Published : 24 Jan 2018 05:21 PM
Last Updated : 24 Jan 2018 05:21 PM

வாட்ஸ் அப்பில் இந்தியர்கள் அதிகம் அனுப்பும் குறுஞ்செய்தி என்ன தெரியுமா?- கூகுள் ஆய்வு

சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள்,  ஸ்மார்ட் போன்கள் ஏன் உலகின் பல இடங்களில் ஒட்டுமொத்தமாக சில நேரங்களில் முடக்கப்படுகின்றன என்பதை அறிய ஆய்வு ஒன்றை நடத்தினர்.

இந்த ஆய்வின் முடிவுகள்  பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளன.

உலகில் இந்தியர்கள்தான் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அதிக அளவு அனுப்புகின்றனர் என்றும், இதனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி நிரம்பியுள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆய்வில், "இந்தியர்களால் அனுப்படும் குறுஞ்செய்தி என்னவென்று தெரியுமா, காலை வணக்கம் என்ற இந்த இரண்டு வார்த்தையைத்தான் பூக்கள், குழந்தைகள், பறவைகள், சூரிய உதயம் போன்ற படங்களுடன் வாழ்த்துச் செய்தியாக இந்தியர்கள் அனுப்புகின்றனர்.

சூரிய உதயம் தோன்றியதிலிருந்து 8 மணிக்குள்ளாக பல லட்சக்கணக்கான காலை வணக்கம் தொடர்பான வாழ்த்துச் செய்திகள் இந்தியர்களால் அனுப்பப்படுகின்றன. மேலும் இந்த வாழ்த்துச் செய்தி தொடர்பான படங்கள் கடந்த ஆண்டுகளாக இணையத்திலிருந்து இந்தியர்களால் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 20 கோடி இந்தியர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளால் போனில் உள்ள சேமிப்புப் பகுதி முழுவதும் நிரம்பும் தொந்தரவுகளும் இந்தியர்களிடம் பரவலாக காணப்படுகிறது.

இந்தியர்களில் மூன்றில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை உள்ளதாகவும், இது அமெரிக்காவில் பத்தில் ஒருவருக்கு உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வாழ்த்துகள் அனுப்ப முயற்சித்ததால் சமூக வலைதள ஊடகமான வாட்ஸ் அப் சிறிது நேரம் முடங்கியது. இதில் 20 பில்லியன் செய்திகள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதாகவும் வாட்ஸ் அப் கூறியது. இது சாதனையாகவும் பதிவானது.

The Wall Street Journal  இந்த தகவலை வெளியிட்டுள்ளது

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x