Published : 16 Feb 2018 01:06 PM
Last Updated : 16 Feb 2018 01:06 PM

ரஜினி அரசியல்: 27-தேவை பல ஜிகினா வேலைகள்

இப்போது மதுக்கடைகளில் நல்ல லாபம். அந்த விற்பனையில் நேரடியாக இறங்கியுள்ளது. அதிலும் ஊழல், ஊழல். மக்களை மேலும் மேலும் குடிக்கவைத்து குடிகாரர்களாக்கி கொண்டிருக்கிறது. சிகரெட்டும், பீடியும் விற்றுவிட்டு புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்று விளம்பரம் செய்கிறார்கள். அழுகிப்போன நுழையீரல், கல்லீரலை டிவியில் காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் மக்கள் சேனலை மாற்றிவிட்டு மறுபடிதானே அந்த சேனலுக்குள் வருகிறார்கள்?

அரசாங்கமே மது விற்பனை வருவாயையும், சிகரெட், பீடி வரியையும் இழக்க விரும்பாத போது, திரைப்படத்தை தொழிலாக செய்பவர்கள் மீது மட்டும் இப்படி பாய்வது சரிதானா? அப்படியே அவர்கள் விழிப்புணர்வு படங்களாக எடுத்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒற்றைக் கதாநாயகன் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்றால் அந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டிய இடத்தில் யார் இருக்கிறார்கள். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியதுதானே? அவர்களை செய்யச் சொல்லி எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டியதுதானே?

ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் வரிப் பணத்தில் சம்பளம் வாங்குவதும் அதற்காகத்தானே? இன்றைக்கு அரசியலை மக்களுக்கானது, தியாகத்தன்மையிலானது என்று எத்தனை பேர் பார்க்கிறார்கள்.

ஆக, இந்த மக்களிடையே யாரும் எதையும் திணிக்க முடியாது. 'எனக்கு உன் ஸ்டைலுதான் வேணும். எனக்கு உன்கிட்ட ஸ்டண்ட்டுதான் வேணும். ஆக்ஷன் ஹீரோவாத்தான் நடிக்கணும்!' என்பது சினிமா ரசிகர்களின் நிலை. ரஜினியே ஆனாலும், எம்ஜிஆரே ஆனாலும் இதுதான் நிலை.

'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'தான் எம்ஜிஆரின் கடைசிப்படம். அது எந்த அளவு வர்த்தக ரீதியாக சாதித்தது என்று அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். முந்தையவற்றை ஒப்பிட்டால் எம்ஜிஆரின் அந்தப் படம் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். அந்த அளவுக்கு அப்படத்தில் கதையைத் தாண்டி பிரச்சாரமே சுடர்விட்டது. அதனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றியைத் தரவில்லை.

எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் 'அண்ணா நீ என் தெய்வம்' உள்ளிட்ட சில படங்கள் பாதியிலேயே நின்றன. அது மட்டுமல்ல எம்ஜிஆர் சினிமா வானில் மின்னிக்கொண்டிருந்த நேரத்திலேயே அவர் நடித்த பல படங்களுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து செட் போட்டு காத்திருப்பார்கள். ஏதாவது அரசியல் வேலைகள், மீட்டிங், வேறு வேலைகள் என சென்று விடுவார். வர மாட்டார். அதனால் அந்த செலவு வீணாகும். திரும்ப செலவு செய்ய வேண்டி வரும்.

அப்படி சொந்தப் படம் எடுத்து மாட்டிக் கொண்டவர்கள் பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதையும் அந்தக் காலத்தில் கதை, கதையாய் சொல்வார்கள். இதற்கெல்லாம் மாற்றாக எம்ஜிஆர் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகவோ, மாற்று ஏற்பாடு செய்து கொடுத்ததாகவோ தகவல்கள் இல்லை.

ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் பட விநியோகஸ்தர்களுக்கு பணத்தை திருப்பித் தந்து அந்த நிலையை 'பாபா' படத்தில் மாற்றினார் ரஜினி. எம்ஜிஆர் -சிவாஜி காலத்தில் சினிமா கதாநாயகனை, அதிலும் லட்சிய கருத்துகளைச் சொல்லும் கதாநாயகனை ஆதர்ஸ தலைவராகவே கொண்டவர்கள் இருந்தனர். அதிலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கருத்தில் கொண்டே அவர் மீது காதல் கொண்டனர்.

எம்ஜிஆருக்கு பிறகான தமிழ்சினிமா என்பது கதாநாயகர்களிடம் எது பிடித்திருக்கிறதோ அதை ரசிக்கிறார்கள். வில்லனிடம் கூட வில்லத்தனத்தை ரசிக்கிறார்கள். நிறைய படங்கள் வில்லத்தனமான கதாநாயகர்களாலேயே வெற்றி பெறுகிறது. வில்லனாக நடித்து சூப்பர் ஸ்டாராக வளர்ந்த கதாநாயகன் ரஜினி என்பதையும் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழக அரசியல் வாழ்விலும் சிறகடிக்கிறது.

பெரியாரைப் பிரிந்து வந்த அண்ணா திமுகவைத் தொடங்கினார். 'ரூபாய்க்கு மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்!' என்ற பஞ்ச் வசனம் (அடுக்குமொழி) வசனம் பேசியே வென்றார். அதற்கு துணை நின்றது அவரைப் போன்ற திராவிட இயக்கத்தவர்களின் அடுக்குமொழிப் பேச்சு. அதில் எம்ஜிஆரின் சினிமா சக்தியும் துணை நின்றது. அண்ணா மறைந்தபிறகு அதே அடுக்கு மொழி பேசியே பலரையும் கவர்ந்த கருணாநிதி முதல்வர் ஆனார்.

அப்போது அவர் பதவிக்கு வர துணையாக நின்ற எம்.ஜி.ராமச்சந்திரன் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டபோது திமுகவினர் எம்ஜிஆர் மீது கூத்தாடி, மலையாளி என்றெல்லாம் புழுதி வாரித்துாற்றி பிரச்சாரம் செய்தனர். எம்ஜிஆருக்கு அடுக்கு மொழி வசனங்கள் வராது. முக வசீகரம்தான் அவருக்கு எடுபட்டது. அதன் முன் கருணாநிதியின் அடுக்கு மொழி வசனங்கள் பாடாய்பட்டது.

அவரின் வழித்தோன்றல் ஜெயலலிதா. அவருக்கும் அடுக்குமொழி வராது. சினிமாவைப் போல் எழுதிக் கொடுத்த வசனங்கள்தான். அலை, அலையாய் அவரைக் கூட்டத்தில் காண ஜனங்கள். கட்சித் தொண்டர்கள். எம்ஜிஆரே அசந்தார். அவரைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக, ராஜ்யசபா எம்.பி.யாக எம்ஜிஆர் பிரமாதப்படுத்தியபோது கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தனிப்பட்ட வாழ்க்கையையும் பகிரங்கப்படுத்தி கண்டனம் தெரிவித்தார்கள்.

எம்ஜிஆர் இறந்தபோது அவரது சவ ஊர்வல வாகனத்தை விட்டே ஜெயலலிதாவை கீழிறக்கினார்கள். அவரே கட்சியாகி, ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு அவருடன் இருந்த சசிகலாவை விமர்சித்தார்கள். மன்னார்குடி குடும்பம் என்று பல விஷயங்களை சொல்லி களங்கம் கற்பித்தார்கள். அப்படிப்பட்ட சசிகலா ஜெயலுக்குப் போக அவரின் ஆசீர்வாதம் பெற்ற தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று ஆளுங்கட்சியான இரட்டை இலையையும், பலமான எதிர்க்கட்சியான உதயசூரியனையும் இரண்டாம், மூன்றாம் இடத்தில் தள்ளிவிட்டு வெற்றி கொள்கிறார். அதுவும் சாதாரண வெற்றியல்ல.

மலைக்கும் மடுவுக்குமான வெற்றி. அந்தத் தேர்தலில் பணம் மட்டுமே பேசியதா? என்றால் அதுதான் இல்லை. அதையும் தாண்டி மக்களிடம் வேறு ஏதோ வேலை செய்திருக்கிறது. அதை உடைத்து உடைத்துப் பார்க்கும்போது ஒன்று புலனாகிறது. ஒரு மனிதன் இங்கே பெரிய அளவு பேசுபொருளானால் முக்கிய இடத்திற்கு போக வாய்ப்புண்டு போலும். ஆர்.கே.நகர் முழுக்க ஓர் ஆண்டு காலம் பேசப்பட்ட மனிதர் தினகரன். இப்போது அசகாயசூர வெற்றி பெற்றுவிட்டார்.

ஆனால் இங்கே ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்றால் குதிக்கிறார்கள். அவர் பஞ்ச் வசனத்தை சுட்டி கிண்டல் செய்கிறார்கள். அவர் எது பேசினாலும் செய்தியாகிறது மட்டுமல்ல. அவரைப் பற்றிய நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் கூட பேசுகிறார்கள். அதுவும் செய்தியாகிறது. மீடியாக்களில் அலை பாய்கிறது. பொதுவாக அரசியல்வாதிகள் எப்படி உருவாகிறார்கள். அரசியல் தலைவர்கள் அங்கீகரித்தால் உருவாகிறார்கள் என்று சொல்லலாம். அந்த அரசியல் தலைவர்கள் எப்படி அந்தப் பொறுப்புக்கு வருகிறார்கள். அரசியலில் பிரபலப்பட்டால் பொறுப்புக்கு வருகிறார்களா? போராட்டங்கள் மூலம் பொறுப்புக்கு வருகிறார்களா? அதிகமான மேடைப்பேச்சின் மூலம் பொறுப்புக்கு வருகிறார்களா? பெரும் புரட்சிகள் நடத்தி தலைவர்கள் ஆகிறார்களா?

சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவை எல்லாம் வெள்ளையர் ஆட்சியின் எதிர்த் தேவைகளாக இருந்ததால் அன்றைக்கு அதன் மூலம் தலைவர்கள் உருவானார்கள்.

சுதந்திர இந்தியாவில் வறுமை, கொடுமை, வறட்சி, பஞ்சம் நிலவியதால் அதை அகற்ற போர்க்கால நடவடிக்கைகள் தேவைப்பட்டன. அதை அடியொற்றி தலைவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு கொள்ளையடிக்கவும், தங்களை பிரபல்யப்படுத்திக் கொள்ளவும் நேரம் இல்லை. தவிர அவர்கள் எல்லாம் சுதந்திர வேட்கை காலத்தில் சிறைக்கொடுமைகளையும், அடிமைத்தள வேதனைகளையும் அனுபவித்து அரசியல் நிலை அடைந்தவர்கள் என்பதால் அதிலிருந்தே மக்களைப் பற்றி அக்கறையுடன் சிந்தித்தார்கள். அந்த தலைமுறையின் நீட்சி சுத்தமாக தேய்ந்துவிட்டது.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x