Published : 08 Feb 2018 04:05 PM
Last Updated : 08 Feb 2018 04:05 PM

ரஜினி அரசியல்: 22- நிழலாய் தொடர்ந்த வீரப்ப ரகசியம்

அப்போது பேசிய லதா, '' 'பாபா' படம் திரையிடப்பட்ட சில தியேட்டர்களில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அனைத்து பிரச்சினைகளும் இப்போது சரியாகிவிட்டது. படத்திற்கு முதல் இரண்டு வாரம் கட்டணம் உயர்த்தி வசூலித்துக்கொள்ள அரசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது. இதனை ஒரு வாரமாக குறைத்துக்கொண்டோம். நேற்று (22.08.2002) முதல் தியேட்டர்களில் கட்டணம் குறைக்கப்பட்டு வழக்கமான கட்டணத்தில் 'பாபா' பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பு குறித்து அரசுக்கும் தெரிவித்துவிட்டோம்.

'பாபா' படத்தை ஒட்டி 'மேக் தூத்' என்ற பெயரில் 'பாபா தபால் கார்டு' தபால்துறை மூலம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. முதல் கட்டமாக 5 லட்சம் கார்டுகள் வெளியிடப்படுகிறது. 'பாபா' படத்தின் சிறப்புக் காட்சி சென்னை சத்தியம் தியேட்டரில் வெளியிடப்பட்ட போதே பாபா உடைகள், பாபா 3 டி கார்டுகள், பாபா டி சர்ட் ஆகியவைகளை ரயோ பிராண்ட் மூலம் விற்பனைக்கு கொண்டு வர இருந்தோம்.

பட வெளியீட்டிற்கு வந்த அமெரிக்க சுவாமிஜி கூட்டம் அதிகம் இருந்ததால் நெரிசலில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இதனால் அப்போது இதனைத் தொடங்க முடியவில்லை. அதனால் இன்று தொடங்குகிறோம். இந்த விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கும் உதவ பயன்படுத்தப்பட உள்ளது.

'பாபா'வின் பெயரை பயன்படுத்தி தரமற்ற பொருளை விற்பனை செய்வதை தடுப்பதற்காகவே இந்த முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். 'பாபா' படம் சம்பந்தமான ஸ்டில்கள், தகவல்கள் பத்திரிகைகளுக்கு கொடுக்க முடியாததற்கு காரணம் படப்பிடிப்பு இரவு பகலாக 92 நாட்கள் நடத்தப்பட்டது. ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திக்க முடியாததற்கும் இதுதான் காரணம். ரஜினி பத்திரிகை நிருபர்களை மிகவும் மதிப்பவர்.

'பாபா' படப்பெட்டியை விஷமிகள் சிலர் ஜெயங்கொண்டம் தியேட்டரில் தூக்கிக் கொண்டு சென்றதற்கு உடனடியாக பதில் நடவடிக்கை எடுக்காததற்கு காரணம் ரஜினிக்கு மட்டும்தான் தெரியும். அவர் எந்த முடிவு எடுத்தாலுமு் அதில் ஒரு நியாயம் இருக்கும். 'பாபா' படப் பிரச்சனை சம்பந்தமாக அவர் என்ன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமோ அதை அவர் மேற்கொண்டார். அது அவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். மற்றபடி படம் தயாரித்த லோட்டஸ் இண்டர்நேஷனல் நிறுவனம்தான் சொல்ல வேண்டும். படத்திற்கு கூட்டம் வரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். படம் வெளியிடப்பட்டு ஒரு வாரம்தான் ஆகிறது. குழந்தை பிறந்தவுடன் அது எப்படியிருக்கும் என்று எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும். படம் 15 நாட்களுக்கு மேல் ஓடும்போதுதான் ஓரளவு கணிக்க முடியும்.

'பாபா' படம் ஓடிய சில தியேட்டர்களில் எதிர்பாராமல் நடந்த பிரச்சினைகளால் பெண்கள் கூட்டம் வருவதில் தடை ஏற்பட்டது. தற்போது அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. இனி கூட்டம் வரும்!'' என்று அப்போது நீண்ட உரையாற்றினார் லதா.

நிருபர்கள், ''பாபாவிற்கு கூட்டம் வரவில்லை என்றுதான் டிக்கெட் விலை குறைக்கப்பட்டதா?'' என்று நிருபர்கள் கேட்டதற்கு, ''நிச்சயம் அப்படி இல்லை. டிக்கெட் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்று ஆயிரக்கணக்கான பெண்கள் எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதங்களை பரிசீலனை செய்த பிறகே டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு செய்தோம். இனி தியேட்டர்களில் வழக்கமான கட்டணத்தில் 'பாபா' படத்தைப் பார்க்கலாம்!'' என்று பதில் தந்தார்.

இதே நிகழ்ச்சியில் பாபா படத்திற்கான மேக்தூத் தபால் கார்டு மற்றும் பாபா த்ரீ டி கார்டு மாதிரியையும் அறிமுகம் செய்து வைத்தார் லதா. இவர் இங்கே இப்படி அறிமுகம் செய்ய இதே நாளில் மரக்காணம் நிகழ்ச்சி ஒன்றில் திரும்ப ரஜினியின் சிகரெட், மது பழக்கத்தை கண்டித்துப் பேசினார் மருத்துவர் ராமதாஸ். மரக்காணம் அருகே நல்லம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏரி, குளங்களை தூர் எடுக்கும் பணியை அன்று தொடங்கி வைத்தார் ராமதாஸ்.

தொடர்ந்து ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு பேசினார். வன்னியர் சமூகம் குறித்தும், அவர்கள் வீர தீரம் குறித்தும், அவர்கள் சமகால போராட்டங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்த மருத்துவர் ராமதாஸை பார்த்து அக்கிராம இளைஞர் ஆறுமுகம் என்பவர், 'ரஜினியை பற்றி பேசினீர்களே?' என கேள்வி கேட்டார். உடனே பேச்சு திசைமாறியது. ரஜினியின் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு புகாராக ராமதாஸ் கூறத் தொடங்கினார்.

''சிகரெட், பாக்குக்கு தடை விதித்தார்கள். அதை வைத்துத்தான் படம் எடுப்பார் ரஜினி. பீடி, சிகரெட்டை எப்படி போட்டுப் பிடிப்பது போன்றதை எல்லாம் தியேட்டரில் போய் படத்தில் பார்க்க ரூ.100, ரூ.200 என்று கொடுக்க வேண்டும். இவர் நடித்த பட கட்-அவுட்களை வைத்து பால் அபிஷேகம், கற்பூர ஆரத்தி எல்லாம் எடுக்கிறார்கள். கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் 60 பேரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடகா போய் குரல் கொடுத்தாரா? அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டாரா? வீரப்பன் என்னை நன்றாக வைத்திருந்தார். எந்த குறையும் இல்லை. என்று ராஜ்குமார் சொல்லியிருக்கிறார். ஆனால் ராஜ்குமார் மகன் நடத்திய படவிழாவில் வீரப்பன் ராட்சதன். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும்'' என்கிறார். நானும் தமிழன்தான். என்னையும் சம்ஹாரம் செய்ய வேண்டும் என்றுதானே அர்த்தம்?

ரஜினி இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வைத்திருக்கிறார். அதனால் தமிழகத்திற்கு என்ன பயன்? இவர் அரசியலுக்கு வருகிறார் என்று சொல்கிறார்கள். இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்வார். இவர் பட வெளியீட்டிற்கு அமெரிக்காவில் இருந்து ஒருவரை வரவழைத்தார். நன்றாக இருந்தவர் செத்துப்போனார். அவர் நம் தமிழர்தான். குஷ்புவுக்கு கோயில் கட்டினாங்க. கடைசியில் அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். அதனால் மன்றம் திறப்பதை விட பாரதி, காமராஜ், காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களில் நற்பணி மன்றங்கள் திறந்து நல்லது செய்யுங்கள் என்கிறேன். நூலகம் திறந்து நம் மக்களின் அறிவுக்கண்ணை திறக்க வேண்டும்'' என்றார் ராமதாஸ்.

இந்தச் செய்திகளும் அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகளில் செய்திகள் ஆகின. ஆனால் எந்த இடத்திலும் ரஜினி நேரடியாக இதற்கு பதில் சொல்லவில்லை.

ரசிகர்களுக்கு சத்தியநாராயணா மூலம் இருந்து மட்டும் வேண்டுகோள்கள் வந்தன. 'உணர்ச்சிவசப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள். இதை எப்போது எப்படி சந்திக்க வேண்டும் என்பது தலைவருக்கு (ரஜினிக்கு) தெரியும்!' என்று.

ரஜினி வீரப்பனைப் பற்றி பேசியதால்தான் ராமதாஸிடம் இந்தக் கொதிப்பு என்பது அன்றைய அரசியல் உலகம் அறிந்த ரகசியம். இன்றைக்கும் வீரப்பன் பிறந்த மண்ணான கர்நாடக எல்லை கோபிநத்தமும், தமிழக எல்லை கோவிந்தபாடியிலும் பாமகவிற்கு செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கிறதென்றால் அதற்கு ஆதிமுதலே வீரப்பன்தான் காரணம் என்பது இந்த அரசியலினுள் ஆழ ஊடுருவி செல்பவர்களுக்கு புரியக்கூடும் என்று நினைக்கிறேன்.

கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய காலகட்டத்தில் கோபிநத்தம், மேட்டூர், கோவிந்தபாடி பகுதிகளில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன். அப்போது அதை நேரிலேயே தரிசித்தேன். மேட்டூரில் பாமகவின் செல்வாக்கும், வீரப்பனின் பிரபல்யமும் இரண்டறக் கலந்திருந்தது. அதிலும் கோபிநத்தம் டூ கோவிந்தபாடியில் வீரப்பனை பற்றியோ, பாமகவைப் பற்றியோ ஒற்றைச் சொல் தவறாக உதிர்த்து விட்டால் அந்த நபரின் நிலைமை சிக்கல்தான் என்ற நிலையே நீடித்தது.

1989 மக்களவைத் தேர்தலின்போதும், 1991, 1996 சட்டப்பேரவைத் தேர்தல்களின் போதும் சரி, இங்கே பாமக வேட்பாளருக்காக வீரப்பனே நேரில் வந்து ஓட்டு கேட்டார் என்றார்கள். அதிலும் 1991 தேர்தலின் போது கடைகடையாக, வீடுவீடாக துப்பாக்கி ஏந்தியபடி தன் தோழர்கள் புடைசூழ, 'மரியாதையா நம்ம ஆளுக்கு ஓட்டுப் போட்டுடுங்க. இல்லை சுட்டுப்போடுவேன்!' என்று மிரட்டிச் சென்றதாக கதை, கதையாகச் சொன்னார்கள்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x