Published : 14 Feb 2018 05:18 PM
Last Updated : 14 Feb 2018 05:18 PM

விராட் கோலி ‘சின்ட்ரோம்’

Criticism is as inevitable as breathing - T.S.Eliot

எதெற்கெடுத்தாலும் விராட் கோலியை திரையில் காண்பிப்பது என்பது இந்திய போட்டிகளை நேரலை ஒளிபரப்பு செய்யும் சேனல்களின் சமீபத்திய வழக்கமாகி வருகிறது.

இதற்கு முன்பாக தோனியை இப்படித்தான் கட்டமைத்தார்கள், இன்னமும் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார்கள், சச்சினை இப்படித்தான் கட்டமைத்தார்கள், இவையெல்லாம் தொழில்நுட்ப ரீதியாக தயாரிக்கப்படும் நாயக வழிபாட்டு பிம்பங்கள், இது ஒருவிதத்தில் நேர்மையான ரசனையையும், கேள்வியையும், விமர்சனங்களையும் மழுங்கடிக்கும் செயல்கள். இந்தப் பிம்பக் கட்டுமான நெரிசலில் கிரிக்கெட் ஆட்டத்தின் நுட்பங்களுடன் நாம் ஒருபோதும் சச்சினையோ, கோலியையோ, தோனியையோ, எந்த ஒரு வீரரையுமோ நாம் அணுக முடியாது, ரசிக்க முடியாது, அவர்களின் அரிய திறமைகளை அறுதியிட முடியாது, விமர்சிக்க முடியாது செய்து விடுகிறது.

எனவே ஒரு சின்ட்ரோம் என்பது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலின், நிலைமையின் வகைமாதிரி, நோய்க்கூறுத்தாக்கம், எனவே கோலி சின்ட்ரோம், தோனி சின்ட்ரோம் அல்லது மோடி சின்ட்ரோம் என்று ஒரு சொற்றொடரை நாம் பயன்படுத்தும் போது அது அந்தத் தனிநபர்களின் பிரத்யேக குணாதிசியம் ஏற்படுத்தும் விளைவு அல்ல, ஒரு சமூகத்தின், பண்பாட்டின், அரசியலின் ஒட்டுமொத்த சூழலின் நிலைமையின் தாக்கம், அல்லது விளைவு என்ற அர்த்தத்தில் சின்ட்ரோம் ஆகும்.

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பொதுவாகவே ஊடகங்கள் நாயக பிம்பங்களை, பிரபலமானவர்களைப் பற்றிய செய்திகள், குறிப்புகள், சிறு விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என்று வெளியிட்டு கட்டமைத்து வருகின்றன, இதனால்தான் காட்சி மற்றும் பிற ஊடகங்களுக்கு ‘Spin masters' என்ற பெயர் உண்டு.

தொழில்நுட்பக் கோணங்களின் மூலம் நாயக வழிபாட்டுப் பிம்பங்களை கட்டமைத்து வருகிறது தொலைக்காட்சி நேரலைகள், இது ஆட்டத்தின் நுணுக்கங்கள், நுட்பங்களை கவனிக்க விடாமல் ரசிகர்களை ஒரு வித போதையில் வைத்திருக்கும் வேலையைச் செய்கிறது.

பார்வையாளர்களின் புலனனுபவங்களையே ஊடகங்கள் மறைமுகமாகத் தீர்மானிக்கின்றன, கட்டமைக்கின்றன, கட்டுப்படுத்துகின்றன. ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் எதிரணியின் சிறந்த பேட்ஸ்மென் ஒரு சிக்ஸ் அடித்தால், அல்லது பவுண்டரி அடித்தால் அந்த நேரத்தில் தேவையின்றி நமது நாட்டு வீரர் என்ற வகையில் கோலியின் எதிர்வினைகளை, உணர்வுகளை காண்பித்து அதன் மூலம் வாசக ரசனையை எதிர்வினையை, ரசிப்புத்தன்மையை மழுங்கடித்து விடுகிறது, பார்ப்பவர்கள் ‘ஆகா, கோலி தேசத்துக்காக எப்படி உணர்ச்சி வயப்படுகிறார்’ என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டுக்கு உண்டான நேர்மையான ரசிகத்தன்மைக்கு அப்பாற்பட்ட ஒரு போலி தேசப்பற்றை உண்டாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது.

எதிரணி வீரர் பவுண்டரி அடித்தால் கோலியை க்காட்டுகிறார்கள், எதிரணி வீரர் பவுண்டரி விட்டால் கோலியைக் காட்டுகிறார்கள், கேட்ச் பிடித்தால் கோலி, கேட்ச் விட்டால் கோலி, எதிரணியினர் சதம் அடித்தால் கோலி, கோலி சதமடித்தாலும் கோலி, ரோஹித் சர்மா சதமெடுத்தால் கோலி. நடுவர் அவுட் கொடுத்தால் கோலி, 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்து ரீப்ளே காட்டும் போது கோலி, சைக்கிள் அகர்பத்தித் திரையில் கோலி.

பக்கத்து கிரவுண்டில் ஏதாவது மேட்ச் நடந்தாலும் கோலியைக் காட்டுவார்கள் போலிருக்கிறது. நல்ல வேளை இங்கிலாந்து-நியூஸிலாந்து போட்டி நேற்று முன் கூட்டியே முடிந்து விட்டது, ஒருவேளை முடிந்திருக்காவிட்டால் அந்தப் போட்டியிலும் கோலியைக் காட்டியிருப்பார்களோ என்னவோ? கால்பந்து போட்டி லைவ் ரிலேயிலும் இனி கோலியின் முகத்தைக் காட்டினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏன் இந்த கோலி சிண்ட்ரோம்? ரோஹித் சர்மா நேற்று 96 ரன்களில் இருந்த போது ஒரு பந்தை தேர்ட்மேனில் தூக்குகிறார், ரவிசாஸ்திரி அது கேட்ச் ஆகிவிடும் என்று ஏமாற்றமடையும் உணர்வைக் காட்டுகின்றனர், கேட்ச் விடப்படுகிறது, உடனேயே கோலியின் குழந்தைத் தனமான மகிழ்ச்சியையும் காட்டுகிறது தொலைக்காட்சி நேரலை. அதாவது இங்கு ஒரு அணியின் கேப்டன் ஒர் சாதாரண பொதுப்புத்தி ரசிகனின் உணர்வுடன் இருக்கிறார், அதாவது ரோஹித் சர்மாவுக்கு தென் ஆப்பிரிக்காவின் ஷம்ஸீ கேட்ச் விட்டது எப்படி இங்குள்ள சிலபல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்ததோ அதே போன்ற மகிழ்ச்சிதான் கோலிக்கும் உள்ளது என்ற பார்வையை, உணர்வை ரசிகர்களிடத்தில் கட்டமைக்கிறது.

ஆகவே ஒரு விதத்தில் கோலி நம்மைப் போன்ற ஒரு பொதுப்புத்தி ரசிகரே இன்னொரு விதத்தில் அதையும் கடந்தவர் என்ற இரட்டைப் பிம்பக் கட்டமைப்பு செய்யப்படுகிறது. அதனால்தான் காட்சி ஊடகங்கள் என்ற சக்திவாய்ந்த ஒன்று கட்டமைக்கும் பிம்பங்கள் மீது இத்தனை வெறி, இத்தனை ஆக்ரோஷம்!

அதாவது ஒரு கிரிக்கெட் போட்டி என்பது அதன் வர்ணனைப் பிரதி, நேரலை ஒளிபரப்பின் கேமராக் கோணங்கள், திரும்பத் திரும்ப ஒன்றை காட்டிக் கொண்டிருப்பது, நாயக/வீரர்களின் உணர்ச்சிகள், பாவனைகள், பேச்சுக்கள், உற்சாகங்கள் என்பதைக் காட்டும் ஒரு அருமையான ஸ்கிரிப்ட் போன்றதே. இதில் பார்வையாளர்களின் அனுபவங்கள் என்பது அதன் ஒரு அங்கமாக, அதன் மாயவலையிலிருந்து உருவாகும், உருவாக்கப்படும் ஒன்றாகவே மாறிவிடுகிறது. மூலதனம் என்ற இயக்குநரின் அமானுஷ்ய வேலைப்பாடே ஒரு கிரிக்கெட் போட்டி என்பதாக ஒரு காட்சி ஊடக திரைப்பரப்பு நம் கண்முன்னே விரிகிறது. இதில் நம் சிந்தனை, அறிவு, அனுபவம் எப்படி மழுங்கடிக்கப்படுகிறது என்பதே நம் கவலை. உலகமே ஒரு நாடகமேடை நாமெல்லோரும் அதில் நடிகர்கள் என்று ஷேக்ஸ்பியர் கூறுவது போல் உலகமே ஒரு காட்சித் திரை நாமெல்லாம் அதில் வெறும் பார்வையாளர்கள் என்று இப்போது நாம் கூற வேண்டும். கிரிக்கெட் போட்டியும் இன்னொரு ரியாலிட்டி ஷோ என்ற ரீதியில்தான் இங்கு காட்சிப் படுத்தப்படுகிறது, இவற்றுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் பார்வையாளர் தன் சுயாதீனத்தை இழந்து மழுங்கடிக்கப்படுகிறார்.

இதற்கு ரசிகர்கள் இயற்கையாகவே பலியாவதோடு அல்லாமல் விமர்சன இடையீடுகளையும் எதிர்கொள்ள முடியாமல் விமர்சிப்பவர்களை ‘நீ இந்தியனா?’ என்ற ரீதியில் கட்டமைக்கப்பட்ட, உருவாக்கப்பட்ட, பிம்ப வலையத்திக்குள்ளிருந்து ஆத்திரத்தைக் கொப்பளிக்கிறார்கள். அவர்கள் சுயாதீனமாக ஒரு கருத்துக்கு எதிர்வினையாற்றுவதை விடுத்து பிம்ப வலைக்குள்ளிலிருந்து கும்பல் கலாச்சாரக் கூட்டத்தின் குரலை எதிரொலிப்பவர்களாக மாறுகிறார்கள். கும்பலின் குரலை, பிம்பத்தின் குரலை தன் சொந்தக் குரலாக நினைத்து மயங்குகிறார்கள்.

நாயகப் பிம்பக் கட்டுமான வலையிலிருந்து நாம் நம் அறிவு, சிந்தனை, அனுபவத்தை, புலன்களை மீட்டெடுக்க அதிலிருந்து அன்னியமாகி விமர்சனப் பார்வையை, அணுகுமுறையை வளர்த்தெடுக்க வேண்டும், அதற்குரிய வாசிப்பு இத்தகைய அணுகுமுறைக்கு அவசியம்.

Criticism is as inevitable as breathing, அதாவது விமர்சனம் என்பது மூச்சுக்காற்றைப் போல் அத்தியாவசியமானது என்று ஆங்கிலக் கவி டி.எஸ்.எலியட் கூறுவது இங்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல பொதுவாகவே நாயக வழிபாடு, பிம்பம் என்பதற்கு எதிரானதாகவும், ஒரு பண்பாடு இந்தக் கூளங்களை உருவாக்கி விற்று வருவதோடு இதையே உண்டு, செரித்து வாழவும் பணிக்கிறது என்பதை தன்னுணர்வுடன் எட்ட நின்று விமர்சிக்கவும் வலியுறுத்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x