Last Updated : 14 Oct, 2017 10:22 AM

 

Published : 14 Oct 2017 10:22 AM
Last Updated : 14 Oct 2017 10:22 AM

ருசியியல் சில குறிப்புகள் 39: கசப்பை ரசித்து ருசிப்பது ஓர் அனுபவம்!

கா

லம், கஷ்டகாலம். ஊர் உலகமெல்லாம் நிலவேம்புக் கஷாயத்தைக் குடித்துவிட்டு ‘உவ்வே உவ்வே’ என்று கசப்பின் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. படாத பாடுபட்டு ஒரு தம்ளர் நிலவேம்பு குடித்துவிட்டேன்; ‘எனக்கு இந்த ஜென்மத்தில் இனிமேல் டெங்கு வராதில்லையா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்கிற பிரகஸ்பதிகளைப் பார்க்கிறேன். ஆறுதலாக அவர்களுக்கு என்னவாவது சொல்லலாம்தான். ஆனால், ‘நிலவேம்பின் கசப்பு உலகத்தர கசப்புகளுள் ஒன்று' என்று சொன்னால் புரியுமா?

டெங்கு கிடக்கட்டும். எனக்கு அந்த நிலவேம்பின் கசப்பின் மீது அப்படியொரு ஈர்ப்பு. நமக்கு எளிதில் கிடைக்கும் வெறும் வேம்பிலோ, பாகற்காயிலோ உள்ள கசப்பைக் காட்டிலும் நிலவேம்பு கசப்பில் ஒரு கவித்துவம் ஒட்டிக்கொண்டிருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும். ஒரு கவர்ச்சிகரம். ருசி நரம்புகளின் மீது நர்த்தனமாடும் நாரீமணி அது. ஆடி முடித்து அரை மணி ஆன பின்பும் அரங்கம் அதிர்வதுபோல உணரச் செய்கிற ஆனந்தப் பெருந்தாண்டவம்!

ஆனால், ஏனோ நம்மில் பெரும்பாலானோருக்குக் கசப்பு பிடிப்பதில்லை. அநேகமாக யாரும் அதை விரும்புவதில்லை. அதை ஒரு சுவை என்று வகைப்படுத்தி மார்க்கெட் செய்து பார்த்தும் யாரும் மசியவில்லை. வேறு வழியில்லாத சூழலில் தலையெழுத்தே என்றுதான் கசப்பை உண்கிறோம். உணவானால் என்ன, வாழ்வானால் என்ன? நமக்கு எல்லாம் இனித்தாக வேண்டும்.

ஆனால், கசப்பை ரசித்து ருசிப்பது ஓர் அனுபவம்! விளையாட்டல்ல. அது தியானத்துக்குச் சமமான சங்கதி. சரேலென்று நரம்புகளுக்கு ஒரு புத்துணர்ச்சி தரத்தக்க ஒரே சுவை கசப்புதான் என்றால் நம்புவீர்களா? இனிப்பு திகட்டக்கூடியது. புளிப்பு கூச்சம் தரத்தக்கது. காரம் கண்ணீரைக் கொடுக்கும். இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். துவர்ப்பு ஒரு தத்தி. அதை விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை கசப்பு தான் ரசனைக்கு உகந்த சுவை. இல்லாவிட்டால் காலை எழுந்த தும் முதல் பானமாகக் காப்பி யைக் கொள்வோமா? கஃபெய்ன் தருகிற தாற்காலிகப் புத்துணர்ச்சியெல்லாம் பிறகு. அதனை வேறு எந்த வடிவத்திலாவது பெற்றுவிடலாம். காப்பி யின் உள்ளார்ந்த கசப்புச் சுவையில் தொடங்குவதுதான் ஒரு விடியலை அழகூட்டும். இதுவரை இதை நீங்கள் உணர்ந்திராவிட்டாலும் இதுவே உண்மை.

நான் சர்க்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில்கூட காப்பிக்கு அரை ஸ்பூனுக்கு மேல் சர்க்கரை சேர்க்க மாட்டேன். காப்பி என்றால் அடி நாக்கில் கசப்பு நிற்க வேண்டும். அருந்தி முடித்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தரம் சப்புக் கொட்டினால் அந்தக் கசப்பின் எச்சம் நெஞ்சில் இறங்க வேண்டும். அது ஓர் அனுபவம்; மகத்தான பேரனுபவம்! அரை ஸ்பூன் சர்க்கரை அதைக் கணிசமாகக் கெடுத்துவிடுகிறது என்பது புரிந்தபோது அதை அறவே நிறுத்தினேன். நேரடிச் சர்க்கரை இல்லாவிட்டாலும் பாலுக்குள் பரம்பொருளாக மறைந்திருக்கும் சர்க்கரையும் காப்பியின் புனிதத்துக்கு ஹானியுண்டாகுவதுதான் என்று தெரிந்தபோது அதையும் நிறுத்தினேன். இப்போதெல்லாம் என் காப்பி, கற்புள்ள காப்பி. கசப்பின் பூரணத்துவத்தை எய்திய காப்பி!

படு பயங்கர ஸ்டிராங்காக அரை டம்ளர் டிக்காஷன் எடுத்துக்கொள்ள வேண்டியது. அதில் காலே அரைக்கால் தம்ளர் வெந்நீரைச் சேர்த்தால் போதுமானது. இதுதான் காப்பி. உடனே எடுத்து அருந்திவிடாதீர்கள். இன்னும் இரண்டு காரியம் பாக்கி இருக்கிறது.

இந்தக் காப்பியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் பெருமாள் கோயில் தீர்த்தப்பொடி என்று கேட்டீர்களானால் சின்ன டப்பாவில் ஒரு வஸ்து கிடைக்கும். ஜாதிக்காய், ஏலக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட ஜகஜ்ஜால வாசனாதி திரவியங்களைச் சேர்த்து இடித்த ஒரு நூதனப் பொடி அது. இந்தப் பொடியில் ஓரிரு சிட்டிகை எடுத்து மேற்படி காப்பியில் போட்டு ஒரு ஆற்று ஆற்றினால் முடிந்தது.

இதுதான் சரியான காப்பி. காப்பியின் ஒரிஜினல் வாசனையும் இந்த வாசனைப் பொடியின் அசாத்திய மணமும் இணைந்து ஒரு நூதனமான மணத்தை அந்த பானத்துக்கு அளிக்கும். முன்னதாகச் சேர்த்திருக்கும் ஒரு சிட்டிகை உப்பானது, காப்பியின் இயல்பான மென் கசப்புக்குச் சூட்டுகிற மணி மகுடம். கொதிக்கக் கொதிக்க இந்தக் காப்பியை சொட்டுச் சொட்டாக ருசித்து அருந்துவது ஒரு மகத்தான அனுபவம். அருந்தி முடித்த கணத்தில் உடலும் மனமும் பெறும் புத்துணர்ச்சியை விவரிக்கவே முடியாது.

ஆனால், இந்த உலகில் ஒரு வருக்கும் இந்த ருசி தெரியாது. அண்டா பாலைக் கொட்டி, அரைக் கிலோ சர்க்கரையைக் கொட்டி காப்பியைக் கண்றாவியாக்கிவிடுவார்கள். அதற்குப் பேசாமல் எழுந்ததும் ஒரு பானை பாயசம் வைத்துக் குடித்துவிட்டுப் போய்விடலாம்.

காப்பியைப் போலவே நமது ரசனைக் குறைவால் ருசிபங்கம் கண்ட இன்னொரு பொருள் சாக்லேட். இயல்பில் சாக்லேட்டின் தாயான கோக்கோ காப்பிக் கொட்டையைப் போலவே மென் கசப்புச் சுவை கொண்டதுதான். கோக்கோவின் அபா ரமான மணமும் அந்த ஒரிஜினல் கசப்புச் சுவையும் நமது நாவை கவுரவப்படுத்துபவை. ஆனால், எங்கே விடுகிறோம்? சாக்லெட் என்றாலே சர்க்கரைப் பாளம்தான்.

ஒருமுறை மூணார் சென்றிருந்தபோது அங்கே 80 பர்சண்ட் டார்க் சாக்லேட், 85 பர்சன்ட் டார்க் சாக்லேட் என்று நம்பர் குறித்த சாக்லேட்களைப் பார்த்தேன்.

‘நூறு சதவீத டார்க் சாக்லேட் என்பது இங்கே கிடையாது சார்’ என்று கடைக்காரர்கள் சொன்னார்கள். அதாவது பத்து பதினைந்து சதவீதத்துக்காவது சர்க்கரை சேர்த்தே தீருவார்கள். இல்லாவிட்டால் ஜனங்கள் வாங்க மாட்டார்கள் என்பது அவர்களுடைய லாஜிக்.

எனக்கென்னவோ, அவர்கள் நூறு சதவீத டார்க் சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து, மக்கள் ஒருமுறை ருசி பார்த்துவிட்டால் அதன்பின் சர்க்கரை போட்ட சாக்லேட்டுகளின் பக்கம்கூடத் திரும்பமாட்டார்கள் என்று தீர்மானமாகத் தோன்றியது. ஏனென்றால், 80 சதவீத டார்க் சாக்லேட்டை நான் அங்கே உண்டு பார்த்தேன். மெல்லிய அசட் டுத் தித்திப்பைத் தாண்டியும் அதன் வாளிப்பான கசப்புச் செழுமை கிறங்கடிக்கக் கூடியதாகவே இருந் தது.

ஒரு விஷயம். இந்த கோக்கோ கசப்பு என்பது நிலவேம்புக் கசப்பைப் போன்றதல்ல. காப்பியின் கசப்பு போன்றதுகூட இல்லை. ஒரு வகை யில் இது கசப்பே கூட இல்லை என்று சொல்லிவிடுவேன். அமெரிக்கா வில் இருந்து சமீபத்தில் இங்கே வந்திருந்த என் நண்பர் சிவராம் ஜெகதீசன் எனக்காகப் பிரத்தியேகமாக 100 சதவீத சாக்லேட் பவுடர் வாங்கி வந்திருந்தார். அதாவது சர்க்கரை சேர்மானமே இல்லாத பரிசுத்த கோக்கோ. அதை வெண்ணெயுடன் சேர்த்துக்கலந்து ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் டார்க் சாக்லேட் தயார்.

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. ஜம்மென்று இரண்டு ஸ்பூன் அந்தப் பொடியை வெந்நீரில் போட்டு அருந்திப் பார்த்தேன். பிரமாதமான சாக்லேட் பானம்! அடி நாக்குக்கும் மேல் தொண்டைக்கும் நடுவே ஒரு சிறு கசப்புப் பிரளயத்தை உண்டாக்கி, கணப் பொழுதில் அந்தச் சுவையின் மீது ஒரு மோக வெறியையே கிளப்பிவிடக்கூடிய பானமாக இருந்தது. பின்பொரு சமயம் அதை பானமாகக் கூட ஆக்காமல் வெறுமனே இரண்டு ஸ்பூன் பொடியாக அள்ளி எடுத்து உண்டு பார்த்தேன். அது இன்னும் பிரமாதமாக இருந்தது. சாக்லேட்டின் மென்மை உங்களுக்குத் தெரியும். அதன் இயல்பான கசப்புச் சுவையை, அந்த இயல்பான மென்மையுடன் சேர்த்து ருசிப்பது ஒரு பெரும் அனுபவம்.

தேவை, கசப்பை ரசிக்கும் மனம். இது இயல்பாக வராது. நமது வளர்ப்பு அப்படி. சொல்லித்தரப்பட்டிருப்பவை அப்படி. பழக்கத்தின் மூலம்தான் இந்த நிலையை அடைய முடியும். ஆனால் பழகிவிட்டால் கசப்பின் ருசிக்கு இனிப்பானது கால் தூசு பெறாது என்று தோன்றிவிடும்!

- ருசிக்கலாம்...

எண்ணங்களைப் பகிர:

writerpara@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x