Published : 12 Feb 2018 07:04 PM
Last Updated : 12 Feb 2018 07:04 PM

ரஜினி அரசியல்: 25- மக்கள் விரும்பினால்தான் நடக்கும்

ரஜினி படத்தில் தொடர்ந்து நடிப்பாரா?

இப்போதைக்கு எந்த படமும் செய்யப்போறதில்லைன்னுதான் திட்டவட்டமா சொல்லிட்டு இருந்தார். அதை நான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று தீர்மானமாக கூற வேண்டாம்னு சொல்லித்தான் 'பாபா' படத்தையே பண்ண வச்சேன். இந்தப் படம் எப்படிப் போகிறது என்பதை பொறுத்துப் பார்ப்போம். அப்புறம்தான் அடுத்த கட்டம்!

'பாபா' படம் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

'பாபா' படம் எடுக்க தொடங்கியதிலிருந்தே சினிமா வட்டாரத்திலும், பத்திரிகை வட்டாரத்திலும் இதுவரை இல்லாத பரபரப்புதான். இதன் விளைவு எப்படியிருக்குமோ? படத்திற்கு பெயர் சூட்டியதுமே வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விட்டது. 'பாபா' படத்தை வெளியிடும் உரிமையை எனது ஆசிரமத்திற்குத்தான் வழங்கியுள்ளார் ரஜினி. இந்தப் படம் ரஜினிக்கு மாறுபட்ட படமாக இருக்கும். நல்லதை நினைப்பவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா?

கொள்ளை அடிப்பவர்களுக்கும், அநியாயம் செய்பவர்களுக்கும் தற்போது அரசியல் புகலிடமாக உள்ளது. அரசியலுக்கு வருபவர்கள் தன்னலம் கருதாமல் நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் சுயநலத்தோடுதான் அரசியலுக்கு வருகின்றனர். நம் நாட்டின் அரசியல் இப்படித்தான் உள்ளது. இந்நிலையில் அரசியலுக்கு வருவதற்கு ரஜினிக்கு தகுதியில்லை என்றுதான் கூற வேண்டும்.

அரசியல் கலக்காத ரஜினி இப்போது பல நல்ல விஷயங்கள் செய்து, நல்ல கருத்துகளை சுதந்திரமாகக் கூறி வருகிறார். அரசியலுக்குப் போனால் அப்படியெல்லாம் கூற முடியாது. அரசியலில் நிறைய கட்சிகள் உள்ளன. ரஜினி ஒரு கட்சிக்கு சென்றால் மற்றொரு கட்சிக்கு எதிரியாகி விடுவார். தமிழகம் முழுவதும் சேர்ந்து நீங்கள்தான் இருக்க வேண்டும் என்று ரஜினியிடம் மக்கள் கேட்கிறார்களோ, அப்போது ரஜினியை நானே அரசியலில் நிற்க வைப்பேன்! என்று பேட்டியை முடித்துக் கொண்டார் சச்சிதானந்த மகராஜ்.

'பாபா' படத்தின் முதல் காட்சியை தொடங்கி வைக்க ரஜினி என்னை அழைத்தது எங்கள் இருவருக்கு மட்டுமே (ரஜினி-சச்சிதானந்தா) தெரியும். எங்க ரெண்டு பேருக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை கூட தெரிஞ்சுகிட்டு செய்தி வெளியிடற அளவுக்கு வேகமா இருக்கீங்களே. ஆச்சர்யமாயிருக்கு என வேடிக்கையாக சொல்லிவிட்டுத்தான் நிருபர்களிடம் விடைபெற்றார் அவர். அதுவே கடைசிப் பேட்டியாக இருக்கும் என்று நிருபர்களாகிய நாங்கள் கூட அப்போது நினைக்கவில்லை.

ராமதாஸ் பேட்டிகள், பாமகவினர் 'பாபா' படத்திற்கு கொடுத்த நெருக்கடிகள், அதே காலகட்டத்தில் காங்கிரஸுடன் தமாகா இணைவு, தன் ஆன்மிக குருவான சச்சிதானந்தா மகராஜ் சுவாமிகளின் திடீர் மறைவு, 'பாபா' ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்களில் இருந்தெல்லாம் பிரச்சினை, கூட்டம் இல்லை என்ற திரையரங்க உரிமையாளர்களின் புலம்பல், ரஜினி எவ்வளவு எதிர்பார்ப்புடன் (சச்சிதானந்தா பேட்டியே ரஜினியின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தி விடுகிறது) இந்த படத்தை எடுத்திருப்பார் என்பதையோ, அது இத்தனை பிரச்சினைகளை சந்தித்து தோல்வியையும் தழுவும் என்பதையோ, அதே நேரத்தில் அடுத்தடுத்து அவருக்கு வந்த சோதனைகளையோ அவரை மையப்புள்ளியாக நிறுத்தி ஒரு கணம் எண்ணிப் பார்த்தால் ஆச்சர்யமே மேலிடுகிறது.

எப்படி பிரபலப்பட்ட ஒரு சினிமா நடிகர் சுற்றுப்புறங்களிலிருந்து எல்லாத் தாக்குதல்களையும் தாங்கி வாய்மூடி மெளனியாகவே இருந்திருப்பார். மீடியாக்களிடம் பேசாமல் இருந்திருப்பார். அப்படி அந்த சமயத்தில் ஏதாவது பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்?

மற்றவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ? இந்த இடத்தில் ரஜினியை முன்வைத்து பல விஷயங்களை அசைபோடவே விரும்புகிறது.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது.

ஒருவனுக்கு இயற்கை பிடித்திருக்கிறது. இன்னொருவனுக்கு மிருகங்கள் மீது வாஞ்சை வருகிறது. சிலருக்கு இரண்டுமே பிடித்திருக்கிறது. இன்னும் சிலருக்கு நாலுபேரை அடிப்பது பிடித்திருக்கிறது. ரொம்ப சொற்பமானவருக்கு ஆராய்தல் இஷ்டமாக இருக்கிறது. அதில் சிலருக்கு புதிய கண்டுபிடித்தல் பிடித்தமானதாக இருக்கிறது. சிலருக்கு புகழ்ச்சி பிடித்திருக்கிறது. சிலருக்கு தனக்கு பிடிக்காதவரை மற்றவர் இகழ்தல் பிடித்திருக்கிறது. இங்கே அக்கிரமங்கள் நடப்பதை ஒழிக்க வேண்டும் என்ற வேட்கை பலருக்குள் உள்ளது. ஆனால் அவர்களின் அட்டூழியங்கள் அவர்களுக்கே புலப்படுவதில்லை. அந்த அட்டூழியங்களை சுட்டிக் காட்டி விமர்சித்தால் அதற்கும் ஒரு நியாயம் கற்பிப்பார்கள். பலருக்கு இல்லறம் பிடித்திருக்கிறது. சிலருக்கு சன்னியாசம் பிடித்திருக்கிறது.

சிலருக்கு ஆன்மிகம் பிடித்திருக்கிறது. சிலருக்கு நாத்திகம் பிடித்திருக்கிறது. சிலர் கம்யூனிஸமே என் வேதம் என்கிறார்கள்.

வேறு சிலரோ வேதங்களே இந்தியாவில் கம்யூனிஸம் என்கிறார்கள். அதையே கட்சிகளாக்குவது, அமைப்புகளாக்குவது, அதில் பதவிகளை ஏற்படுத்துவது, அதை இட்டு நிரப்புவது, இதையெல்லாம் கலக்கியெடுத்து அனைவரையும் மோசடி செய்து தின்னு கொழுப்பது என்பதெல்லாம் கூட நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது. என்றாலும் ஒட்டுமொத்தமான மனிதர்களில் பெரும்பான்மையோருக்கு தான் செய்ய முடியாத, யாரும் செயற்கரிய செயலை ஒருவர் செய்தால் அவர்களை பிடிக்கிறது. அது லாஜிக்காக சரியா? தவறா? அதில் அவர்கள் என்ன உத்தியை கையாள்கிறார்கள் என்பதையெல்லாம் யோசிப்பதில்லை.

ஆதிகால காவியங்கள் முதல் சமகால இலக்கியங்கள் வரை, அந்தக்கால கூத்துகள் முதல் இந்த கால திரைப்படங்கள் வரை இந்த மாதிரியான வித்தைகளை செய்வதிலேயே ஊறி திளைத்திருக்கிறது.

ஒருவன் பத்து பேரை அடித்து சாய்த்து விட்டு, 'நான் ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா!' என்று பெருங்குரலெடுத்து ஓங்கிக் கத்தும் போது ஆராவாரித்து ரசிக்கிறது, விசிலடிக்கிறது இந்த மந்தையிலான மனிதப் பட்டாளம். அதில்தான் இங்கே அறுவடை நடக்கிறது.

ஏன் இந்த மக்கள் இந்த அளவுக்கு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதை சிலர் சிந்திக்கலாம். மேடையில் பேசலாம். எழுதலாம். அதையெல்லாம் விட 'ஒன்றரை டன் வெயிட்டுடா' என்று வசனம் பேசி நிழல் திரையில் நடிக்கிறாரே அந்த மனிதர் என்ன உணர்கிறார் என்பதை யாராவது உணர்கிறார்களா? அந்தக் கதாநாயகனே தான் 'ஓங்கியடித்தால் ஒன்றரை டன் வெயிட்' என்பதை ஏற்றுக் கொள்வாரா? இதை யோசித்துப் பார்த்திருக்கிறார்களா? நிச்சயம் அந்த கதாநாயகர்/மனிதர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பது மட்டுமல்ல, சிரிப்பார்.

ஒரு காலத்தில் எம்ஜிஆர் என்ற நடிகர் அரசியல்வாதியாகி பிரச்சாரம் போனார். அவரை காணக் காத்திருந்த பெருங்கூட்டத்தில் ஒரு மூதாட்டி ஒருவரை தாய்ப் பாசத்துடன் கட்டிப் பிடிக்கிறார். அந்த மூதாட்டி வாஞ்சையுடன் எம்ஜிஆரின் கன்னத்தைத் தடவுகிறார். உடலைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். 'அந்த நம்பியார் அந்த முரட்டு அடி, அடிச்சானே எங்காவது அடிகிடி பட்டு காயமாயிடுச்சாப்பா?' எனக் கேட்கிறார்.

எம்ஜிஆரோ சிரிக்கிறார். 'அது சினிமா பாட்டி. எனக்கொன்னும் ஆகாது. நம்பியார் அப்படியில்லை. ரொம்ப நல்லவர்!' என்கிறார். பாட்டி விடவில்லை, 'எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட ஜாக்கிரதையாவே இருப்பா!' என்கிறார். சினிமா கதாநாயக, வில்லன்களுடன் கலந்து கட்டி வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை அந்தப் பாட்டியினுடையது.

அந்தக் காலம் வேறு. இந்தக் காலம் வேறு.

தனக்கு இவ்வளவு பெரிய மக்கள் சக்தி இருக்கிறது. அதற்கு காரணம் அந்தத் தாய் முகாம்பிகைதான் என்றெல்லாம் கோயிலுக்குப் போனார் எம்ஜிஆர். ஆட்சிக்கு வந்து கோடானு கோடி மக்களின் வாழ்க்கையின் நல்லது கெட்டதற்கு காரணகர்த்தாவாக முதல்வர் பதவி வகித்த பிறகு திடீரென்று நோய்வாய்ப்பட்டார். நினைவிழந்தார். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சுயநினைவுக்கு வந்தவுடன் எம்ஜிஆர் முதலில் தன் உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சியுற்றார். 'எனக்கா, எனக்கா... எனக்கா இப்படி?' என்று கேட்டதாக கூட அப்போது செய்திகள் வெளியாகின.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x