Published : 30 Jan 2018 02:46 PM
Last Updated : 30 Jan 2018 02:46 PM

ரஜினி அரசியல்: 16- எப்ப வருவேன்; எப்படி வருவேன்?

அப்போது அங்கு இன்டர்காமிலேயே பேசியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'என்னை மேடையில் ரஜினி அப்படியெல்லாம் பேசியிருக்கிறார். நீங்க அதைக் கேட்டுகிட்டு சும்மா இருந்திருக்கீங்க?' என்று குற்றப்படுத்தும் தொனியில் பேசியிருக்கிறார்.

ஆர்.எம்.வீயோ தனக்கான சூழ்நிலையை சொல்லி இருக்கிறார். தவிர, 'ரஜினியின் இயல்பு அப்படி. அவர் பேச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்பவில்லை. கடைசியாக அவர் பேசியதால் கூட்டமும் முடிந்துவிட்டது. அவர் பேச்சுக்கு மறுப்பு சொல்லவும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது!' என்றெல்லாம் எடுத்துச்சொல்லியும் இருக்கிறார்.

அதைத் துளியும் பொருட்படுத்தவில்லை ஜெயலலிதா, 'அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கார். நீங்களும் கேட்டுக்கிட்டு இருந்திருக்கீங்க. அவ்வளவுதான், அதுதான் நிஜம்!' என்று கூறிவிட்டு ரிசீவரை வைத்துவிட்டார். அதற்குப் பிறகு ஆர்.எம்.வீக்கு முதல்வருடன் பேசவே வாய்ப்பில்லாத போய்விட்டது. திட்டமிட்டபடி அமெரிக்காவுக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அங்கு போய் சேர்ந்த பின்புதான் தமிழ்நாட்டில் ரஜினி பேச்சை வைத்தே தன் அரசியல் வாழ்க்கைக்கு தன் அரசியல் எதிரிகள் ஆபத்து ஏற்படுத்தியதை உணர முடிந்தது. ரஜினிக்கும், தனக்கும் எதிராக அறிக்கைகள், கண்டனங்கள், போராட்டங்கள் வெடிப்பதைப் பார்த்து ஆர்.எம்.வீ அமெரிக்காவிலிருந்தே அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'நான் அமைச்சராக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்போது என்னை வேண்டாம் என்றாலும் நான் போகத் தயாராகவே இருக்கிறேன். இதற்காக போராட்டம் செய்யத் தேவையில்லை!' என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இதன் பின் ஒரு மாதம் கழித்துதான் அமெரிக்க சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பினார் ஆர்.எம்.வீ.

விமான நிலையத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு. வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் ரஜினி மன்ற ரசிகர்கள். அதுவும் பத்திரிகைகளில் பரபர செய்திகளாக வந்தது. ரஜினி புதுக்கட்சி, ஆர்.எம்.வீ திட்டம் என்கிற லெவலில் கூட அதிமுகவில் பேச்சுகள் புறப்பட்டன. அது இன்னமும் பிரச்சினைகளுக்கு நெருப்பு மூட்டியது.

ஆர்.எம்.வீ அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தது ஆகஸ்ட் 15-ம் தேதி. அன்று சுதந்திர தினம். தேசியக் கொடி ஏற்றும் அரசு விழாவில் ஜெயலலிதாவை ஆர்.எம்.வீரப்பன் சந்தித்தார். சுமுகமாகவே அந்த சந்திப்பும் இருந்தது. பின்னர் அவர் உணவுத்துறை அமைச்சர் பொறுப்பை கவனிக்கலானார்.

தன் பேச்சால் அமைச்சர் பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உண்மையிலேயே உணர்ந்து ஆர்.எம்.வீரப்பனின் வீட்டிற்கே சென்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு சென்றார் ரஜினி. இந்த சந்திப்பு நடந்து இரண்டே வாரங்கள். ஆர்.எம்.வீரப்பனுக்கு உணவுத்துறைக்கு பதிலாக கால்நடைத்துறை ஒதுக்கப்பட்டது. இதன் பின்பு அமைச்சர் பொறுப்பிலிருந்தும், அதிமுகவிலிருந்தும் கூட நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக எம்ஜிஆர் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி ஆர்.எம். வீரப்பன் தொடங்கினார்.

இதே காலகட்டத்தில்தான் (1995 அக்டோபர் 23-ம்தேதி) ரஜினியின் அடுத்த வெற்றிப்படமான 'முத்து' வெளியானது. 'நான் எப்ப வருவேன்; எப்படி வருவே?ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்' என்ற அரசியல் பஞ்ச் வசனம் இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். இதே படத்தில் மீனா கதாநாயகி. சக்தி நாடக சபாவில் நடித்துக் கொண்டிருப்பார்.

அரங்கில் முதல் வரிசையில் ரஜினி தூங்கிக் கொண்டிருப்பார். தூக்கத்திலேயே தும்முவார். அதில் மீனா எரிச்சலாகி, 'என்னய்யா தும்மிட்டே இருக்கே?' வசனம் பேசுவார்.

'என்னய்யா நாட்டுல தும்மினா கூடவா பிரச்சினை என்பார் ரஜினி. இப்படியாக நீளும் வசனம், 'கீழே உட்கார்ந்துட்டு எது வேண்ணா பேசலாம். மேடையேறிப்பாரு தெரியும்!' என்பார் மீனா. 'நமக்கெதுக்கு அது வேண்டாத வேலை. நான் பாட்டுக்கு இங்கே இருக்கேன்!' என்பார் ரஜினி. பதிலுக்கு அரங்கில் உள்ளவர்கள், 'அவர் ஏறமாட்டார். நம்மதான் ஏத்திவிடணும்!' என சொல்லி மேடையேற்றி விடுவார்கள்.

இந்த காட்சிகள், வசனங்கள் எல்லாம் ஜெயலலிதாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட அரசியலாக கருதினர் ரசிகர்கள்.

இந்த 'முத்து' படம் ரிலீஸ் ஆன பிறகு வந்த ரஜினியின் பிறந்த நாளில்தான் தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான வாழ்த்து போஸ்டர்கள், பேனர்கள் தமிழகம் எங்கும் கடை விரித்தன. (இதற்குப்பிறகு அதே அளவு பேனர்கள், வாழ்த்து போஸ்டர்கள் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினி அறிவித்த இந்த ஆண்டுதான் இறங்கியிருக்கின்றன).

இந்த காலகட்டத்தில்தான் அரசியல் ரீதியாக மறைமுகமாக ஜெயலலிதா ஆட்சியில் பதவியில் இருந்த அதிகாரிகளால் பல்வேறு இடர்ப்பாடுகளையும் சந்தித்தார் ரஜினி. அதில் ஒன்றாகத்தான் அவர் வீட்டின் விவகாரமும் பத்திரிகை செய்திகளாக கட்டம் கட்டின.

ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு என்பது அனைவருக்கும் தெரியும். 1991-1996 கால கட்டத்தில் (அப்போது விடுதலைப்புலிகள் அச்சுறுத்தல் காரணமாக, முதல்வருக்கு கடும் பாதுகாப்பும் இருந்தது) எல்லாம் முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் செல்லும்போதும், வேறு பகுதிகளுக்குச் செல்லும்போதும் மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்படும். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும். ஜெயலலிதா இல்லம் இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலோ 24 மணி நேரமும் பாதுகாப்பு பலமாகவே இருக்கும்.

அதேசமயம் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினரைப் பொருத்தவரை, அவர் வீட்டிற்கு வருபவர்களைப் பொருத்தவரை அந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி உடனுக்குடனே வழிவிட்டு வந்தார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். அந்த அளவுக்கு ரஜினி மீதும், அவர் வீட்டிற்கு வருபவர்கள் மீதும் (ரசிகர்கள் உள்பட) மரியாதையும் வைத்திருந்தார்கள். இடையூறும் கொடுக்காமல் இருந்தார்கள். ஆனால் ரஜினியின் வெடிகுண்டு கலாச்சார பேச்சிற்குப் பிறகு, 'முத்து' படம் வெளியான பிறகும் அவர் வீட்டிற்கு வரும் வாகனங்களை உள்ளே அனுப்புவதில் கெடுபிடி கொடி கட்ட ஆரம்பித்தது.

ரஜினியைத் தேடி வரும் ரசிகர் பட்டாளம் தடுக்கப்பட்டது. அதையும் மீறி அங்கே வருபவர்கள், பல்வேறு சோதனைகள் மற்றும் நெருக்கடிக்கு ஆட்பட்டார்கள். ஜெயலலிதா தன் வீட்டிலிருந்து வெளியில் செல்லுவதற்கு முன்னரும், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் முன்னரும் அரை மணி நேரத்திற்கும் குறையாமல் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அப்படித்தான் ஒரு முறை வீட்டிற்கு வந்த ரஜினிகாந்தின் வாகனம் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்த் நடந்தே தன் வீட்டிற்குச் சென்றார். இதுவெல்லாம் அந்த காலகட்டத்தில் பத்திரிகைகளில் செய்திகள் ஆகின.

இதையும் தாண்டி அரசாங்க இயந்திரம் ரஜினியின் மீது எந்த மாதிரியான மறைமுகத் தாக்குதல்களை தொடுத்ததோ தெரியாது. ரஜினியின் நெருங்கிய நண்பர்கள் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவரான மூப்பனாரிடம் அழைத்துச் சென்றார்கள்.

1996 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதாவிற்கு ரஜினி எதிர்நிலை எடுப்பதற்கு காங்கிரஸ்-திமுக தரப்பில் ஒரு விதமாகவும், ரஜினி ரசிகர்கள் தரப்பில் மற்றொரு விதமாகவும் காரணங்களை அடுக்குகிறார்கள். இதில் வெளிப்படையாக இருதரப்பிலும் வெளிப்படும் அரசியல் சங்கதி, 'பாட்ஷா' பட விழா மேடையில் இடம் பெற்ற வெடிகுண்டு கலாச்சாரப் பேச்சையே சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் அதற்கும் அப்பால் பல அரண்மனை ரகசியங்கள் இருந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்படி?

- பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x