Published : 24 Jan 2018 08:34 PM
Last Updated : 24 Jan 2018 08:34 PM

ரஜினி அரசியல்: 15- அண்ணாமலை முதல் ஆர்எம்வீ வரை!

1989-ல் ரஜினி அளித்த பேட்டிகளையும், கருணாநிதி பேசிய பேச்சுகளையும் அரசியல் உட்பொருளோடு பொருத்திப் பாருங்கள். ரஜினியிடம் அதே அழுத்தம், மாறாத அதே பிடிவாதம். அதே உள் ஆழம் நிறைத்ததாக தொடர்ந்து வந்திருக்கிறது.

இந்த மையப் புள்ளிகளிலிருந்துதான் ரஜினியின் அரசியலும், அதில் உண்டான அரசியல் சர்ச்சைகளும் தொடங்குகிறது. ஏற்கெனவே நான் பார்த்த, 'என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக (தமிழ்) மக்களே!' என்ற ரஜினியின் அரசியலுக்குண்டான முதல் வாக்கியமும் இங்கிருந்தே தொடங்குவதை உணர முடிகிறது.

அப்போது அவரின் பத்திரிகை பேட்டிகள், விழா மேடைகளில் தொனித்த அரசியல் அவற்றில் மட்டுமல்லாது, அவர் நடித்த படங்களிலும் இடம் பெறாமல் இருந்ததில்லை. அதுதான் 1995-ல் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் அவரை பகிரங்கமாகப் பேச வைத்தது. அது இயல்பாகவே நடந்தேறியது.

அதில் உச்சமாக வந்ததுதான் 'அண்ணாமலை'. ரஜினியின் திரையுலகத்தில் ஒரு மைல் கல் என பேசப்பட்ட இந்த படத்தில் சில அரசியல் பஞ்ச்களும் இடம் பிடித்திருக்கும். இப்படத்தில் தன் நண்பர் ஜனகராஜுடன் சென்று ஜோசியம் பார்ப்பார் ரஜினி. 'உனக்கு ஒரு பெண்ணால்தான் ஆபத்து!' என்று சொல்வார் ஜோதிடர்.

இதே படத்தில் அரசியல்வாதியாக வரும் வினுசக்கரவர்த்தி அண்ணாமலையின் மாட்டுப்பண்ணையுடன் கூடிய வீட்டை ஆக்கிரமித்து விடுவார். பதிலுக்கு அண்ணாமலை வினுசக்கரவர்த்தி வீட்டிற்கு மாடுகளை ஓட்டிச் சென்று விட்டுவிடுவார். அந்த மாடுகளை அடித்து விரட்டுவர் அரசியல்வாதியின் ஆட்கள்.

அப்போது ரஜினி பேசும் வசனம்: 'என்னை அடிங்க. என்ன வேண்ணா செய்யுங்க. என் மாடுகளை அடிச்சா தெரியும் சேதி. என்னோட பாணியே தனியாக இருக்கும்!' என்பார். அதே சமயம் வினுசக்கரவர்த்தியிடம் அவர் பேசுவார்.

'அரசியல் புனிதமானது. சம்பாதிக்கிறதுக்கு இதை பயன்படுத்தாதீங்க. காந்தி, காமராஜர், அண்ணான்னு மேடையில் எல்லாம் பேசறீங்க. ஆனா பதவின்னு வந்தா அவங்களையெல்லாம் மறந்துடறீங்க!' என்று பொங்குவார். இதையெல்லாம் ரஜினி ரசிகர்கள் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கு சூடு போட்டதாகவே கருதினார்கள்.

'அண்ணாமலை' படம் வெளி வருவதற்கு முன்புதான் மதுரையில் ஒரு ரஜினி ரசிகரை போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் கண்மூடித்தனமாக அடித்திருக்கின்றனர். அந்த சமயம் தமிழ்நாடு முழுக்க ரஜினிக்கு மன்றங்கள் பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அதை கணக்கெடுக்கவோ, வேறு விதமாக கண்காணிக்க சொல்லியோ மேலிடத்திலிருந்து ரகசிய உத்தரவு பரிமாறப்பட்டிருந்திருக்கிறது. அதன் எதிரொலியாகவே அந்த ரசிகர் போலீஸாரால் தாக்கப்பட்டார். மற்ற மாவட்டத்தில் கூட ரசிகர்களுக்கு நெருக்கடிகள் வந்தன. சில இடங்களில் ரசிகர்கள் போராட்டங்களில் கூட ஈடுபட முயற்சித்தார்கள். அப்போது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைமையிலிருந்து அவசரப்பட வேண்டாம் என்று உத்தரவும் வந்திருந்தது. அதன் பிறகுதான் 'அண்ணாமலை' ஷூட்டிங் நடந்தது. அதில் இந்த பொறி பறக்கும் அரசியல் வசனங்களை வைத்திருந்தார் ரஜினி. அந்த வசனங்கள் ஜெயலலிதாவிற்காகவே வைக்கப்பட்டிருப்பதாகவே எங்களைப் போன்ற ரசிகர்கள் உணர்ந்தோம் என்கிறார் அப்போதைய ரசிகர் மன்ற நிர்வாகியாக இருந்த ரஜினி ரசிகர் ஒருவர்.

''அந்த காலகட்டத்தில் வந்த 'மாப்பிள்ளை', 'பாண்டியன்' என வரும் ரஜினி படங்களை எல்லாம் பாருங்கள் வில்லன் பாத்திரப் படைப்புக்கு பதில் வில்லி பாத்திரப் படைப்பையே உருவாக்கி திரையில் உலவ விட்டிருப்பார். அதுவெல்லாம் ஜெயலலிதாவின் எதிர்ப்புணர்வே!'' என்று மேலும் பொடி வைத்தார் அந்த ரசிகர்.

1993-ல் வெளிவந்த 'வள்ளி' படத்தில் கூட பல அரசியல் பஞ்ச் வசனங்கள். அதில் ஒன்று, 'அரசாங்கத்துகிட்ட இலவசமா வேட்டி சேலை கேட்காதீங்க. வேலை வெட்டி கேளுங்க!' என்ற வசனம் கூட ரசிகர்களின் பலத்த கைதட்டலையும் வரவேற்பையும் பெற்றது. இந்த சூழ்நிலையெல்லாம் தாண்டியே 'பாட்ஷா' படத்தின் விழாவில் அந்த அரசியல் முக்கிய சம்பவம் நடந்தது.

சத்யா மூவிஸ் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' 25 வாரங்கள் ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்தது. அதன் வெள்ளி விழா 1995 ஜூலை 14-ம் தேதி சென்னை அடையாறு பார்க் ஓட்டலில் நடந்தது. படத்தில் நடித்த நடிகர் நடிகையர், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலருக்கும் பரிசுப்பொருட்கள் கேடயம் வழங்கிப் பேசினார் ரஜினிகாந்த்.

'' 'பாட்ஷா' படத்தின் வெற்றிக்கு உரிய பெருமை அதை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பனையே சேரும். நான் இந்த விழாவில் முக்கியமான பிரச்சினை பற்றி பேசப்போறேன். அது டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு. அது நம் மனதை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. அது மட்டுமல்ல. பல இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் சமீபத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தமிழக முதல்வருக்கு (அப்போது முதல்வர் ஜெயலலிதா) என்னுடைய வேண்டுகோளை வைக்கிறேன். வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வாருங்கள். சிங்கப்பூரில் போதை மருந்து வைத்திருந்தால் விசாரணையே இல்லாமல் தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை பிடித்து தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளி கூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்?

தமிழக போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மிகுந்த திறமைசாலிகள். அவர்களுக்கான இடத்தை அவர்களிடமே விடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக் காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமே இல்லாமல் அவர்கள் ஆக்கி விடுவார்கள். இனி தமிழ்நாட்டில் வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாக சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவன் என்ற முறையில் சொல்கிறேன்'' என்றார்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எம். வீரப்பன் அப்போது அதிமுக அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார். அவர்தான் ரஜினிகாந்திற்கு கேடயமும் வழங்கினார். ஆனால் அவர் ரஜினி பேச்சுக்கு மறுப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. அதுவே தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த விழா நடந்த பின்பு ஆர்.எம்.வீரப்பன் அமெரிக்காவிற்கு புறப்பட்டு செல்ல, தமிழகத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கும், ரஜினிக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்தனர் அதிமுகவினர். கண்டன அறிக்கைகள், கொடும்பாவியும் எரித்தனர்.

ஆர்.எம்.வீரப்பனை கட்சி துரோகி என வர்ணித்து அவரை நீக்குங்கள் என கட்சி நிர்வாகிகளே அறிக்கை விடுமளவு சென்றது.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள், 'ரஜினி கட்சி தொடங்க வேண்டும். அதிமுகவினருக்கு பாடம் புகட்ட வேண்டும்!' என்றெல்லாம் கிளர்ந்தெழ ஆரம்பித்தனர்.

ரஜினி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும். அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்களே வெளிப்படையான கோரிக்கை வைத்தனர். அப்படி இதில் என்னதான் நடந்தது? அதை ஆர்.எம்.வீரப்பன் தரப்பே பின்னாளில் வெளிப்படுத்தியது.

'பாட்ஷா' விழாவுக்கு முன்னரே ஆர்.எம்.வீ அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். அதை விழாவுக்கு செல்லும் முன்னரே ஜெயலலிதாவை சந்தித்து சொல்லிவிட்டு அவரிடம் விடைபெற்றுதான் வந்திருந்தார். 'பாட்ஷா' படத்தயாரிப்பில் தனக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்பதால் முன்வரிசையிலேயே விழாவிற்கு சென்று அமர்ந்திருக்கிறார்.

விழாவுக்கு வந்த ரஜினியோ, ஆர்.எம்.வீ கீழே அமர்ந்திருப்பதை எதேச்சையாக பார்த்துவிட்டே மேலே மேடைக்கு வரும்படி அழைத்திருக்கிறார். இவரும் மேடையில் சென்று அமர்ந்துள்ளார்.

பொதுவாகவே ரஜினி மனசுக்குப் பட்டதை எந்த மேடையானாலும் வெளிப்படையாக பேசக் கூடியவர். அப்படித்தான் அன்றும் வெடிகுண்டு கலாச்சாரப் பேச்சையும் கொளுத்திப் போட்டார். அந்தக் கூட்டத்தில் கடைசியாகப் பேசியவர் ரஜினி என்பதாலும், ஆர்.எம்.வீ பேசுவதற்கு அதற்குப் பிறகு வாய்ப்பில்லை என்பதாலும் அப்படியே அவர் புறப்பட்டு வீட்டிற்கு சென்றும் விட்டார்.

அடுத்த நாள் ஆர்.எம்.வீக்கு போயஸ் கார்டனிலிருந்து 'முதல்வர் உங்களைப் பார்க்க விரும்புகிறார்!' என அழைப்பும் வந்திருக்கிறது. ஆர்எம்வீயும் போயிருக்கிறார்.

- பேசித் தெளிவோம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x