Published : 14 Feb 2018 07:05 PM
Last Updated : 14 Feb 2018 07:05 PM

ரஜினி அரசியல்: 26 - தியாக உலகு; வர்த்தக உலகு

பொருளாதாரம், பதவி, பகட்டு, கடவுளின் அவதாரம் என்று எல்லா நிலைகளிலும் மனிதனின் நிலை இதுதான். எந்த உயரத்திற்கு வாழ்க்கையில் சென்றாலும், சாமானிய நிலையை அறிந்து கொள்பவன், புரிந்து கொள்பவன், தனக்குள்ளேயே உணர்ந்து கொள்பவன்தான் சராசரி நிலையில் தரையிலேயே நிற்கிறான். அவன் விழும்போது பெரியதாக காயப்படுவதில்லை. தன்னை வாஞ்சையுடன் தடவி 'எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட ஜாக்கிரதையா இரு!' என சொன்ன மூதாட்டிக்கு வேண்டுமானால் நம்பியார் நல்லவர் என்று தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் எம்ஜிஆருக்கு தெரியும். அதுபோலத்தான் 'நான் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்' என்பவரின் நிலையும். இந்த இடத்தில் ரஜினியும் ரஜினியாகவே இருக்கிறார் என்பதுதான் உண்மை. ரஜினியை திரைப்படக் கல்லூரியில் பார்க்கும் பாலசந்தர் அவரின் நடை, உடை, பாவனை, செயலில் வித்தியாசத்தை உணர்ந்து கொள்கிறார்.

அதற்கேற்ப அவரை மனதில் வைத்து தன் படத்தில் பதிவு செய்கிறார். சும்மா நடந்தாலே, எதையாவது தூக்கிப்போட்டு பிடித்தாலே, அவர் இயல்பாக சிகரெட் பிடித்தாலே அது வித்தியாசமாக இருக்கிறது. இந்த வித்தியாச சூழலும், வேகமும் தமிழ்த் திரையுலகம் இதுவரை கண்டிராதது. அதை இயல்பாகப் பயன்படுத்துகிறார். படம் சக்சஸ் ஆகிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவரின் அந்த ஸ்டைலை ஒட்டியே ரஜினிக்கு குவிகிறது.

ஆனால் ரஜினிக்கோ அதீத நடிப்பில் ஆசை. அதிலும் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் போல் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறார். அவையெல்லாம் சாதாரண வெற்றிப் படங்களாக அல்லது தோல்விப்படங்களாகவே அமைகிறது. அது கொடுக்கும் பாடம் படத் தயாரிப்பாளர்கள் ஆக்ஷன் ஹீரோவாகவே அவரை விரும்பினார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்கு வந்த செல்வாக்கு, பிரபல்யம், தன்னை நாடிவரும் அரசியல் தலைவர்கள் எல்லாம் அவருக்குள்ளேயே பிரமிப்பை ஊட்டுகிறது.

அத்துடன் தனக்கான அந்தரங்கம் பறிபோகிறது. கண்டக்டராக இருந்ததுபோல் சுதந்திரக் காற்றை தரிசிக்க முடியவில்லை. தன்னந்தனியாக காட்டில் மேட்டில் சுற்ற முடியவில்லை. நண்பர்களுடன் பொழுதுபோக்க சுதந்திரமில்லை. எங்கும், எதிலும் சூப்பர் ஸ்டார் என மொய்க்கும் மக்கள் கூட்டம், ரசிகர் கூட்டம். பல்வேறுபட்ட புகை, மது என்று சிற்றின்ப வேட்கையில் உழன்றவர் ஒரு கட்டத்தில் வரலாறு, ஆன்மிகப் புத்தகங்கள் என புகுகிறார். எத்தனை நாளைக்கு அதிலேயே இருக்க முடியும். அரசியல் நம்மை அழைக்கிறதே.

அதற்கு தகுதியானவன்தானா நான்? அதை வைத்து யாரை ஏமாற்றுவது? நாம் ஏமாற்ற அவசியமில்லை என்றாலும் மற்றவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? சினிமா பிரபல்யத்திற்கே இந்த திணறல் என்றால் அரசியலில் எத்தனை தூரம் திணற வேண்டும். அதிலும் அதில் எந்த அளவு சுதந்திரம் பறிபோகும். ஒரு நிமிடம் கூட நம்முடையதில்லை என்றாகி விடுமே என அச்சம். எதை வேண்டுமானாலும் விடலாம். என் தனிப்பட்ட சுதந்திரத்தை எப்படி மற்றவர்க்கு/மற்றதற்கு தரமுடியும். வாய்ப்புகள் இருக்கிறதுதான். இதுவரை வந்த வாய்ப்பே தெய்வீகமானது. உன்னதமானது. வாழ்வாங்கு வாழ வைத்திருக்கிறது.

சினிமாவைப் பொருத்தவரை வெற்றி, தோல்வி எல்லாமே தன்னுடையது, தன் குழுவினுடையது என ஏற்றுக் கொள்ளலாம். அது ஒரு வர்த்தகம். அரசியல் என்று வந்துவிட்டால் எத்தனை அனர்த்தங்களை சந்திக்க நேரிடும். சிவன் சொத்து குல நாசம். முடிவுகளுக்காக முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போதெல்லாம் புது முடிச்சுகள் விழுகின்றன. அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் வித்தை ஆன்மிகம், யோகா, தியானத்தில் கிடைக்கிறது. அங்கே கிடைக்கிற விஷயம் ஒன்றே ஒன்று மன அமைதி. அதையும் தாண்டிய அமைதி ஆளரவமற்ற இடத்தில் சஞ்சாரம்.

ஒவ்வொரு படம் முடிந்தால் இமயமலை பயணமாகிறார். ரிஷிகளை காண்கிறார். அதற்குள்ளேயே கரைகிறார். ராகவேந்திரர் என்றால் அவருக்குள்ளேயே பயணமாகிறார். ரமணர் என்றால் அவருக்குள்ளும் பயணப்படுகிறார். பாபா என்றால் அந்த அச்சரத்திற்குள்ளும் மூழ்கிப் போகிறார். நான் கண்ட இன்பம் என் ரசிகர்கள் பெற வேண்டும் என துடிக்கிறார்.

'எத்தனையோ படங்கள் உங்களுக்காக கொடுத்துவிட்டேன். எனக்காக ஒரு படம் எடுங்கள். அது என் ரசிகர்களுக்காக இருக்கட்டும். என் ரசிகர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். அதை வரவேற்பார்கள்!' என துடிக்கிறார். ரஜினியே சொல்கிறார். எடுக்க வேண்டியதுதானே? படத் தயாரிப்பாளர்கள் எடுக்கிறார்கள். யோசித்து யோசித்து எடுக்கிறார்கள்.

ரஜினி சமாதானப்படுத்தியதால் விநியோகஸ்தர்களும் படத்தை பூஜையின் போதே விலை பேசி வாங்கி விடுகிறார்கள். இருந்தாலும் படம் வர்த்தக ரீதியாக பெரும் தோல்வி. அப்படியான பயனைத்தான் ரஜினியின் நூறவாது படமான 'ராகவேந்திரா' அனுபவித்தது. 'பாபா' படமும் அதிலேயே மூழ்கிக் கரைந்தது.

இங்கே பலரும் என்ன நினைக்கிறார்கள். சினிமா கதாநாயகன் சொன்னால் மக்கள் கேட்பார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள் அதையே தரவேண்டும் என்று. ஆனால் அது சாத்தியமா? தியாக உலகில் சாத்தியம். வர்த்தக உலகில் சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அது என்ன தியாக உலகு? வர்த்தக உலகு

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக் கொட்டடியில் வாழ்ந்த பெருமக்கள் தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இந்த நாட்டுக்கே அர்ப்பணிக்கும் தன்மையோடு வாழ்ந்தார்கள். அது தியாக உலகு. சுதந்திரத்திற்கு பிறகு தங்களது சொத்தான ஆனந்த பவனத்தை அரசுக்கு கொடுத்ததே நேருவின் குடும்பம். பல்வேறு கம்யூனிஸ்ட் தலைவர்கள் காலங்காலமாக இருந்த தனது மூதாதைகளின் சொத்துகளை எல்லாம் கட்சிக்கு எழுதித் தந்தார்களே. அது தியாக உலகு.

அதுபோல சினிமா படம் எடுக்க வருபவர்கள் எல்லாம் தான் சேர்த்த சொத்துகளை, தன் மூதாதைகள் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் சமூக கண்ணோட்டத்தோடு கூடிய திரைப்படங்களை எடுக்கும் பணிக்காக செலவிட வேண்டும். காந்தியின் குரங்கு பொம்மைகளை வைத்து கெட்டதைக் கேட்காதே, கெட்டதைப் பேசாதே, கெட்டதைப் பார்க்காதே என்பது போல நிறைய போதிக்க வேண்டும்.

'புலால் உண்ணக்கூடாது. மது அருந்தக்கூடாது. தீய செயல்களில் ஈடுபடக்கூடாது!' போன்ற புத்திலிபாய் வரங்களை பேச வேண்டும். இந்த திரைப்பட தியாக உலகத்திற்குள் வர்த்தக உலகம் தப்பித்தவறி நுழைந்து விடவே கூடாது. திரை வர்த்தக சவாரியில் பெரும் சக்தியான ரஜினி 'புகை பிடிக்கக்கூடாது. மது அருந்தக்கூடாது, தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. இப்படித்தான் ரமண மகரிஷி..!' என்று ஆரம்பித்தால் அந்த படம் ஓடுமா?

ரஜினி எதைச் சொன்னாலும் அவர் ரசிகர்கள் கேட்பார்களா? அவர்களுக்கு ரஜினி தண்ணி அடிக்கும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. ரஜினி சிகரெட் பிடிக்கும் ஸ்டைல் பிடித்திருக்கிறது. அவர் நடக்கும் நடை, பேசும் பேச்சு, கோபக்கனல் கக்கும் பார்வை, காதல் வயப்படும் கண்கள், ரசிக்க வைக்கும் லகலக வசனம் பிடித்திருக்கிறது. அதையே தங்கள் வர்த்தக ஆயுதம் ஆக்கி ஒப்பந்தம் போடுகிறார்கள் பட முதலாளிகள். பிறகெப்படி அவர் இந்த சமூகத்திற்கு சினிமாவின் மூலம் ஆலோசனைகள் சொல்ல முடியும். இவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து கொண்டே போகிற போக்கில்தான் சமூக நோக்கிலான கருத்துக்களை வீசிக் கொண்டு போக முடியுமே ஒழிய இந்த மக்களிடம் எதையும் திணிக்க முடியாது. ஆன்மிகமும் அப்படித்தான். ஆன்மிக அரசியலும் கூட அப்படித்தான்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x