் ஏரிகள் இப்போது ஆக்கிரமிப்புகளால் எந்த மழைக்கும் நிரம்பாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எந்த நீச்சல்குளத்துக்கும் சென்று நீந்தப் பழகவில்லை. நீந்தக் கற்றுக்கொடுக்கும் ஆசானாக சுரைக் குடுக்கை முதுகில் ஏறியது. அதற்காகவே தோண்டப்பட்டதுபோல் அகல மாக வாய் விரித்து குளமாகக் காட்சியளிக்கும் வேளாண் கிணறுகள். யார் அதிக உயரத்தில் இருந்து குதிப் பது என்று போட்டிகள். மிதிவண்டிப் பழக்கமும் அவ்வாறே நண்பர்கள் விரல்பிடித்து கற்றுத் தர பாடமானது. பள்ளிப் பருவத்தில் நீச்சல் பழகிய பெரிய கிணறுகள் தூர்ந்து போய் கட்டிடங்களாகிவிட்டன. அங்கே நீர்ப் பாய்ச்ச நிலமும் இல்லை, ஏர் உழுவதற்கு ஆளும் இல்லை. நகரத்தின் பேராசைக் கரங்கள் அருகில் இருக்கும் கிராமங்களின் குரல்வளையையும் நெரிக்கத் தவறவில்லை.

கதவு தட்டாமல் வரலாம்

தூரத்துச் சொந்தமோ, சொந்தத்தின் சொந்தமோ, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பின்றி வீட்டுக்கு வரலாம். இருப்பதை அவர்களுக்குப் பரிமாற, குறை சொல்லாமல் சாப்பிடும் பண்பு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் வருகிற உறவினர் இரவில் படுப்பதற்காக ஒதுக் கிய கயிற்றுக் கட்டில் இப்போது தொய்ந்துபோய் தொல்பொருளாய் இருக்கிறது.

எப்படியெல்லாம் நம் உலகம் மாறிப்போய்விட்டது!

கற்பனைக்கும் எட்டாத இம்மாற்றங்களில் கரைசேர முடியாமல் தரைதட்டி நிற்கும் நினைவுகள் மனமெங்கும்.

நாகரிக வளர்ச்சியின் இடுக்குகள் வழியாக நழுவும் பண்பாட்டின் கடை சிக் காட்சிகள் புகையும் ஊதுவத்தியின் இறுதித் துண்டாய் ஞாபகங்களைக் கிளறிவிடுகின்றன. கனவாக இருந்த அனைத்தும் இன்று ஏன் நிறைவேறின என்கிற சலிப்புடன் வாழ்க்கையைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு இருக்கி றோம்.

வாடகை வீட்டில் குடியிருந்தவர்களுடைய ஒரே கனவாக இருந்து, உண்பதிலும் உடுப்பதிலும் மிச்சம் பிடித்துக் கட்டிய பெரிய வீடு, வெளிநாட்டில் பிள்ளைகள் வாழ முதியோர் இல்லமாய் பயமுறுத்துகிறது.

இரவு நேரங்களில் ஒரே பேச்சுத் துணையாய் சத்தமாக ஒலிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள். நெருக் கிப் படுத்துக்கொண்டபோது வந்த ஆழ்ந்த தூக்கம் புரள வசதி வந்த பிறகு வாய்க்காமல் போனது. ஒரே ஒரு கடிகாரம் இருந்தபோது எல்லாம் குறித்த நேரத்தில் நடந்தன. அறைக்கொரு கடிகாரமும், ஆளுக்கொரு அலாரமும் இருக்கும்போதுதான் எல்லாம் தாமதமாகிறது.

பழமையை நோக்கிய பயணம்

வீட்டில் சாப்பிடும்போது அம்மாவிடம் அதிக எண்ணெய் ஊற்றி ஓட்டல் தோசைபோல வேண்டும் என்று அடம்பிடித்த நாம், இன்று உணவகங்களில் வீட்டுத் தோசையைப் போல வேண்டுமெனச் சொல்லி காத்திருக்கிறோம். கருப்பட்டிக் காப்பியை சல்லிசாக நினைத்த நாம், இப்போது அதிக விலை கொடுத்து கலப்படக் கருப்பட்டி யை வாங்கி வருகிறோம்.

சன்ன அரிசிக்காக நெல்லை மெருகேற்றியவர்கள் இன்று கொட்டை அரிசியே உடலுக்கு நல்லது என்று அதைத் தேடி அலைகிறோம். போந்தாக் கோழி முட்டை சுவையாக இருக்கும் என்று சொன்னவர்கள் நாட்டுக் கோழி முட்டைக்காக இரண்டு மடங்கு விலை கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். வெகுதூரம் வந்துவிட்ட பிறகு, மீண் டும் கரிம விவசாயம், இயற்கை எரு, நாட்டுப் பசு, செக்கில் ஆட்டிய எண்ணெய், பாரம்பரிய உணவு வகைகள், மண்பாண்ட சமையல், வெல்லப் பலகாரம், சிறுதானியம், பருத்தி உடை என்று பழமையை நோக்கி நொண்டியடிக்கும் முயற்சிகளால் நம்பிக்கைத் துளிர்கள்.

ஒரு காலத்தில் மார்கழி மாதக் கோலங்களால் நிறைந்திருந்த தெருக் கள் வீடுகளின் பெருக்கத்தால் மூச்சுத் திணறி வாகனங்களை வழியெங்கும் பிதுக்கிக்கொண்டு நிற்கின்றன. நேரத் தைத் துரத்தும் நெருக்கடியில் மாதங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமே அறிவிக்கின்றன. மாலைவேளைகளில் வீட்டுக்கு வெளியே நின்று அனைத்தையும் அலசும் பெண்களின் கூட்டம் முகநூலிலும், அலைபேசி குறுஞ் செய்திகளிலும் காணா மல் போய்விட்டது.

தீவுகளான மனிதர்கள்

அன்று அடுத்த வீடு காலி யாக இருந்தால் யார் புதிதாகக் குடிவரப் போகிறார்கள் என்று காட்டிய அக்கறை இன்று அறவே இல்லை. யார் வந்தாலும் அவர்களோடு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்பதால் அண்டை வீடு அந்நியமானது.

உலகம் மட்டுமா மாறிப் போயிருக்கிறது? நாம் ஒவ்வொருவருமே மாறிப்போய்விட்டோம். நம் புன்னகையில் சிநேகம் இருப்பதைவிட பதற்றம் அதி கம் இருக்கிறது. வசதிகளின் நடுவே மகிழ்ச்சியைத் தொலைத்த வருத்தம்... 50 ஆண்டுகளாக நம்மைச் சுற்றி நிக ழும் மாற்றங்களைக் கவனித்த தலைமுறைக்கு அவசியம் இருக்கும். பெற்றவற்றைவிட இழந்தவை அதிகம் என்றும், முளைத்தவற்றைவிட தொலைத்தவை நிறைய என்றும் எண்ணும் இடைப்பட்ட தலைமுறை இது. திரும்பிப்போக முடியாத பாதிக் கிணற்றுப் பயணம்.

சொந்த ஊரில் அந்நியராக, பிழைக் கும் ஊரில் அகதியாகத் தொடரும் வாழ்வில் பழைய மகரந்த நொடிகளில் சற்று மனம் லயிப்பதற்கே இந்த ’காற்றில் கரையாத நினைவுகள்’.

- நினைவுகள் பரவும்...

iraiyanbu 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x