Last Updated : 17 Jan, 2018 11:52 AM

 

Published : 17 Jan 2018 11:52 AM
Last Updated : 17 Jan 2018 11:52 AM

ரோஹித் சர்மாவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும்; பார்த்திவ் படேலுக்கு இழைத்த துரோகமும்!

துணைக்கண்டபிட்ச், இந்திய ரக பிட்ச் என்றெல்லாம் வர்ணனையிலும் ஊடகங்களிலும் செஞ்சூரியன் பிட்சைப் பற்றிக் கூறுவது சரியென்றாலும்  ஃபானி டிவில்லியர்ஸ் கூறியது போல் இந்தப் பிட்சில் பந்தின் வேகம் கூடிவிட்டது என்பதும் டுபிளெசிஸ் கூறியது போல் பிட்சில் பந்துகள் எழுச்சியும், தாழ்ச்சியும் பெறும் என்று டாஸின் போது கூறியதும் உண்மையாகியுள்ளது.

மார்க்ரம், ஆம்லாவை பும்ரா தனது ‘ஷூட்டர்கள்’ (தாழ்வாக வரும் பந்துகள்) மூலம் வீழ்த்த, ரபாடா வீசிய அதே ரகப் பந்துக்கு முரளி விஜய்யும், என்ஜீடி பந்துக்கு விராட் கோலியும் இரையானார்கள். ஷார்ட் ஆஃப் லெந்த் பந்துக்கு கிரீசிலிருந்தே பந்தை பஞ்ச் செய்ய முயன்றார் விஜய், மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

கே.எல்.ராகுலின் வலி நிறைந்த இன்னிங்ஸை என்ஜீடி முடிவுக்குக் கொண்டு வந்தார். 29 பந்துகளில் 4 ரன்கள் எடுத்திருந்த அவர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லெந்துக்கு சற்று குறைவாக பிட்ச் ஆகி வந்த பந்தை என்ன செய்ய முயன்றார் என்று தெரியவில்லை, ஆனால் ஆடாமல் விட்டிருக்க வேண்டும், கட்டாகவும் இல்லாமல் பஞ்ச் ஆகவும் இல்லாமல் ஏதோ ஒன்றைச் செய்ய பேக்வர்ட் பாயிண்ட் பீல்டர் மஹராஜ் கேட்சுக்காக நகர வேண்டிய தேவையும் ஏற்படவில்லை.

விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த போது என்ஜீடி சற்றே வைட் ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை ஷார்ட் ஆஃப் குட் லெந்தில் பிட்ச் செய்து உள்ளே ஸ்விங் செய்தார், கோலி எம்பினார், பந்து கால்காப்பைத் தாக்கியது. நேராக வாங்கினார், கிட்டத்தட்ட மார்க்ரம் அவுட் ஆனது போல்தான், ஆனால் கேப்டனாயிற்றே, இந்தியாவின் சிறந்த வீரரும் கூட, ரிவியூ செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? ரிவியூ செய்தார், எல்.பி.உறுதி செய்யப்பட்டது. மிடில் ஸ்டம்பைத் தாக்கும் ஒரு பந்துக்கு ரிவியூ செய்வதென்றால், அது ஒரு நாடகமாக்க முயற்சி என்றுதான் கூற வேண்டியுள்ளது.

விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் ரோஹித் சர்மாவையே இறக்கியிருக்க வேண்டும். ஆனால் இறக்கவில்லை ஏன்? இது ஒரு மிகப்பெரிய கேள்வி. அந்தத் தருணத்தில் அவரை இறக்கி அவுட் ஆகி விடக்கூடாது என்று பாதுகாப்பதற்குரிய பொக்கிஷ வீரரா என்ன ரோஹித் சர்மா? இல்லை இன்று வந்து அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எதற்காக அவருக்குப் பதிலாக பார்த்திவ் படேலை இறக்க வேண்டும்?

அதுவும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு சஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளபடியால் தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்த பிறகு, ஒரு கடும் நெருக்கடியான தருணத்தில், அதுவும் அவர் கேட்ச்களைக் கோட்டை விட்டு மனதளவில் மிகவும் பலவீனமாக இருக்கும் போது, சவால் அளிக்கும் பந்து வீச்சுக்கு எதிராக என்ன அடிப்படையில் பார்த்திவ் படேல் இறக்கப்படுகிறார் என்பதுதான் கேள்வி. தன் விக்கெட் கீப்பிங் சரியில்லை என்ற காரணத்தினால் தினேஷ் கார்த்திக் அழைக்கப்பட்டுள்ளார் என்று வேதனையுடன் இருக்கும் பார்த்திவ் படேலை இன்னும் மோசமாகச் சித்தரிக்க ஒரு நெருக்கடியான சூழலில் பேட்டிங்கில் இறக்கிவிடுவது உத்தி அல்ல அரசியல்.

இது உண்மையில் இரட்டை அராஜகப் போக்கு என்றே படுகிறது. காரணம் ஒன்று ரோஹித் சர்மா என்ற மண்குதிரையை பாதுகாப்பதுடன், பார்த்திவ் படேலுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும். இதைத்தான் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் பார்த்திவ் படேலுக்குச் செய்துள்ளனர். நிச்சயம் ரஹானே இருந்திருந்தால் அவரை இறக்கியிருப்பார்கள், பார்த்திவ் படேலை இறக்கியிருக்க மாட்டார்கள். அப்போது, ரஹானே சிறந்த வீரர்தானே, சவாலை சமாளிப்பார் என்று இறக்கினோம் என்றும் வீரர்களை நாங்கள் பாதுகாக்கிறோம், அவர்கள் திறமையை மதிக்கிறோம் வெற்றி தோல்வி பிரச்சினையல்ல என்று வானாளவிய பேட்டி ஒன்றை கொடுத்து அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்து விடுவார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல, தனக்கு அடுத்தபடியாக யார் போட்டியாளராக இருக்கிறாரோ அவரை எப்படியாவது எழும்பவிடாமல் செய்து விட வேண்டும் என்பதே மனித இயல்பு என்று வர்ணிக்கப்படும் அதிகார மோகம்.

ஏனெனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தரம்சலாவில் கடைசி டெஸ்ட் போட்டி நடக்கும் போது விராட் கோலியை காயத்துடன் ஆட பயிற்சியாளர் கும்ப்ளே அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது, ரஹானேவை கேப்டனாக நியமித்து ரஹானே போட்டியையும் வெற்றி பெற்று விட்டார். மேலும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் விராட் கோலியின் ஆக்ரோஷ அணுகுமுறைக்கும் ரஹானேயின் ஆக்ரோஷ அணுகுமுறைக்குமான வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி, கோலியின் கள சேஷ்டைகளை விட ரஹானேயின் ஆட்ட ரீதியான ஆக்ரோஷத்தை வரவேற்றிருந்தனர். இதையெல்லாம் கோலி கவனிக்காமலா இருந்திருப்பார்? இதன் தொடர்ச்சிதான் ‘வெளியில் உருவாக்கப்படும் கருத்துகளுக்கெல்லாம் நாங்கள் இசைய மாட்டோம்’ என்று ரஹானே தேர்வின்மை பற்றி பேட்டி கொடுத்தார் விராட் கோலி. இதே அராஜகப்போக்குதான் புவனேஷ்வர் குமாரை நீக்கியதிலும் வெளிப்பட்டது. ஒவ்வொன்றும் தனித்தனியானதல்ல, ஒவ்வொன்றுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

இந்நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கை அழைத்து விட்டு, ஏற்கெனவே நொந்து நூலாகியிருக்கும் பார்த்திவ் படேலை மேலும் மனதளவில் காயடிக்க நெருக்கடியான ஒரு தருணத்தில் இறக்கி விடுவது என்பது பார்த்திவ் படேலுக்கு உளவியல் ரீதியாகச் செய்யும் வன்முறையாகும்.

ஆகவே இவர்களுக்கு வெற்றி பெறுவது குறிக்கோளோ, நோக்கமோ அல்ல, கிரிக்கெட் வரலாற்று எழுத்தாளரும் உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்தவருமான ராமச்சந்திர குஹா கூறியது போல் ‘சூப்பர் ஸ்டார்’ கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும், இதில் இன்னும் விசேஷமாக மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோஹித் சர்மாவை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கமும் கலந்திருக்கலாம் என்ற ஐயமே எழுகிறது.

இது போன்ற அணுகுமுறை இருக்கும் வரை எந்தத் திறமையுடைய புது வீரர்களும் அணியில் வந்து முன்னேறி விட முடியாது. மணீஷ் பாண்டேயை, தினேஷ் கார்த்திக்கை ஒருநாள் போட்டிகளில் இப்படியாகச் செய்ததையும் நிரூபிக்க முடியும். ஷ்ரேயஸ் ஐயரை தூக்கிவிடுவதையும் இந்தப் பார்வையில் பார்க்க முடியும். அமித் மிஸ்ராவை காரணமில்லாமல் ஒதுக்கி, ரவீந்திர ஜடேஜாவைத் தூக்கிப் பிடிக்கும் போக்கையும், இன்னும் பலவற்றையும் இதே சட்டகத்தில் வைத்துப் பார்க்க முடியும். உண்மையில் இந்தத் தென் ஆப்பிர்க்க தொடருக்கு குல்தீப் யாதவ்வைத்தான் ஜடேஜாவுக்குப் பதிலாக தேர்வு செய்திருக்க வேண்டும். ஏன் தேர்வு செய்யவில்லை? தரம்சலாவில் வேகப்பந்துக்கு ஓரளவுக்குச் சாதகமான பிட்சில் முதல் நாளே 4 விக்கெட்டுகளை தன் அறிமுக டெஸ்டில் கைப்பற்றியது இந்திய வெற்றியைத் தீர்மானித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஹானேயை அணியில் எடுக்காமல் அதற்கு அபத்த வியாக்கியானம் அளித்தது, அபாரமாகப் பங்களிப்புச் செய்யும் புவனேஷ்வர் குமாரைக் காரணமில்லாமல் உட்கார வைத்து விட்டு, பிட்ச் பற்றி சரியான கணிப்பில்லாமல் கூடுதல் பவுன்ஸுக்காக இஷாந்த் ஷர்மாவை எடுத்தோம் என்பது, நேற்று ரோஹித் சர்மாவைப் பாதுகாக்க பார்த்திவ் படேலை நெருக்கடியான தருணத்தில் இறக்கி அவருக்கு உளவியல் ரீதியான நெருக்கடியைக் கொடுத்தது என்று விராட் கோலி, ரவிசாஸ்திரி அதிகார இணை பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் ஏராளம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x