Published : 09 Feb 2018 11:05 AM
Last Updated : 09 Feb 2018 11:05 AM

ரஜினி அரசியல்: 23- ராஜாங்கம் வகித்த வீரப்ப ரகசியம்

வீரப்பன், ராஜ்குமாரை கடத்தி விடுவித்த பிறகு, அதற்காக பெரும் தொகை கைமாறியதும் ராஜாங்க ரகசியம். அதை வீரப்பன்-ராஜ்குமார் விவகாரம் அறிந்த அத்தனை பேரும் அறிவார்கள். அந்தத் தொகையில் ராஜ்குமார் குடும்பம் ஒரு பங்கும், கன்னடத் திரையுலகம் ஒரு பங்கும், தமிழ்த்திரையுலகம் சார்பாக ஒரு பங்கும் அளிக்கப்பட்டதாக அப்போது அடிபட்ட செய்திகள். அதில் மூன்றாம் பங்குத் தொகையை ரஜினியே பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதும் அங்கே நிழலாக தொடர்ந்த அரசியல் ரகசியம்.

அரசியல் ரீதியாக வீரப்பன் வன்னியர் பிரதிநிதியாக நின்று பாமக கட்சிக்கு ஓட்டு சேகரித்தாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீதான அபிமானியாகவும் விளங்கினார் என்பதும் கண்கூடு.

இதன் வெளிப்பாடுதான் வீரப்பன் என்றாலே கன்னம் சிவக்க ஜெயலலிதா பொங்கியதும், கருணாநிதி கனிவுடன் அணுகுவதுமான சங்கதிகள் நடந்தேறின. ரஜினியைப் பொருத்தவரை தமிழகத்தில் சிவாஜியை எந்த அளவு நடிப்பில் நேசித்தாரோ, அதை விட ராஜ்குமாரை கன்னட எம்ஜிஆர் என்பது போல அவரின் தீவிர ரசிகராகவே இருந்தவர்.

இந்த நிலையில் வீரப்பனின் ராஜ்குமார் கடத்தல் நாடகம் நிகழ்ந்தேறினால் எப்படியிருந்திருக்கும்?

மத்தியில் திமுக கூட்டணியுடன் கூடிய வாஜ்பாய் ஆட்சி. மாநிலத்திலும் திமுக தலைவர் கருணாநிதி முதல்வர். அந்த திமுக தலைவர் மீது தனியொரு அரசியல் அபிமானம் கொண்டவர் ரஜினி. இந்த அரசியல் சதுரங்கத்தில் நடந்த திரைமறைவு நாடகத்தில் நிறைய காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. அவை எல்லாமே ராஜாங்க ரகசியமாக இன்றளவும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

அப்படிக் காப்பாற்றப்பட்டதன் வெளிப்பாடாகவே நடிகர் ராஜ்குமாரும் கடைசி காலத்தை கழித்தார். 'வீரப்பன் ரொம்ப நல்லவர். என்னை கடத்தி வைத்திருந்த போது நன்றாக வைத்துக் கொண்டார்!' என்ற வார்த்தைகளை மீறி அவர் எதுவுமே இந்த நாடக அந்தரங்கத்தில் சாகும் வரை உச்சரிக்கவில்லை.

2004-ல் வீரப்பன் என்கவுன்ட்டர், 2006-ல் ராஜ்குமார் மறைவு நிகழ்வுகள் கூட இந்த அரசியல் அந்தரங்கத்தை வெளிக்காட்டவில்லை. உள்ளூர கனக்கும் நெருப்பாகவே இருந்து வருகிறது. ஆனால் ரஜினி என்கிற நடிகர் அவ்வப்போது யதார்த்த உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருப்பவர். நாக்கு பிறழ்ச்சியாலோ, உணர்வு பொங்கியோ சிலவற்றை உதிர்த்து விடக்கூடியவராகவே இருந்து வந்திருக்கிறார். சில சமயங்களில் உண்மையை அடக்கி வைக்கத் தெரியாத மனிதராகவும் வலம் வருகிறார்.

அப்படி வீரப்பன் குறித்த வில்ல பிம்பம் வெளிப்படும் போதெல்லாம் வீரப்பன் நிஜ நாயகனாக கற்பிதம் கொள்ளும் அரசியலுடனே இரண்டறக் கலந்திருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பொங்கி விடுவது வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. அதில் ரஜினி போன்ற ஆகப் பெரும் பிரபல்யங்கள் சர்ச்சைக்குள் சிக்கும்போது, அதில் தர்மசங்கடமாக மாட்டிக்கொள்ளும் மற்ற அரசியல் தலைவர்கள் இரு தரப்பையும் கட்டுப்படுத்தி சமாதானப்படுத்த முயற்சிப்பதும் வாடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றளவும் கூட அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அரசியலாகத்தான் 'பாபா' படத்தை ஒட்டி வந்த ராமதாஸ்-ரஜினி விவகாரத்தை பார்க்க வேண்டியதாகிறது. இந்த 'பாபா' பட விவகாரம் கூட மீடியாக்கள் ஊதிஊதி பெரிசாக்கி விட்ட சூழலின் ஒரு கட்டத்தில் ராமதாஸ், 'இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது!' என்று அறிவித்து ஒதுங்கிக் கொண்டார்.

ராமதாஸ் இப்படி அறிவித்தாலும், அவருக்கு (மருத்துவர் ராமதாஸுக்கு) எதிரான எதிர்நிலை கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ரஜினிக்கு எதிரான சில அரசியல் கருத்துக்களை தெரிவித்தார். அதுவும் எப்படி? ரஜினிக்கு பின்னால் சுரண்டல் கும்பல் இருப்பதாக கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

'பாபா படத்தை நீங்களும் விமர்சனம் செய்தீர்கள். மருத்துவர் ராமதாஸும் விமர்சனம் செய்தார். ஆனால், பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது! என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருக்கிறாரே! என்ன காரணம்?' என்பது முன்னணி புலனாய்வு இதழ் நிருபரின் கேள்வி.

அதற்கு திருமாவளவன் பதில் சொல்கிறார்:

'பாபா படத்தை திடீரென எதிர்த்ததற்கு பின்னணி என்னவென்று தெரியவில்லை. அதைப் போல் திடீரென நிறுத்திக் கொண்டதற்கான காரணமும் புரியவில்லை. திரைமறைவில் என்ன நடந்திருக்கும் என்பதும் நாங்கள் அறியோம். ஆனால் எங்கள் எதிர்ப்பு, கொள்கை அடிப்படையில் அமைந்தது. தமிழக சினிமா உலகம், தமிழக இளைஞர் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறது. தமிழ் இனத்திற்கு விரோதமாகவே செயல்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் கடந்த 15 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இளைஞர்களின் ரசிக உணர்ச்சியை மூலதனமாக்கி, அதைச் சுரண்டுகிற வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் பண்பாட்டு சீரழிவை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் ரஜினி, வீரப்பன் பற்றி பேசிவிட்டதால் ஜாதி அடிப்படையில் 'பாபா' படத்தை விமர்சனம் செய்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ரஜினி இளைஞர்களைச் சீரழிக்கிறார் என்பதுதான் ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டு. அவருடைய கட்சியில் உள்ள இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

வன்னியர்கள் படத்தைப் பார்க்கக்கூடாது என்றுதான் ராமதாஸ் சொல்கிறார். தியேட்டர்களுக்கு தீ வைப்பது, படப்பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடுவது, பொது மேடைகளிலேயே, 'அவன், இவன்! என்று ஏகவசனம் பேசுவது. பத்திரிகையாளர்களை அவள், இவள் என்று வாய்க்கு வந்தபடி பேசுகிறார். நான் நினைத்தால் எந்தப் படமும் ஓடாது என்கிறார். இந்த மாதிரியான பண்புகளைத்தான் அவருடைய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். மற்றபடி இளைஞர்களை நல்வழிப்படுத்துவற்காக எந்த முயற்சியும் அவர் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. ஒரு விதத்தில் சொல்லப்போனால் இளைஞர்கள் சீரழிவிற்கு டாக்டர் ராமதாஸும் ஒரு காரணமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை!

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை ரஜினி பரப்புகிறாரா?

பெரியாரையே கொச்சைப்படுத்தும் அளவிற்கு 'பாபா' படத்தில் கருத்துகள் சொல்லப்படுகின்றன. ரஜினியின் படங்களில் ஆன்மிகம் என்ற பெயரில் இந்த மதப் பிரச்சாரம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைக்கூட அரைகுறை ஆடைகளில் அழகிகளுடன் ஆடிப்பாடிக் கொண்டுதான் ரஜினி சொல்கிறார். அதனால் ரஜினியை மட்டுமின்றி அவருக்குப் பின்னால் இருக்கும் சுரண்டல் கும்பலையும் எதிர்க்க வேண்டும்.

ரஜினியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சினிமாக்காரர்கள் சிங்கப்பூரில் போய் பிச்சை எடுக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார் ராமதாஸ். அரசியல்வாதிகளும் நிதி வசூல் செய்பவர்கள்தான். அது மட்டும் சரி என்கிறீர்களா?

இதற்கு அரசியல்வாதி என்ற கோணத்தில் இருந்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் எந்த மனிதனையும் கொச்சைப்படுத்திப் பேசுவது என்பது மனிதநேயம் அல்ல. பிச்சை எடுக்கிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பதன் மூலம் பிச்சைக்காரர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார். ஏன், அவர்கள் ஏழைகள், எளியவர்கள் என்ற ஆதிக்க மனப்பான்மைதானே? என்றார் திருமாவளவன்.

இப்படி படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள்ளாக பல்வேறு அரசியல் சர்ச்சைகளில் ரஜினி மூழ்கி எழுந்த வேலையில் 'பாபா' படத்தை வெளியிட்ட தியேட்டர்காரர்கள் போட்ட முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை என புலம்பித் தள்ளினார். அதனால் விநியோகஸ்தர்கள் பாடு திண்டாட்டம் ஆகி விட்டது.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x